மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார். அவர் எது நடந்தாலும் ஸ்ரீ விஷ்ணு செயல் என எண்ணி கொள்பவர்.
வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார். வழி நெடுக., திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டுமே என்று ஸ்ரீ விஷ்ணுவை வேண்டிக் கொண்டே வந்தார்.
பசி எடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து., எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார்.
மனதிற்குள் இந்த உணவைக் கொடுத்த விஷ்ணுக்கு விவசாயி நன்றி சொன்னார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது.
இரக்கப்பட்ட விவசாயி ஒரு ரொட்டியை அதனிடம் வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய்., மீண்டும் ஆவலுடன் பார்த்தது.
இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார். ஒரு நாள் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும்… என் பசிக்கு பகவான் ஸ்ரீ விஷ்ணு பொறுப்பு..என்று மனதில் நினைத்து அந்த இடம் விட்டு நகர்ந்தார்.
மனதிற்குள் அரசர் அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால்., பிரஜையான நாமும்., நம்மால் முடிந்ததை செய்வதுதானே முறை., என தனக்கு தானே சமாதானம் சொல்லிப்
பசியை பொறுத்துக் கொண்டு தலைநகரை அடைந்தார்.
அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். பிறகு மன்னனை சந்தித்து தான் வந்த விஷயத்தைச் சொன்னார்.
மன்னர் போஜன் விவசாயியிடம்., ”என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே., நீங்கள் ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள். அதை நிறுக்கும் தராசு என்னிடம் இருக்கிறது. அது எந்த அளவு எடை காட்டுகிறதோ., அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் மன்னர்.
மன்னரே! மன்னிக்கவும்…”தர்மம் செய்யும் அளவு பணம் என்னிடம் இருந்தால்., பணம் வேண்டி உங்களிடம் ஏன் நான் வரப் போகிறேன்..? வழியில் பசித்திருந்த நாய்க்கு உணவளித்தேன்.
அதற்கு ஈடாகத்தான் உங்கள் சத்திரத்தில் நான் சாப்பிட்டு விட்டேன். எனவே நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை. ”என்று அடக்கமாக சொன்னார் விவசாயி.
உங்கள் பசியை பொறுத்து கொண்டு நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே.” “என்று போஜன் தராசை கையில் எடுத்தார்.
ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும்., மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தார் மன்னர்.
கஜனாவில் இருந்த தங்கம் முழுதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.
வியந்த மன்னன், ”உங்களை பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்..?” என்றார்.
மன்னா நான் ஒரு ஏழை விவசாயி. ஸ்ரீ விஷ்ணு மட்டுமே எனக்கு தெரியும் வேறு எதுவும் என்னைப் பற்றி சொல்லுமளவு ஏதுமில்லை. ” என்றார் பணிவுடன்.
அப்போது தர்ம தேவதை அங்கு தோன்றினாள்.
“போஜனே..! தராசில் நிறுத்துப் பார்த்து அளவிடுவது அல்ல தர்மம். கொடுத்தவரின் மனமே அதனது அளவுகோல். இவர் மனம் மிகப் பெரியது. பகட்டுக்காக தர்மம் செய்யாமல்., ஆத்மார்த்தமாக., வேண்டிய உயிருக்கு தன்னிடம் இருப்பதையெல்லாம்., ஸ்ரீ விஷ்ணுவை எண்ணி அவரது உணவை கொடுத்து விட்டார்.
அதனால் நீ எவ்வளவு பொன் வைத்தாலும்., தராசு முள் அப்படியேதான் இருக்கும். ஆகவே அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ., அதை கேட்டு., கொடுத்தால் போதுமானது.” “என்றாள்.
இதை ஏற்ற மன்னன் விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழி அனுப்பினார்.
விவசாயி பகவான் ஸ்ரீ விஷ்ணுவுக்கும், மன்னனுக்கும் நன்றி சொல்லி தன் மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார்.
மன்னா! எப்பொழுதும் ஆத்மார்த்த மனதுடன் உன் தர்மத்தைச் செய். பலன்தானாக வரும். அதுவே உலகின் மிகச் சிறந்த தர்மமாகும் என்றாள்…தர்ம தேவதை
உலகின் தலைசிறந்த தர்மம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.