682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

மதுரை அழகர் கோவில் அருகே பொய்கைக்கரைப்பட்டியில் காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
மதுரை அழகர்கோவில் அருகே, பொய்கைக்கரைப் பட்டியில் காஞ்சி மகா பெரியவர் கோயில் கட்டுமான திருப்பணிகள் தொடங்கின.
மதுரை அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் ‘மகா பெரியவா’ என பக்தர்களால் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு பொய்கைக் கரைப்பட்டியில் கோயில் கட்டப்பட உள்ளது. மலை அடிவாரத்தில், அழகர்கோவில் தெப்பக்குளம் எதிரே அரசுப் பள்ளியை அடுத்துள்ள சிட்டி ஃபால்ஸ் என்ற இடத்தில் இயற்கை எழில் சூழ இக்கோயில் அமைய உள்ளது. ஏற்கெனவே, வாஸ்து, பூர்வாங்க பூஜைகள் முடிக்கப்பட்ட நிலையில், அரசின் தடையில்லா சான்று உட்பட அனுமதிகள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆலயம் கட்டுமானத் திருப்பணி நேற்று தொடங்கியது.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். காலையில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான 11 வேத விற்பன்னர்கள் பூமி நிர்மாண ஸ்தாபிதம், தேவதா பிரார்த்தனை, மஹன்யாசம், ருத்ர பாராயணம், அர்ச்சனை, விசேஷ ஹோமம், பூஜை மற்றும் அபிஷேகங்கள் செய்தனர்.
நிகழ்ச்சிக்கு, ஆடிட்டர் சேது மாதவா தலைமை தாங்கினார்.
மதுரை மங்கையற்கரசி மில்ஸ் சேர்மன் பாகனேரி மு கண்ணப்ப செட்டியார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நந்தினி ரியல் எஸ்டேட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.ஆர். பிரபு, மகா பெரியவா குரூப்ஸ் சேர்மன் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.நிகழ்வில் தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட தலைவர் ரவி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் குமார் வெங்கடேசன், வழக்கறிஞர் கார்த்திக், சோழவந்தான் செல்வராணி இண்டேன் கேஸ் ஏஜென்சி உரிமையாளர் மணிகண்டன், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், எழுத்தாளர் ஆதவன், ஸ்தபதி பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீ மகா பெரியவா படம், ஸ்படிக மாலை, புத்தகம், விபூதி பிரசாதம், அழகர்கோயில் தோசை மற்றும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டன.
திருப்பணி செலவுகளுக்கு மகா பெரியவா பக்தர்கள் நன்கொடை வழங்கலாம் என்றும், ஒரு லட்ச ரூபாய் வழங்குவோரின் பெயர் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள். மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்திருந்தார்.