e0af8d-e0aeaee0af81e0aeaae0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழில் காணப்படும் கதைகள் (பகுதி 6)
– கு.வை.பாலசுப்பிரணியன் –
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அதுபொடி செய்த அதிதீரா
முப்புரம் எரித்த சிவனின் ரதத்தின்
அச்சினைப் பொடி செய்த கதை
தன்னை நினையாத காரணத்தால் முப்புரம் எரித்த காலத்தில் சிவபெருமான் ஏறியத் தேரின் அச்சை இற்றுப் போமாறு செய்த மகா தீரர் நம்முடைய விநாயகப் பெருமான். இங்ஙனம் அச்சு இற்ற இடம் இப்போதும் அச்சிறுப்பாக்கம் என வழங்கப்படுகிறது. இத்தலம் தேவாரப்பாடல் பெற்றது.
இறைவன் தீமை செய்யும் அசுரர்களிடமிருந்து இவ்வுலகத்தைக் காக்கும் பொருட்டு அவர்களை வதம் செய்கிறார். தாராகசுரன் புதல்வர்கள் வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்னும் மூவர். இவர்கள் பிரம்மனிடம் பொன், வெள்ளி, இரும்பாலான மூன்று பறக்கும் நகரங்களைப் பெற்றனர்.
மேலும், மூன்று நகரங்களையும் ஒரே பாணத்தால் அழிக்க வல்லவனால் மட்டுமே தங்களுக்கு மரணம் நேர வேண்டுமென்ற வரத்தையும் பெற்றனர். அசுரர்கள் திரிபுரம் வழியாகத் தாம் நினைத்த இடங்களுக்குச் சென்று தேவர்களையும் முனிவர்களையும் துன்பப் படுத்தினர். தேவர்கள் சிவனை வேண்டி நின்றனர்.
சிவன் பூமியைத் தேராகவும், திங்களும் ஞாயிறும் தேர் சக்கரங்களாகவும், நான்மறையைக் குதிரைகளாகவும், நான்முகனைத் தேரோட்டியாகவும், மேருமலையை வில்லாகவும், ஆதிசேடனை நாணாகவும், அக்கினியை முனையாக உடைய அம்பாகவும், பிற அமரர்களைப் போர் கருவிகளாகவும் அமைத்துக் கொண்டு போர் செய்யப் புறப்பட்டார்.
இறைவன் ஏறியவுடனே தேரின் அச்சு முறிந்தது. விக்னம் தீர்க்கும் விநாயகனை வணங்காததனால் தான் இவ்வாறு ஏற்பட்டது என்பதனை உணர்ந்து சிவபெருமான் விநாயகரை வணங்கினார்.
தங்கள் உதவி இல்லாவிடில்இறைவர் போரிடச் செல்ல இயலாது என அமரர்கள் தத்தம் வல்லமையை நினைத்துச் செருக்குக் கொண்டனர். அதனை உணர்ந்த சிவன், அவர்களது உதவியை ஏற்காமல் தானேஒரு புன்சிரிப்புச் செய்து அரக்கர் அனைவரையும் முப்புரங்களோடு எரித்தார்.
ஏற்றார் மூதூ ரெழில்நகை யெரியின் வீழ்வித் தாங்கன் என்று சிவன் சிரித்த சிரிப்பினாலேயே திரிபுரம் எரிந்து வீழ்ந்தது என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
அச்சமயத்தில் திரிபுரத்தவர்கள் தலையும் அற்றுப் போனது. இருப்பினும், அம்மூவர்கள் சிவலிங்கத்தை வழிபட்டு வந்ததால் சிவகண பதவியை சிவன் அளித்தாரெனவும், சிவன் திரிபுரம் எரித்த பின் தாமும் அவ்வெற்றிக்கு உரியவராகக் கருதி இறுமாப்புடையவராய் தேவர்கள் இருந்தனர். அஃதுணர்ந்த சிவன் இயக்க வடிவங்கொண்டு எதிரில் நின்றகாலை அவர்கள் இறைவனை அறியாதிருந்தனர்.
வேடுரு வாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான் – என்று தேவர்கள் தேடும்படி சிவன் மகேந்திர மலையில் இருந்ததாக மணிக்கவாசகர் பாடுகிறார்.
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார்அறி வாரே– என்று திரிபுரம் எரித்தது என்பது ‘ஆணவம்’, ‘கன்மம்’, ‘மாயை’ என்னும் மன அழுக்குகளை அழிக்கப்படுவதாகக் கொள்ளுதல் வேண்டுமென திருமூலர் கூறுகிறார்.
திருப்புகழ் கதைகள்: முப்புரம் எரித்தவன் ரத அச்சினைப் பொடி செய்த தீரன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.