e0af8d-e0ae95e0ae9fe0aeb2e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 28
நினது திருவடி திருப்புகழ்
கடல் நீரைக் குடித்த கணபதி
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
ஒரு காலத்தில் மஹாப் பிரளயம் ஏற்பட்டு உலகெங்கும் கடல் பொங்கி எழுந்தது. அப்போதுவிநாயகப் பெருமான் தமது தும்பிக்கையினால் கடல் நீரை வற்றக் குடித்து உலகத்தை உய்வித்தார். அதனால் அவருக்கு பிரளயங் காத்த பிள்ளையார் என்ற பேர் உண்டாயிற்று.
வளர்கை குழைபிடி தொப்பண குட்டு
இரு கரங்களையும் மாற்றித் தோடணிந்த காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் பிள்ளையார் திருமுன் இடவேண்டும். சிரசில் குட்டிக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு தன்மையுங் கணபதிக்கே உரியன. இது குறித்த இரண்டு கதைகள் உள்ளன. முதல் கதை கஜமுகாசுரன் பற்றியது; இன்னொன்று அகத்தியர் பற்றிய கதை.
கஜமுகாசுரனும் தோப்புக்கரணமும்
கஜமுகாசுரன் மிக்க வலிமையுடையவன்; சிவபெருமானை வேண்டிப் பெருந்தவம் புரிந்து, அவரிடம் விலங்குகளாலும், பூதங்களாலும், தேவர்களாலும், மூவர்களாலும்,அத்திரங்களாலும், சத்திரங்களாலும்,கனலாலும், புனலாலும், பிறவற்றாலும் மரணமில்லாமல் இருக்கவேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற அவன் பெரும் கர்வம் கொண்டவனான். திருமால், அயன், வானவர்கள் யாவரையும் அழைத்துத் தண்டித்து காலையும் மாலையும் தன் முன்னின்று இரு செவிகளையும் பிடித்துக் கொண்டு ஆயிரம் தோப்புக் கரணம் போடுவித்தான்.
கஜமுகனால் துன்புற்ற அமரர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். உமாதேவியாரும் சிவபெருமானும் கயிலை மலையில் உள்ள மந்திர சித்திர சாலைக்குச் சென்றனர். அங்கு எழுதியுள்ள ஏழு கோடி மந்திரங்களுக்குள் சமஷ்டி பிரணவம், வியஷ்டி பிரணவம் என்ற இரு பிரணவங்களையும் உமையம்மையாரும் சிவமூர்த்தியும் பார்த்தருளினார்கள். அந்த அருட் பார்வையால் இரண்டு பிரணவங்களும் ஒன்றுபட அவற்றின் இடையிலிருந்து பிரணவ வடிவுடன் விநாயகப் பெருமான் அவதரித்தனர். விநாயகர் அவதரித்த வரலாறு இவ்வாறாகவும் கூறப்படுகிறது.
பிரணவம் என்பதற்கு வேறு பெயர்கள் குடிலை ஒங்காரம், தனிமொழி என்பன. அது “ஒம்” என்பதுவே. அதுவே மூலமானது. “ஒம்” எனும் சொல் வலிமையும்,ஆற்றலையும் கொடுக்க வல்லது. “’ஒம்” என்ற பிரணவம் இல்லாத மந்திரம் சுவரில்லாத சித்திரம் போன்றதாகும். “ஒம்” என்ற சொல் எல்லா வித தெய்வங்களையும், தேவதைகளையும் வரவேற்கும் தன்மை படைத்தது.பிரணவம் இரு வகைப்படும். 1, சமஷ்டி பிரணவம், 2, வியஷ்டி பிரணவம். சமஷ்டி பிரணவம் என்பது தொகுத்துக் கூறுவது அது “ஒம்” என்பதாகும்.வியஷ்டி பிரணவம் என்பது வகுத்துக் கூறுவது அது “ஓம்” என்றபிரணவத்தின்பகுதிகளானஅ-உ-ம என்ற மூன்று ஒலிகளைபகுத்துக்கூறுவது.
சிவபெருமான் கஜமுகனை வதம் செய்யுமாறு கணபதிக்குக் கட்டளையிட்டருளினார். பரிவாரங்கள் சூழ விநாயகர் சென்று கஜமுகனுடைய சேனைகளை எல்லாம் கொன்றார். கஜமுகன் எல்லா ஆயுதங்களாலும் இறவாத தன்மையைக் கண்டு தம்முடைய ஒரு கொம்பை முறித்து ஏவினார். அது சென்று கஜமுகனைப் பிளந்தது. அவன் பெருச்சாளி வடிவு கொண்டு எதிர்த்தனன். விநாயகப் பெருமான், அவன் மீது கருணை மழைப் பொழிந்து அவனுடையத் தீமையை யகற்றி, வாகனமாகக் கொண்டருளினார்.
மால், அயன்முதலிய வானவர்கள் துன்பந்தவிர்ந்து இன்பம் அடைந்து விநாயகமூர்த்தியை வணங்கி நின்றார்கள். “வானவர்களே! என்ன வரம் வேண்டும்?” என்று விநாயகர் கேட்டருளினார். தேவர்கள் “இடர் தீர்த்த இபமுகத்து எந்தையே! பன்னெடுங் காலமாக கஜமுகனுக்கு முன் நாங்கள் தோப்புக் கரணம் இட்டோம். அவனை அழித்து அருள் புரிந்தீர். இனி தங்கள் திருமுன் நாங்கள் தோப்புக்கரணம் போடுவோம். அதுபோல் தோப்புக்கரணம் போட்டவர்கள் யாவரேயாயினும் இடர் தீர்த்து ஆண்டருள் புரியும்” என்று வேண்டினார்கள். கணநாதர் “உங்கள் விருப்பம்போல்செய்யுங்கள். ஆயிரம் தோப்புக்கரணம் போட வேண்டாம். மூன்று முறையே போதும். அங்ஙனம் புரிந்தார்களது இடர் நீங்கும்” என்று வரமளித்தனர். அதனால் விநாயகப் பெருமான் திருமுன் தோப்புக்கரணம் போடவேண்டும்.
தோப்புக் கரணம் போடுவது பற்றிய இன்னொரு கதையும் உண்டு. இக்கதையே பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒரு கதை.
அகத்தியர் காவிரி நதியைச் சிவபெருமானிடம் பெற்றுக் கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென்திசையை நோக்கிப் புறப்பட்டார். குடகு மலையில் இருந்து சிவபூஜை செய்துகொண்டிருந்தார். சீர்காழியில் திருநந்தனவனம் வைத்து சிவபூஜை செய்து கொண்டிருந்தான் இந்திரன். மழையின்றிப் பூங்கா வாடியது. நாரதமுனிவர் இந்திரனை அணுகிக் காவிரியைத் தருவிக்குமாறு கூறினார். இந்திரன் சுந்தர விநாயகரை வழிபட்டு வேண்டினான்.
விநாயகர் காகத்தின் உருவெடுத்துச் சென்று கமண்டலத்தில் அமர்ந்து, அதனைக் கவிழ்த்தார். அது கண்ட அகத்தியர் சீறிப் பாய்ந்தார். விநாயகர் ஓர் அந்தணச் சிறுவனாக ஓடினார். அகத்தியர் இரு கரங்களாலும் குட்டுவதற்காக ஓடி நெருங்கினார். விநாயகர் ஐங்கரக் கடவுளாகக் காட்சியளித்தார்.. அகத்தியர் அஞ்சி அவரைக் குட்ட ஓங்கிய கரங்களால் தனது சென்னியில் ஓங்கிப் பலமுறைக் குட்டிக்கொண்டனர்.
விநாயகர் அவர் கரத்தைப் பற்றி அருள்புரிந்து, “அகத்தியனே, என்ன வரம் வேண்டும்? கேள்” என்றனர். அகத்தியர் “ஐங்கரக் கடவுளே! தேவரீருடைய சந்நிதியில் சிரத்தில் குட்டிக் கொண்டு வழிபட்டோர்க்கு அறிவு நலம் பெருக வேண்டும்” என்று வரம் கேட்டனர். அவ்வண்ணமே அருள் புரிந்தார். ஆகவே விநாயகப் பெருமானுடைய சந்நிதியில் தோப்புக்கரணமிட்டுக் குட்டிக் கொண்டவர் இஷ்ட சித்திகள் பெறுவர்.
இந்தக்கதைகள் மட்டுமல்லாமல் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதற்கு ஒரு மருத்துவக் காரணமும் உண்டு. அறிவின் இருப்பிடம் புருவ நடுவில் உள்ளதாக அறிஞர் கருதுவர். ஆதலால், தலையில் குட்டிக் கொள்வதனால் அறிவு விளக்கமுறும். அறிவு வடிவம் கணபதியாதலால் அவர் திரு உருவிற்கு முன்னால் இவ்வாறு செய்து வணங்குதல் நலம் பயக்கும். .
திருப்புகழ் கதைகள்: கடல் நீரைக் குடித்த கணபதி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.