விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -10. Ethics and Values
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
EtEthics and Values
செல்வத்தின் பயன்
ஹைதராபாதிலுள்ள ஒரு சுங்கத்துறை பெண் உயர் அதிகாரியின் வீட்டில் சிபிஐ 1990 ன் இறுதியில் சோதனையிட்டது. வருமானத்திற்கு அதிகமான ஆதாயத்தை அவர் சேர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் கிட்டின. எலலாவற்றையும் விட அவர் வீட்டு பீரோ லாக்கரில் சுமார் இரண்டு கோடி ரூபாய் கரென்சி நோட்டுகள் சிக்கின.
கர்நாடகாவைச் சேர்ந்த சட்டசபை மெம்பரான ஒரு தொழிலதிபரை அக்கிரம சுரங்கம் தோண்டிய குற்றத்திற்காக சிபிஐ கைது செய்து ரிமாண்டுக்கு அனுப்பியது. அவரை பெயிலில் விடுதலை செய்வதற்கு ஏழு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் மீது ஒரு வழக்கறிஞரைக் கூட சிபியி கைது செய்தது.
இப்படிப்பட்ட குற்றங்கள் பல உள்ளன. அதற்கு மாறாக இருப்பவர்களும் உள்ளார்கள். ஒரு ஐபிஎஸ் அதிகாரி, ஆந்திரபிரதேசில் நீண்டகாலம் பணி புரிந்தார். அவர் மாவட்டங்களுக்குச் சென்றால் தன் பலகாரம், உணவு தன் செலவிலேயே இருக்கவேண்டுமென்று பிடிவாதமாக இருப்பார். என்றுமே தன் கீழ் வேலை செய்பவர்களைத தனக்காக செலவு செய்ய அனுமதித்ததில்லை. மாவட்டங்களில் கலெக்டராக பணி புரிந்த போதும் ரெவின்யூ ஊழியர்களை தன் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியதில்லை. மத்திய அரசில் பணி புரிந்த போதும் அதே போல் இருந்தார்.
2010 அக்டோபரில் ஹைதராபாதில் அவர் காலமானபோது பல தன்னார்வ அமைப்பினர் வந்து இறுதிச் சடங்கில் பங்கு கொண்டு அஞ்சலி செலுத்தினர். அனைத்தையும் விட விஜயவாடா, காகிநாடா போன்ற இடங்களில் மக்கள் சொந்த காசை செலவு செய்து அவருக்கு சிலை நிறுவினர். அவர் நேர்மையாக வாழ்ந்ததுதான் இறந்த பின்னும் அத்தனை தூரம் மக்களின் மனதில் இடம் பிடித்ததற்குக் காரணம்.
கொத்தடிமை நிர்மூல சட்டத்தை அமல்படுத்தியது, மனிதக் கழிவுகளை மனிதர் அகற்றும் முறையை ஒழித்தது, ஏஜென்சியில் வசிக்கும் காட்டுவாசிகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது போன்ற அசாதாரண செயல்களை முன்னின்று ஏற்று நடத்திய அரசாங்க சேவகர் அவர். சிவில் சர்வென்ட் மக்களுக்காக வாழ வேண்டும் என்பது அவருடைய வாழ்க்கை லட்சியம் அவர் பெயர் எஸ்ஆர் சங்கரன்.
கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்காக குறுக்கு வழிகளில் நுழைந்து உறவினர், நண்பர், சேவகர் அனைவரும் தம் ஊழல் குறித்து தமக்குப் பின்னால் கதை கதையாகப் பேசிக் கொண்டால்… அது உயர்ந்த வாழ்வா? ஊழல்காரரின் வாரிசு என்ற முத்திரையை தன் வருங்கால சந்ததிக்கு விட்டுச் செல்வது வம்ச பரம்பரையை நிலைநாட்டுவதாகுமா? அல்லது இறந்தபின் இப்படிப்பட்ட சான்றோர் மீண்டும் மீண்டும் பிறந்து வர வேண்டும் என்னும்படியாக வாழ்வது உண்மையான வாழ்வா? வாரிசுகள் கூட பெருமைப்படும்படியாக கர்வமாக தலை நிமிர்ந்து வாழும்படி செய்வதே பெருமையான வாழ்க்கை.
அனைவருக்கும் முன்னுதாரணமாக…:-
அரசியலில் இருந்து, தான் சம்பாதித்ததெல்லாம் மக்களுக்காக செலவு செய்த அரசியல் தலைவர் ட்ங்குடூரி பிரகாசம் பந்துலு. 1904 ல் லண்டனில் பாரிஸ்டர் படிப்பிற்காகச் சென்றார். 1907 ல் மதராஸ் ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பிராக்டிஸ் தொடங்கினார். தர்மத்தைக் காப்பவராக பெயர் பெற்றார். சம்பாதித்ததை எல்லாம் விடுதலைப் போராட்டத்திற்காகவும் சமுதாய நலனுக்காகவும் செலவு செய்தார். முதலமைச்சராக பொறுப்பேற்றபோதும் மிகச் சாமானியனைப் போல் வாழ்ந்தார். வாழ்வின் இறுதியில் ஏழ்மையை மகிழ்ச்சியோடு ஏற்று அனுபவித்தார்.
தர்மத்தோடு செல்வம் சேர்த்து கோடை வள்ளலாக பெயர் பெற்ற ஜி. புல்லாரெட்டி, விஸ்வஹிந்து பரிஷத்தின் தேசிய தலைவர். பாக்கியநகரில் அவர் நிறுவிய புல்லாரெட்டி ஸ்வீட்ஸ் மூலம் இவர் பிரபலமாக அறியப்பட்டார். அண்மைக்காலம் வரை நம் கண் முன் நடமாடிய இந்த சான்றோர் செல்வத்தின் மீது மோகத்தால் பணம் சம்பாதிக்கவில்லை. எண்ணற்ற தர்மச் செயல்களுக்கு தன் செல்வத்தைப் பகிர்ந்தார். கல்விக் கூடங்களை நிறுவினார். ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் மூலம் தார்மீக, சேவை செயல்களுக்காக நிரந்தர தொண்டாற்றுவதற்கு வழியமைத்தார்.
நம் சாஸ்திரங்கள் எப்போதும் செல்வம் சேர்ப்பதை மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. ‘அர்த்தம், காமம் இரண்டையும் தர்மத்தோடு சம்பாதித்து ஆனந்தமாக அனுபவி!’ என்று அறிவுறுத்துகின்றன சனாதன தர்ம சாத்திரங்கள். அதனால்தான் அர்த்தத்தையும் காமத்தையும் தர்மத்திற்கும் மோட்சத்திற்கும் நடுவில் கட்டிப்போட்டர்கள் நம் ரிஷிகள்.
ந்யாயோபார்சித வித்தேன கர்தவ்யம் ஹ்யாத்மக்ஷணம் !
அன்யாயேன து யோ ஜீவேத் சர்வகர்ம பஹிஷ்க்ருத: !!
(பராசர ஸ்மிருதி -12-43)
பொருள்:- நியாயமாக சம்பாதித்த செல்வத்தால் தன்னையும் தன் குடும்பத்தையும் போஷித்துக் கொள்ள வேண்டும் அநியாயமாக சம்பாதித்த செல்வத்தைக் கொண்டு யார் வாழ்கிறாரோ அவரை சமுதாயம் ஒதுக்கி விடுகிறது.
செல்வம் என்றால் வெறும் பணம் என்று எண்ண வேண்டாம். கோ செல்வம் கூட தனமே. பூர்வ காலத்தில் பசுகக்ளையே செல்வமாக எண்ணினர். சேவகர்களும் செல்வமே. இதைத் தவிர விருந்தினர், நண்பர்… இவ்வாறு பல செல்வங்கள் உள்ளன. தலைவன் அனைத்து செல்வமும் பெற்று செழிப்பாக விளங்க வேண்டும்.
“குரு: சிஷ்ய கணேன பாசதே – சஞ்ஜன பந்துமித்ர வர்கேன பாஸதே” எத்தனை அதிகம் பேரோடு தான் அடையாளம் காட்டப்படுவாரோ அத்தனை உயர்ந்தவர்.
நிறுவனப் பணிகள், அரசாங்கத்தின் மூலம் மக்களுக்காக செய்யவேண்டிய நலத் திட்டங்கள் அனைத்தும் வருவாயோடு முடியிடப்பட்டவையே. செல்வம் இல்லாவிட்டால் இவையனைத்தும் வெயில் காலத்து வாய்க்கால் போல் வறண்டு போகும் என்கிறது மகாபாப்ரதம்.
தர்ம: காமஸ்ச ஸ்வர்கஸ்ச ஹர்ஷ: குரோத: ஸ்ருதும் தம: !
அர்தாதேதானி சர்வாணி ப்ரவர்தந்தே நராதிப: !!
பொருள்:- ராஜா! தர்மம் செய்ய நினைத்தாலும் ஆசைகள் நிறைவேற வேண்டுமென்றாலும் சொர்க்க சுகங்களை அனுபவிக்க வேண்டுமென்றாலும் மகிழ்ச்சியை வெளிபடுத்த நினைத்தாலும் கோபத்தைக் காட்ட நினைத்தாலும் வேதம் படிக்க நினைத்தாலும் பணத்தால்தான் சாத்தியம். பணம் இல்லாவிட்டால் தர்ம காரியங்களோ புண்ணியச் செயல்களோ செய்ய முடியாது.
சிவாஜியின் நெருங்கிய தோழர் ராமச்சந்திர பந்த் வர்ணித்த ‘சதுர்த்த ராஜ’ சாசனத்தில் ராஜ்யத்திற்கு பணத்தின் தேவையை இவ்வாறு கூறுகிறார்: “வரவு செலவு இரண்டையும் கணக்கிட்டு அதற்குத் தகுந்தாற்போல தன் கஜானாவை வளர்த்துக்கொண்டே வர வேண்டும். நிதித் துறையே அரசாங்கத்தின் ஆயுள். தேவைக்கேற்ப செல்வம் இருந்தால் கஷ்டங்களிலிருந்து மீள முடியும். இந்த உண்மையை கவனத்தில் கொண்டு, அரசாள்பவன் நிரந்தரம் அரசை காத்து வர வேண்டும்”
சிவாஜி ஸ்வராஜ்ஜியத்தை தொடங்கிய போது அவனிடம் கஜானா என்பதே இல்லை. ஆனால் அவன் இந்த உலகை விட்டுச் செல்லும் போது சிவாஜியின் கஜானாவில் ஒன்பது கோடி ரூபாய் இருந்தது. அந்தக் காலத்திற்கு அது மிகப் பெரிய விஷயம். சிவாஜியின் பரிபாலனை சாமர்த்தியத்திற்கு இது உரைகல்.
மக்களை திருப்திபடுத்துவது, ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவது, வெளிப்படைத் தன்மையை நிறுவுவது போன்ற மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியாளர்களின் குணத்தையும் ஆளுமையையும் கணக்கிடலாம்.
எது சுத்தம்?
சுத்தம் என்றால் நம்மில் பலர் தூய்மையாக மூன்று வேளையும் சோப்பால் தேய்த்துக் குளிப்பது என்று நினைப்போம். ஆனால் மனுஸ்மிருதி இபப்டி உரைக்கிறது:-
சர்வேஷாமபி சௌசானாம் அர்த சௌச்சம் பரம் ஸ்ம்ருதம்!
யோர்தே சுசிர் ஸ ஸுசி: ந ம்ருதாதி ஸுசி: சஸுசி: !!
(மனுஸ்மிருதி -5-106)
பொருள்:- அனைத்து தூய்மைகளிலும் பண விஷயத்தில் சுத்தமாக இருப்பதே உயர்ந்த தூய்மை. யார் பண விவகாரங்களில் சுத்தமாக இருப்பரோ அதாவது ஊழல் புரியாதவரோ அவரே உண்மையில் தூய்மையானவர். அப்படியின்றி நீர், மண் முதலானவற்றால் உடலைத் தேய்த்துக் குளிப்பவர் அல்ல.
செல்வத் தூய்மைக்கு சத்ரபதி சிவாஜி முக்கியத்துவம் அளித்தான். ஒரு முறை தன் படையை தணிக்கை செய்த போது ஒரு அதிகாரி போரில் காயமடைந்த ஒரு குதிரை பார்வையிழந்ததென்று அதனை விற்பதற்கு அனுமதி கேட்டார். சிவாஜி அதற்கு அனுமதி அளித்தான்.
சில மாதங்கள் கழித்து அந்த அதிகாரி வேறொரு வேலை நிமித்தம் சிவாஜியை சந்தித்தார். அவரை பார்த்தவுடனே சிவாஜி, “அந்த குதிரையை விற்று விட்டீரா?” என்று கேட்டான். “ஆம்!” என்று அவர் கூறியவுடன், “அந்த தனத்தை அரசாங்க கஜானாவில் செலுத்தி விட்டீரா?” என்ற மீண்டும் வினவினான்.
இவ்வாறு நிதி துறையில் மிகச்சிறிய விஷயங்களைக் கூட கண்காணிப்பது சிவாஜியின் சிறப்பம்சம். அதனால்தான் சத்ரபதி சிவாஜி பொருளாதார ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக வரலாற்றில் நிலைபெற்றான்.
ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்கவேண்டிய பல சாமானிய தர்மங்கள் நம் பண்டைய நூல்களில் ஏராளம் தென்படுகின்றன. அதைவிட நேர்மையும் தர்மமும் வேறென்ன இருக்க முடியும்?
உண்மை இப்படி இருக்கையில் பாரதியர்களுக்கு ‘எதிக்ஸ்’ பற்றி அதிகம் சிரத்தை இருப்பதாகத் தெரியவில்லை என்று அங்கங்கு எழுதிய சில மேல்நாட்டவரின் விமரிசனங்கள் எத்தனை நகைப்புக்குரியவை, எத்தனை அறியாமையோடு கூடியவை, அஞ்ஞான வெளிப்பாடு என்பதை கூறத் தேவையில்லை.
சுபம்!
விஜயபதம்-வேதமொழியின் வெற்றி வழிகள் (10): செல்வத்தின் பயன்! News First Appeared in Dhinasari