e0af8de0ae9f-e0aeb5e0af86e0ae99e0af8de0ae95e0aeaee0aebee0aeaee0af8de0aeaae0aebe-e0ae86e0aea8.jpg" style="display: block; margin: 1em auto">


தரிகொண்ட வெங்கமாம்பா :
ஆந்திராவின் ஆவுடை அக்காள்
– ராஜி ரகுநாதன் –
நம் தமிழ்நாட்டின் “ஆவுடை அக்காள்” சரித்திரம் போலவே ஆந்திரப் பிரதேசத்தின் “தரிகொண்ட வெங்கமாம்பா” சரித்திரமும் புகழ் பெற்ற பக்தி சரித்திரம்.
ஆவுடை அக்காளைப் போலவே இளம் விதவையாக சமூகத்தின் சம்பிரதாயக் கொடுமைகளுக்கு ஆளாகி படாத பாடு பட்டவர்.
வெங்கமாம்பா சிறந்த கவிஞர் மட்டுமல்ல, 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உயர்ந்த பக்தை. திருமலை வேங்கடேசப் பெருமாள் மீது அளவற்ற பக்தி கொண்டவர்.
திருமலையில் கோயில் கொண்டு நின்றுள்ள ஸ்ரீவேங்கடேஸ்வரப் பெருமாள், தினமும் காலையில் பக்த கவி ‘அன்னமய்யா’வின் ‘மேலு கொலுபு’ (துயிலெழுப்பு) பாடலுடன் துயிலெழுகிறார். ‘தரிகொண்ட வெங்கமாம்பாவின் ‘முத்யால ஆரத்தி’ யுடன் துயில் கொள்கிறார். தினமும் இரவு இந்த ஆரத்தியின் பின் அன்றைய தரிசனம் நிறைவு பெறுகிறது.
சித்தூர் மாவட்டம் ‘வாயல்பாடு’ கிராமத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள ‘தரிகொண்ட’ என்னும் கிராமத்தில், பிராமண குலத்தில், கி.பி.1730ல் ‘கானால கிருஷ்ணய்யா’, ‘மங்கம்மா’ தம்பதிகளுக்கு ஸ்ரீவேங்கடேஸ்வர பெருமாள் அருளால் ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி அன்று பிறந்தவர் வெங்கமாம்பா. நல்ல பழக்க வழக்கங்களோடும் தத்துவ சிந்தனையோடும் பக்தி பாவனையோடும் வளர்க்கப்பட்டாள்.
குழந்தை பிராயத்திலிருந்தே ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமியின் மேல் அவள் கொண்டிருந்த தீராத பக்தியைப் புரிந்து கொள்ளாத கிராமத்தார் அவளை புத்தி சுவாதீனமில்லாதவளாகக் கருதத் தொடங்கினர்.

பால்ய விவாகம் வழக்கத்திலிருந்த அக்காலத்தில் அவளுக்கு விரைவில் திருமணத்தை முடித்துவிட பெற்றோரும் உறவினர்களும் தீர்மானித்தனர். ஆனால் வெங்கமாம்பா, “நான் ஸ்ரீவேங்கடேஸ்வர பெருமாளுக்கு வாழ்க்கைப்பட்டவள். வேறு ஒருவரை கணவனாக ஏற்க இயலாது” என்று மறுத்தாள். ஆனால் அவளுடைய தீவிர மறுப்புக்கிடையிலும், நல்ல குணவானான “இன்ஜேடி வேங்கடாசலபதி” என்னும் இளைஞனுடன் அவளுக்கு திருமணம் நடத்தினர்.
புகுந்த வீட்டில் கணவனுடன் தாம்பத்தியம் நடத்த மறுத்த வெங்கமாம்பாவை பிறந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு, தம் மகனுக்கு வேறொரு பெண் பார்த்து திருமணம் நடத்த நினைத்தனர் கணவனின் பெற்றோர். ஆனால் வெங்கமாம்பாவை ஒரு தேவதையாகப் பார்த்த வேங்கடாசலபதி அதற்கு இசையவில்லை. தன் கணவனின் மறுமணத்தை தீர்மானமாக மறுத்தாள் வெங்கமாம்பா. வேங்கடாசலபதி விரைவில் மரணமடைவான் என்பது வெங்கமாம்பாவுக்குத் தெரிந்திருந்தது. அதே போல் மிகக் குறுகிய காலத்திலேயே அவன் பாம்பு தீண்டி மரணமடைந்தான்.
வெங்கமாம்பா கிராமத்தாரின் எதிர்ப்பை மீறி, கணவன் இறந்ததும் சாதாரணமாக விதவைகள் விலக்க வேண்டிய மங்கலப் பொருட்களை விலக்க மறுத்தாள். ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமியைத் தவிர தன் கணவராக வேறு எவரையும் மனத்தால் வரிக்க வில்லையாதலால் தான் நித்திய சுமங்கலி என்று அறிவுறுத்தினாள். தலை முடியை மழிக்காமல், குங்குமம் தரித்தவளாக வண்ணப் புடவை கட்டி வளைய வந்தாள். ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் காரணமானாள்.
ஆனால் அவற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் எப்போதும் போல் தன் பக்தி பரவசத்திலேயே நாட்களை கழித்தாள். செய்வதறியாது திகைத்தனர் வெங்கமாம்பாவின் பெற்றோர். தரிகொண்ட கிராமத்திலிருந்த ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி ஆலயத்தில் நாள் முழுவதும் தியானத்தில் ஆழ்ந்திருக்கும் வெங்கமாம்பாவிற்கு நல்ல ஆன்மீக குருவிடம் ஆன்மீக பயிற்சி அளிக்க அவள் தந்தையார் தீர்மானித்தார்.
அவளை, அருகிலுள்ள மதனப்பல்லி என்ற ஊரில் வசித்த ஆன்மீக யோக வித்யையில் சித்தி பெற்ற சுப்பிரமணிய சாஸ்திரி என்ற ராஜ யோகியிடம் யோகப் பயிற்சி கற்க ஏற்பாடு செய்தார். அவரிடம் வெங்கமாம்பா மந்திர தீக்ஷைபெற்று ராஜ யோக இரகசியங்களைத் கற்றுத் தேர்ந்தாள்.
குருவின் அறிவுரைப்படி யோக சாதனை செய்து வருகையில் ஆகாயத்தில் அக்ஷர வரிசைகள் அவள் கண்களுக்குப புலப்படத் தொடங்கின. இந்த அனுபூதியை அறிந்த சுப்ரமணிய சாஸ்திரி “இது அக்ஷர சாக்ஷாத்காரம் என்னும் அரிதான யோக சித்தி” என்று கூறி, யோக சாதனையோடு கூட கவிதைகளையும் புனையும்படி அவளுக்கு எடுத்துரைத்தார்.

பள்ளி சென்று கல்வி பயிலாதவளான வெங்கமாம்பா, சந்தஸுகளோ, செய்யுள் இலக்கணமோ அறியாதவளானாலும் ஆசுவாக கீர்த்தனைகளும் கிருதிகளும் இயற்றத் தொடங்கினாள். தரிகொண்ட கிராமத்தில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம சுவாமியை துதித்து “தரிகொண்ட நருசிம்ஹா! தயாபயோநிதி!” என்ற ஈற்றடி மகுடத்தோடு 103 செய்யுள்களை இயற்றி “தரிகொண்ட நரசிம்ஹ சதகம்” பாடினாள்.
மேலும், அச்சிறு வயதிலேயே நருசிம்ஹ விலாசக் கதை என்ற யக்ஷ கானத்தையும், சிவ நாடகம், பால கிருஷ்ண நாடகம் என்ற யக்ஷ கானங்களையும், பாகவதத்திலுள்ள கபில, தேவாஹுதி சம்வாதத்தை ஆதாரமாகக் கொண்ட ‘ராஜ யோகாம்ருத சாரம்’ என்ற குறள் வெண்பாக்களாலான அரிதான வேதாந்த காவியத்தையும் தரிகொண்ட கிராமத்திலிருந்தபோது இயற்றினாள்.
தரிகொண்டவில் இருந்த போது இயற்றிய இறுதி யக்ஷ கானம், பால கிருஷ்ண நாடகம் என்பது. இது பாகவதம் தசம ஸ்கந்தத்திலுள்ள ராசக் கிரீடையை உணர்ந்து இயற்றிய உயர்ந்த காவியம்.

மகா யோகினியாக விளங்கிய வெங்கமாம்பா கூறிய வாக்குகள் பலிக்கத் தொடங்கின. மக்கள் அவளைப் பார்த்து பயந்து விலக ஆரம்பித்தனர். சிலர் அவளை மதித்து வணங்கினர். இதனால் பொறாமை கொண்ட அந்தணர்கள் சிலர் பலவந்தமாக அவள் தலையை முண்டனம் செய்விக்க முயன்று தோல்வி கண்டனர். அதன் பின், மதிப்பு மிக்க புஷ்பகிரி சங்கராச்சாரியார் அவ்விடம் வருகை தந்த போது, தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைத்து வெங்கமாம்பாவை வரவழைத்தனர்.
ஒரு திரையின் மறு பக்கத்திலிருந்து அந்த மதாச்சாரியார் வெங்கமம்பாவைப் பார்த்தார். வெங்கமாம்பா அவரை வணங்கவில்லை. ஊரார் அவள் செயலை அகம்பாவம் என்று பழித்தனர். காஷாயம் தரித்த ஆசாரிய சுவாமிகளும் அவளை அது குறித்து வினவினார். வெங்கமாம்பா, அவரைத் தன் பீடத்தை விட்டு எழுந்திருந்து சற்று விலகி நிற்குமாறு கூறினாள்.
அவரும் அவ்வாறே செய்ய, வெங்கமாம்பா அவரை வணங்காமல், அப்பீடத்தை நோக்கி இரு கை கூப்பி வணங்கினாள். உடனே அனைவரும் திடுக்கிடும்படியாக அப்பீடம் உடைந்து சிதறியது. ஸ்வாமிகள் அவள் மகிமை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கோரி திருப்பிச் சென்றார். போகும்முன் சம்பிரதாய முறைப்படி விதவைக் கோலம் பூணுமாறு அவளிடம் அறிவுரை கூறினார். வெங்கமாம்பா கேட்டாள், “ஒரு முறை தலையை மழித்தால் மீண்டும் வளராதிருக்குமா?” என்று .
அவரிடம் அதற்கு பதிலில்லை. ஆனாலும் அந்தணர்கள் அவள் கைகளைப் பின் புறம் கட்டி அவள் தலையை மொட்டை அடித்தனர். அப்படிச் செய்வித்த கிராம முனுசீபுக்கும், நாவிதருக்கும் கை கால் விளங்காமல் போனதுதான் மிச்சம்.
வெங்கமாம்பா ஒரு முறை கோவில் தீர்த்த்தை ஒரு தீண்டதகாதவனுக்கு அளித்து அவன் தாகத்தை தீர்த்தாள். அது கிராமத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. சமூகத்தின் கட்டுபாடுகளுக்கு எதிராக அவள் புரட்சி செய்வதாக காரணம் கூறி தரிகொண்ட கிராம மக்கள் கிராமத்தை விட்டு அவளை விலக்கி வைத்தனர்.
கிராமத்தின் அருகிலிருந்த ஒரு மலையைச் சென்றடைந்த வெங்கமாம்பா அங்கிருந்த ஒரு குகையில் தவம் செய்யத் துவங்கினாள். அக்குகை பல காலம் முன்பு துர்வாச முனிவர் தவம் செய்த குகை. ஆனால் தீய மக்கள் மீண்டும் அவளுக்கு தொல்லை செய்ய விரும்பி அக்குகை வாயிலில் நெருப்பு வைத்து கொளுத்தினர். அவள் இறந்து விட்டதாகக் கருதி மகிழ்ந்தனர்.
ஆனால் கடவுள் அருளால் யோக சித்தி மூலமாக உயிர் தப்பி, திருமலைக் காடுகளைச் சென்றடைந்து, திருமலை ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாளைச் சரணடைந்தாள். திருமலையில் உள்ளோர் வெங்கமாம்பாவின் பக்தியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தனர். திருமலையில் அந்தணர்களாலும், அன்னமய்யாவின் வம்சத்தாராலும் வெங்கமாம்பா அன்புடன் வரவேற்கப்பட்டார். அங்கிருந்தபடி மேலும் 13 காவியங்களைப் படைத்தார்.
விஷ்ணு பாரிஜாதம் என்னும் யக்ஷ கானம் அவர் திருமலையில் புனைந்த முதல் காவியம். ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமியையே பாரிஜாதமாக பாவித்து பாடிய கவிதைகள் இவை.
அன்னமாச்சாரியாரின் மனைவி திருமலாம்பா என்ற ‘திம்மக்கா’, ‘சுபத்ரா கல்யாணம்’ என்ற திருமணப் பாட்டு பாடியுள்ளார். அது வெங்கமம்பாவுக்கு மிகவும் பிரியமான காவியம். அதே போல் ‘ரமா பரிணயம்’ என்ற குறள் வெண்பாக் காவியத்தை இயற்றினார்.

திருமலையில் வசித்து வந்த வெங்கமம்பாவின் ஆரத்தி பாடல்களை தினமும் கேட்க விரும்பிய ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி, அவரை இரவு ஆரத்தி முடிந்து கதவு மூடப்பட்ட பின் வரவழைத்து அவளது பாடல்களைக் கேட்டு ஆனந்தமடைந்து அவரது ஆரத்தியை ஏற்பது வழக்கமாயிற்று. ஆரத்தி முடிந்ததும் வெங்கமாம்பா சுவாமியின் பாதங்களில் சில முத்துக்களைச் சமர்பிப்பது வழக்கம்.
தினமும் காலையில் கோவில் கதவைத் திறக்கும் அர்ச்சகர்கள் முத்துக்களை பகவானின் பாதங்களில் கண்டு ஆச்சர்யமுற்றனர். விசாரித்துப் பார்க்கையில் இது வெங்கமாம்பாவின் வேலை என்பது அறிய வந்தது. அதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர்கள் ஒரு விதவைப் பெண் சுவாமி சந்நிதிக்கு வந்து துளசி மாலை அணிவித்து ஆரத்தி எடுப்பது கூடாது என்று கூறி அவரை திருமலையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள தும்புரு தீர்த்தத்திற்கு அருகில் உள்ள குகைக்கு விரட்டி விட்டனர்.
ஆனால் அந்த குகையிலிருந்து பகவான் அவளுக்காக அமைத்துக் கொடுத்த சுரங்கப் பாதை வழியாக தினமும் இரவு சுவாமி சந்நிதிக்கு வந்து பாடல்கள் பாடி ஆரத்தி எடுப்பதை வெங்கமாம்பா தொடர்ந்து வந்தார். தும்புரு தீர்த்தத்தில் வசித்த போது அங்கிருந்த செஞ்சு இனத்தவரின் வாழ்க்கை முறையையும் மொழியையும் ஆதாரமாகக் கொண்டு ‘செஞ்சு நாடக யக்ஷ கானம்’ என்ற காவியத்தைப் புனைந்தார்.
இவ்வாறு 6 ஆண்டுகள் கழிந்தன. இதனை அறிய வந்த அர்ச்சகர்கள் தங்கள் தவறை உணர்ந்து வெங்கமாம்பாவிடம் மன்னிப்பு வேண்டி, மீண்டும் அவரை ஊருக்குள் தங்க அனுமதித்ததோடு, தினமும் அவருக்கு ஏகாந்த சேவைக்கும், இரவு ஆரத்திக்கும் அனுமதி அளித்தனர்.
திருமலைக்கு திரும்பி வந்த பின் ஸ்ரீவேங்கடேஸ்வரனையே ஸ்ரீ கிருஷ்ணனாக பாவித்து பக்தி பரவசத்தோடு “ஸ்ரீவேங்கடேச்வர கிருஷ்ண மஞ்சரி’ யை இயற்றினார்.
வெங்கமாம்பா திருமலையில் அழகிய துளசி தோட்டம் வளர்த்தார். அந்த பிருந்தாவனத்தில் வசித்தபடி எழுதிய முதல் பாடல் ருக்மிணி நாடகம். அதன் பின் கோபி நாடகம் (கொல்லா கலாபம்), ஸ்ரீ பாகவதம், ஸ்ரீவேங்கடாசல மாகாத்மியம், அஷ்டாங்க யோக சாரம், ஜல க்ரீடா விலாசம், முக்தி காந்தா விலாசம், வாசிஷ்ட ராமாயணம், தத்துவ கீர்த்தனைகள் போன்றவற்றை எழுதினார். வேதாந்த இரகசியங்களை யக்ஷ கான முறையில் சாகித்திய உலகிற்கு அளித்த வெங்கமாம்பாவின் சிறப்பு அளவிடற்கரியது.
ஒரு முறை ஸ்ரீவேங்கடேஸ்வர பெருமாளுடைய ஏகாந்த சேவையின் போது வெங்கமாம்பா கற்பூர ஹாரத்தி சமர்பிக்கையில் சுவாமி தசாவதாரஙகளோடு கூடிய விராட் ஸ்வரூபத்தை தன் பக்தைக்கு காட்டியருளினார். அச்சமயத்தில் தன் கற்பூர ஹாரதி “முத்யால ஹாரத்தி”யாக சாஸ்வதமாக தொடர வேண்டும் என்று அருளும்படி சுவாமியை வேண்டினார்.
பக்த சுலபனான பகவான் அதனை விரும்பி ஏற்று, தினமும் இரவு ஏகாந்த சேவையின் போது இன்றளவும் வெங்கமாம்பாவின் ஆரத்தி பாட்டிற்கு செவி சாய்த்தபடி ஹம்ச தூளிகா மஞ்சத்தில் பவளிம்பு சேவை சாதிக்கிறார்.
வெங்கமாம்பாவின் வழிதோன்றலாக வெங்கமாம்பாவால் தத்து எடுக்கப்பட்டவரின் சந்ததியினர் இன்றும் சில முத்துக்களை கடவுளுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர்.
“ஸ்ரீபன்னகாத்ரி வர சிகராக்ர வாஸுனகு,
பாபாந்தகார கன பாஸ்கருனகூ
ஆ பராத்பருனகு நித்ய அனபாயினியைன
மா தல்லி அலமேலு மங்கம்மகு
ஜெய மங்களம் நித்ய சுப மங்களம்!
ஜெய மங்களம் நித்ய சுப மங்களம்!!”
என்ற அவருடைய ஆரத்திப் பாடல் ‘வெங்கமாம்பா முத்யால ஆரத்தி’ என்று பிரசித்தி பெற்றுள்ளது.
தான் வளர்த்த துளசி பிருந்தாவனத்திலேயே வெங்கமாம்பா சமாதி அடைந்தார் . வெங்கமாம்பாவின் சமாதியைச் சுற்றி தற்போது ஒரு பள்ளிக் கூடம் கட்டப்பட்டுள்ளது.
திருமலையில் தரிகொண்ட வெங்கமாம்பாவின் பெயரில் அன்னதான சத்திரத்தை திருமலா திருப்பதி தேவஸ்தானம் அமைத்து அங்கு வெங்கமாம்பாவின் சிலையை நிறுவியுள்ளது.
2009 ல் ‘மாத்ரு ஸ்ரீவெங்கமாம்பா சரித்திரம்’ திரு துரைசாமி ராஜு என்பவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதில் நடிகை மீனா வெங்கமாம்பாவாகத் திறம்பட நடித்துள்ளார்.
திரு எம்.எம். கீரவாணி, வெங்கமாம்பாவின் கிருதிகளுக்கு சிறப்பாக இசை அமைத்து படத்தில் சேர்த்துள்ளார். வெங்கமாம்பா ஆரத்தியை முழுமையாக இத்திரைப்படத்தில் கேட்க முடிகிறது. ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல் இத்திரைப் படத்தை தொடராக ஒளி பரப்பியது.
தரிகொண்ட வெங்கமாம்பா :- ஆந்திராவின் ஆவுடை அக்காள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.