e0af8d-e0ae9ae0ae99e0af8de0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 129
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
முலை முகம் – திருச்செந்தூர்
சங்க கால நக்கீரர்
சங்க காலத்தில் வாழந்த நக்கீரர் காலம், கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என தற்காலத்தில் தெரிய வருகிறது. இவர், ‘தலையாலங்கானத்துப் போர்’ பற்றி கூறுகிறார். போரில் வெற்றி கண்டவன், ‘இரண்டாம் நெடுஞ்செழியன்’ எனப்பட்ட பாண்டியன். இவனை எதிர்த்த வேளிர்கள், எழினி, திதியன், எருமையூரன் இருங்கோவேண்மான், பொருநன் ஆகியவர்கள்.
பேரரசருள், யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை போன்றோர். மேலும், இப்போர் பற்றி கூறியவர்கள், நக்கீரர், மாங்குடி மருதனார் ஆகியோர். இவர்களால் பாடப்பட்ட சிறு, பெருங்காப்பியங்கள் எனப்பட்ட நெடுநல்வாடையும், மதுரைக்காஞ்சியும் ஆகும். தன் காலத்தில் நடந்த இப்போரினை, ‘தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம்’ என வருணிக்கிறார் குடபுலவியனார். இப்போர் நடைபெற்ற போது, பாண்டியன் சிறுவனாக இருந்ததாக, இடைக்குன்றூர்கிழார் பாடுகிறார். மேலும் “எதிரிகள் எத்தனை பேர் பிழைப்பார்களோ” என, பாண்டியனை புகழ்ந்து பாடுகிறார், இடைக்குன்றூர்கிழார்.
சிலப்பதிகாரத்தில், சேரன் செங்குட்டுவனுக்குப் பிறகு, ‘யானைகட் சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை’, இளங்கோவடிகளால் புகழப்படுகிறார். அதேபோன்று சோழர்களில் கரிகாலனுக்குப் பிறகு, ‘கிள்ளிவளவன்’, இளங்கோவால் பாடப்படுகிறார். நக்கீரர், தன் வயதை ஒத்த செங்குட்டுவனைப் பாடவில்லை; ஆனால் , ‘சில வருடங்கள் சேரனை விட வயது முதிர்ந்த’ கரிகாலனைப் பாடியுள்ளார். சேரர்களில், யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும், சோழர்களில், கிள்ளி வளவனையும் பாடுகிறார். இதன் மூலம், இளங்கோவடிகளும் , நக்கீரரும் சமகாலத்தவர்கள் என தெளிவாகத் தெரிகிறது. மாமூலனார் (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) காலத்தின் மூலம் நக்கீரர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு.
சங்ககால வரலாற்றுச் செய்திகள் பலவற்றை, இவர், தம் அகத்திணைப் பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். இவரது உள்ளுறை உவமங்களில், வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்லாது, மக்களின் பண்பாடுகளும், ஆளி (சிங்கம்), வாவல், வரால்மீன் போன்ற உயிரினங்களும் சுட்டப்படுகின்றன.
சங்க கால கடவுளர்கள் பற்றி இவரது பாடல்களில் நாம் அறியலாம். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில், அவனது அருளைப் பெறலாம் என்று தம் திருமுருகாற்றுப்படையில் குறிப்பிட்டுள்ளார். புறநானூற்றின் ஐம்பத்தியாறாவது பாடலில் சிவன், அனுமன், பலராமன், திருமால், கந்தன் ஆகிய கடவுளர்களைப் பற்றியும், மகலிர் உயர்பலி தூவுவது பற்றியும், தினை தூவி வழிபடுவது பற்றியும் குறிப்பிடுகிறார்.
செழியன், கடுந்தேர்ச் செழியன், பாண்டியன் நன்மாறன், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், கூடல் அரசன், வழுதி, கரிகாலன், கிள்ளி வளவன், உறையூர்ச் சோழன் தித்தன், கருவூர் அரசன் கோதை, வான வரம்பன், அன்னி, திதியன், திரையன், முசுண்டை, புலவர் கபிலர், குடிமக்களாகிய உமணர், கொங்கர், மழவர், வடுகர், சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளலாகிய அருமன், தழும்பன் பாரி, பெருஞ்சாத்தன் ஆகியவர்களைப் பற்றி இவர் தம்முடைய பாடல்களில் பாடியுள்ளார்.
மேலும் வரலாற்று நிகழ்ச்சிகளான ஆலங்கானப் போர், கூடல் போர், பறம்புமலை முற்றுகை, முசிறிப் போர், பசும்பூண் பாண்டியன் கொங்கரை ஓட்டி அவரது நாடுகள் பலவற்றைத் தன் கூடல் நாட்டோடு சேர்த்துக்கொண்டான் என்ற செய்தி, திதியனோடு போரிட்டு அன்னி மாண்டான் என்ற செய்தி ஆகியவை பற்றி நக்கீரர் குறிப்பிடுகிறார்.
அயிரியாறு என்ற ஆறு பற்றியும், ஆலங்கானம், இடையாறு, ஊணூர் மருங்கூர்ப் பட்டினம், எருமை நன்னாடு, கருவூர், கூடல், சிறுகுடி, பவத்திரி பெருங்குளம், மதுரை, வேங்கட வைப்பு (வேங்கட நாடு), வேம்பி, தொண்டி முசிறி ஆகிய ஊர்கள் பற்றிய நிலவியல் செய்திகளையும் நக்கீரர் கூறுகிறார்.
தாய்வீட்டை விட்டுவிட்டுக் கணவனுடன் செல்லும் மகள் தன் சிலம்பைக் கழற்றித் தாய்வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்வாள் என்ற செய்தி, கார்த்திகைத் திருநாள், சுவர்ப் பாவை காழ் பற்றிய செய்தி, பச்சை நெல்லில் அவல் இடிப்பர், புலிப்பல் தாலிப் புதல்வர் ஆகிய மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் சங்கப் பாடல்களில் இவர் பாடியுள்ளார்.
திருப்புகழ் கதைகள்: சங்க கால நக்கீரர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.