e0af8d-e0aea4e0af86e0aeafe0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 11
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
தெய்வானை தத்துவம்
முத்தைத்தரு பத்தித் திருநகை திருப்புகழில் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்த கதை, பத்துத் தலை தத்தக் கணை தொடுத்த கதை, ஒற்றைக் கிரி மத்தைப் பொருத ஒரு கதை, பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகிப் போன கதை, பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப் புயல் பற்றிய கதை, குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவலச் செய்த கதை என பல கதைகள் உள்ளன. இத் திருப்புகழின் முதல் சரணமான
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
என்னும் சரணத்தில் தெய்வானை பற்றிய தத்துவத்தை அருணகிரியார் விளக்குகிறார்.
இவ்வரிகளின் பொருளாவது – வீட்டுப்பேற்றை அளிக்கும், வரிசையாகப் பற்களை உடையவளும், யானையால் வளர்க்கப் பட்டவளுமாகிய தேவசேனைக்கு இறைவனே, சத்தி வேலைத் தாங்கிய சரவணனே, முத்திக்கு ஒரு வித்தே – எனப் பாடுகின்றார்.
குரு வடிவாய் நின்ற குமரனை வழிபடும் முறையை வகை பெறக் காட்ட ஈசனார் வலம் வந்தார். (இது அடுத்த வரியில் வருகிறது). இதனைக் கண்ட கிரியாசக்தி, அன்னை உமையம்மை புனித ஒலி எழ புன்னகை செய்தனள். அரிய அவ்வொலி சொந்த பந்தங்களை தொலைப்பது, அன்பு வாழ்வை அருளுவது. அருளைப் பாலிப்பது. அருமையான இந்த உதவியை அறிந்து, முத்தை தரு பத்தி திரு நகை அத்தி என்று முன்னுரை கூறினார் சிவனார்.
முத்தம் முத்தி இரண்டும் விடுதலை எனும் பொருள் தருபவை. அம்முத்திக்கு வழி அன்பு. அந்த அன்பை அளிப்பது பேரருள். நலமெல்லாம் விளைவிக்கும் அந் நகை நலத்தை, சிவபெருமான் இப்படி பாடி மகிழ்ந்தார். இச்சொற்களை,திரு+தரும்+நகை, பத்தி+தரும்+நகை, முத்தி+தரும்+நகை என்று கொண்டு கூட்டி பொருள் கொள்ளப் பெறவேண்டும்.
பத்தி என்றால் வரிசை; திரு என்றால் அழகு; நகை என்றால் பல் எனக் கொண்டு முத்துக்களை வரிசையாகக் கோர்த்து வைத்தது போன்று பற்களை உடைய தேவகுஞ்சரி மணவாளா எனப் பொருள் கொளல் பொது நிலை. ஆயினும் சிவ மரபுப்படி அருளும், அன்பும், வீடும் தரும் நகை புரி தேவி மணவாளா என்று பொருள் சிறப்பு நிலை.
குருவான உன் திருவுருவில் கரந்து கலந்து இருக்கிறார் யோக தேவியார். – தேவியோடு இருந்தே யோகம் செய்வானை – எனகிறது தேவாரம்.
முருகப் பெருமானின் இடப் பாகத்தில் இருப்பது கிரியா சக்தி (தெய்வானைத்தேவியார்). வலப்பாகத்தில் இருப்பது இச்சா சக்தி (வள்ளியம்மைத்தேவியார்). கரத்தில் இருப்பது ஞானா சக்தி (வேல்).
முத்தி தரும் முதலாளியாதலின் முருகப் பெருமானை முத்திக்கு ஒரு வித்து என்று பாடுவது மட்டுமே சரியானதாக இருக்கும்.
திருப்புகழ் கதைகள்: தெய்வானை தத்துவம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.