பரிபூரண சரணாகதி
‘அதிகம் பேசாதவன்தான் அறிவாளி. இது ராமாயணத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது
விபீஷணன் ராவணனிடம், ‘அண்ணா, ராமனோடு போரிடாதே! அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடு‘ என எவ்வளவோ கெஞ்சுகிறார்.
சும்மா கெஞ்சவில்லை. ஹிரண்ய வதத்தைப் பற்றிய கதையை ராவணனுக்கு எடுத்துக் கூறுகிறார்.
என்னது இது? ராமாயணத்தில் எங்கே இருந்து வந்தது இந்த ஹிரண்ய வதம் என நினைக்கலாம்.
ஆனால், நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது கம்ப ராமாயணத்தைப் பற்றி.
கம்பரோட குல தெய்வம் நரசிம்மர்தான்.
அதனால்தான் கம்பர் ராமாயணத்தை எழுதி முடித்தவுடன் நேராக ஸ்ரீரங்கத்துக்குச் சென்று அங்கே இருக்கும் நரசிம்மர் சன்னிதியில் அதை அரங்கேற்றம் செய்தார்.
அதற்கான சாட்சி இன்றளவும் அங்கே இருக்கிறது.
ஆக, ஹிரண்ய வதத்தை ராவணனுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக நாராயணனின் பெருமைகளை – ராமராக அவதரித்திருக்கும் நாராயணனின் பெருமைகளை, எடுத்துரைக்கிறார் விபீஷணர்.
‘அண்ணா, யாகம் வளர்ப்பதால் வரக்கூடிய பலனை நாராயணா என்கிற ஒரு நாமமே தரும் என்பது ப்ரஹ்லாதன் கூற்று.
நாம் சொல்லும் சொல்லில் இருக்கிறார், சின்ன சின்ன பொருட்களிலும் இருக்கிறார் நாராயணன் என்பதும் அவனின் கூற்று.
நரசிம்மர் ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு, ப்ரஹ்லாதனுக்கு என்ன வாக்கு தந்தார் தெரியுமா?
உன் வம்சத்தில் இனி யாரையும் சம்ஹாரம் செய்யவே மாட்டேன்’ என்று.
அந்த வாக்கை அவர் அப்படியே காப்பாற்றியும் வந்தார்.
நாராயண நாமம் அப்படி ப்ரஹ்லாதனையும், அவனது வம்சத்தையும் சேர்த்தே காப்பாற்றி இருக்கிறது.’
“நாராயண நாமத்துக்கே அவ்வளவு மஹிமை என்றால், இதோ உன் எதிரே வந்திருக்கும் நாராயணர் அவதாரமான ராமருக்கு எவ்வளவு பராக்ரமம் இருக்கும் என எண்ணிப்பார்.
ராமரோடு வீணாக சண்டை செய்யாதே! விட்டு விடு‘’ என மீண்டும் மீண்டும் விபீஷணர் சொல்கிறார்.
அதனால் கோபம் கொண்ட ராவணன், ‘உன் உடம்பு தான் இங்கே இருக்கிறது.
உன் உள்ளம் எல்லாம் ராமனிடம்தான் இருக்கிறது.
உன்னைக் கொன்று விடுவேன்’ என கர்ஜிக்க, ‘உன் கையால் இறப்பதை விட ராகவனிடமே சென்று விடுகிறேன்‘ என்றபடியே போகிறார் விபீஷணர்.
அவர் சென்ற நேரம் இரவு நேரம்.
இரவு நேரத்தில் செல்வது சரியில்லை என்று எண்ணிய விபீஷணர், தனுஷ் கோடியிலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை ராமர் இருக்கும் இடம் நோக்கி செல்கிறார்.
அங்கே சுக்ரீவன் எதிர்ப்பட, அவரிடம் தாம் ராமரிடம் சரணாகதி செய்ய வந்திருப்பதாக விபீஷணர் தெரிவிக்கிறார்.
சுக்ரீவன் ராமரிடம் சென்று, ‘அண்ணனே வேண்டாம் எனச் சொல்லி விபீஷணன் வந்திருக்கிறான்.
அதனால் அவனைச் சேர்க்கக் கூடாது’ என்கிறான்.
சாம்பன் ராமரிடம், ‘அவன் எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாலும் சேர்க்காதீர்கள்’ என்கிறான்.
நீலன், ‘விரோதியைச் சேர்க்காதீர்கள்‘ என்கிறான்.
அதுவரை பேசாமல் இருந்த ஹனுமார், ஒருத்தன் நல்லவனா, கெட்டவனா என்பதை அவன் முகமே சொல்லும்.
ஆக, முகம் பார்த்துத்தான் எதையும் முடிவு செய்ய வேண்டும்.
ராமா, நீ கடல் வெள்ளம் மாதிரி; விபீஷணன் கிணற்றுத் தண்ணீர் மாதிரி.
கிணற்று நீர் என்றாவது கடல் பரப்பைத் தாங்க முடியுமா?
இலங்கையில் நான் பார்த்தவரையில், இவன் ஒருவன் வீடுதான் அந்தணர் வீடு போலவே இருந்தது.
இவன் ஒருவன்தான் நல்லவன்.
ஆபத்தில் வந்திருக்கிறான். அடைக்கலம் என்று வந்த இவனை எப்படி ஏற்க முடியாது என்று மறுப்பது? அது சரியாக இருக்காது என்கிறார்.
உடனே ராமர், ‘ஆம் மாருதி சொன்னது சரிதான். விபீஷணனைச் சேர்த்துக் கொள்வதால் தோல்வி வந்தாலும் சரி, அவனைச் சேர்த்துக் கொள்வோம்.
நம்மிடம் அடைக்கலம் என்று வந்துவிட்டவரை கைவிடக் கூடாது.
சுக்ரீவா! நீ போய் அவனை அழைத்து வா‘ என்கிறார்.
அங்கேதான் ஆரம்பமானது விபீஷணர் சரணாகதி.
அதாவது, சரணாகதி என்றால் பரிபூர்ணமாக அவனிடம் அடைக்கலமாகிவிட வேண்டும்.
அப்போது, பகவானின் அருள் பிரவாகம் நம்மைச் சூழ்ந்து காத்து நிற்கும்.