e0af8d-e0ae95e0af81e0aeb1e0aeae.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 7
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
குறமகளுடன் முருகனை மணம் அருள் செய்த பெருமான்
அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே.…
கைத்தல நிறைகனி பாடலின் மேற்குறிப்பிட்ட வரிகள் வள்ளித் திருமணம் பற்றிய கதையினைத் தருகிறது. பழந்தமிழின் இலக்கியக் குறிப்புகளில் வள்ளியானவர் முருகனின் மணமகளாக இருந்துள்ளார். எனவே வள்ளி தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவராக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
மலைமகளாக வலம் வந்து முருகனின் மனத்தினில் இடம் பிடித்த வரலாற்றை வள்ளியம்மை திருமணப்படலம் என்ற தலைப்பில் கச்சியப்பரின் ஆறாவது நூலான கந்த புராணத்தில் 267வது பாடலில் குறிப்புகள் உள்ளன. இவை முருகனின் காதல் மற்றும் வேட்டுவரின் மகள் வள்ளியுடனான கூடலைப் பற்றிய கதையை விவரிக்கிறது.
வள்ளியைப் பற்றி நாரதர் மூலம் அறிந்த முருகன் அவருடைய அழகில் சொக்கிப் போய் ஒரு கம்பீரமான வேட்டைக்காரனாக தோற்றமெடுத்து வள்ளி முன்பு தோன்றினார். தான் ஒரு மானைத் தேடி வந்ததாக வள்ளியிடம் சொல்லுவார்.
வள்ளித் திருமணம் தமிழகத்தில் ஒரு மிகப் பிரபலமான நாடகமாக பிற்காலத்தில் கொண்டாடப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளித் திருமண நாடகத்தில், இக்காட்சியில் வரும் பாடலான
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே – புல்
மேயாத மான் புள்ளிமேவாத மான் நல்லஜாதி மான்
சாயாத கொம்பிரண்டு இருந்தாலும் அது தலை நிமிர்ந்து
பாயாத மான் அம்மானைத் தேடி வந்தேன் ஆரணங்கே
என்ற பாடல் பைரவி இராகத்தில் பாடப்படும். இதனைத் தொடர்ந்து
மேவும் கானகமடைந்து – நறு
சந்தனமும் புனுகும் கமழும்
களபங்களணிந்து சுணங்கு படர்ந்த (மேயாத)
கானக் குறவர் கண்மணி எனவளர்
கானக் குயிலை நிகர் குரலுடையது (மேயாத)
என வள்ளி தான் அந்த மேயாத மான் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் பாடல் பலர் கண்டு, கேட்டு மகிழ்ந்த பாடல் அது.
அப்போது மலைகளின் தலைவர் வரும் நேரம் என்பதால் முருகனை மறைந்து இருக்குமாறு வள்ளி கேட்டுக் கொண்டார். அவ்வாறு தலைவர் சென்ற பின்பு மீண்டும் அதே உருவில் தோன்றிய முருகன் தனது காதலை வள்ளியிடம் தெரிவித்தார். ஆனால் வள்ளி அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
எனவே பின்னர் வயதான தோற்றத்திற்கு மாறி வள்ளியிடம் தனக்குப் பசிப்பதாக உணவு கேட்டார். வள்ளியும் திணையையும் தேனையும் கலந்து உணவாக கொடுத்தார். அவர் உண்ட பின்பு தண்ணீரையும் கொடுத்தார். இதனை முருகன் கேலியாக இணையருக்குத் தாகம் தீர்ப்பதைப் போன்று இருக்கிறதே என்று கூறினார்.
ஆனால் அவருடைய கேலியைக் கேட்டு கோபமடைந்தார் வள்ளி. இதனால் முருகன் தன் அண்ணன் விநாயகரின் உதவியை நாடினார். விநாயகரும் யானையாக மாறி வள்ளியை அச்சமூட்டினார். யானைக்குப் பயந்து கிழவர் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினார். அந்தக் கிழவரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கேட்டார்.. ஆனால் அவர் தன்னைத் திருமணம் செய்துக் கொள்ள ஒப்புக் கொண்டால் தான் காப்பாற்றுவேன் என்றார்.
பயத்தின் நடுக்கத்தில் இருந்த வள்ளி வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். பிறகு முருகன் தன்னுடைய உண்மையான உருவத்தை வெளிப்படுத்தினார். அதன்பிறகு தான் தாம் இறைவனின் காதலி என்பதை உணர்ந்தார் வள்ளி. பிறகு எல்லோருடைய ஒப்புதலுடனும் இருவரின் திருமணமும் நடைபெற்றது.
திருப்புகழ் கதைகள்: குறமகளுடன் முருகனை மணம்புரிய அருளியவன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.