திருப்புகழ்க் கதைகள் பகுதி – 266 – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆனாத பிருதிவி – சுவாமி மலை
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும், மாமாய விருளுமற் றேகி பவமென, வாகாச பரமசிற் சோதி பரையை அடைந்துளாமே என்ற இத்திருப்புகழின் முதல் பத்தியில் அருணகிரியார் சொல்ல வருவது என்னவெனில், நீங்குதற்கரிய மண்ணாசை என்ற விலங்கும், பெரிய மயக்கத்தைச் செய்யும் ஆணவ இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட தன்மையென்று கூறும்படி, ஆகாயம் போல் பரந்த பெரிய ஞானசோதியான பராசக்தியை அடைந்து நினைப்பு இன்றி – என்பதாகும்.
ஆனாத என்றால் நீங்குதல் இல்லாத என்று பொருள். நிகளம் என்றால் சங்கிலி. உயிர்கள் மண்ணாசை என்ற சங்கிலியால் கட்டுண்டிருக்கின்றன. இதனை அருணகிரியார் கந்தரனுபூதியின் 43ஆவது பாடலிலும் குறிப்பிடுவார். அந்தப் பாடல்…
தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே.
தூய மாணிக்க மாலையையும் அழகிய ஆடைகளையும் அணிந்திருக்கும் வள்ளியின் நாயகனே, இளமையும் அழகும் உடையவனே, உனது பெருங் கருணையின் காரணமாக ஏற்பட்ட திருவருளால் ஆசை என்கிற தொடர் சங்கிலி போன்ற பெருந் தடைகள் தூள் தூளாக உடைந்து போயின. நான் மோன நிலையை அடைந்துவிட்டேன். இதுவே எனது அநுபூதியாகும்.
இந்த அநுபூதிப் பாடலின் உட் கருத்து, ஞானம், வைராக்கியம், பக்தி என்கிற ஆபரணங்களை பூண்ட முருகனின் அடியார்களை நினைவுபடுத்துகிறது. நிகளம் என்றால் சங்கிலி. ஆசைகள் சங்கிலித் தொடர்போல் ஒன்றோடு ஒன்றுபோல் பிணைத்துக்கொண்டு வருவதால் அதை நிகளம் என்கிறார்.
நாம் அருள் பெறுவதற்கு தடையாக இருப்பது இந்தச் சங்கிலியே. முந்திய பாடல்களில் இந்த விரோதிகள், அகம், மாயை, மடந்தையர், மங்கையர், போராவை, பூமேல் மயல், சகமாயை, அமரும் பதி, கேள், இல்லோடு செல்வம், மின்னே நிகர் வாழ்வை விரும்புதல் மெய்யே என இவ் வாழ்வை உகத்தல், அகந்தை (இப்படி மேலும் பல) ஆவன. இப்படிப்பட்ட விரோத சொரூபங்கள், முருகனின் அன்பு அருளால் தூள் தூளாகிப் போய் விடுகின்றன.
அடுத்து இராமாயணக் காட்சி ஒன்றினை அருணகிரியார் காட்டுகிறார்.
பலவிதமான போர்க் கருவிகளைத் தாங்கிய சேனைகள் விதம் விதமாகச் சூழ்ந்து வர, புகழ் பெற்ற சூரர்களுடன், வளைந்துள்ள பெரிய கப்பல்கள் செல்கின்ற, சமுத்திரத்தை அணைகட்டி அக்கறை சென்று, இலங்கையின் உயர்ந்த நிலைமை தொலையும்படி, பத்து (நாலும் ஆறும் ஆகிய பத்து) மணி முடிகளையுடைய பாவியாகிய இராவணனை வதைத்த ஸ்ரீ இராமனைப் பற்றிப் பாடுகிறார்.
இப்படி இத்திருப்புகழில் அருணகிரியார் வார்த்தைகளால் விளையாடியிருக்கிறார்.