சுப்ரஸ்ஸன்னா மகாதேவன்
16 aligncenter" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2020/05/sathavasiva-primendral.jpg" alt="" width="693" height="554" />
மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்
மறைந்தும் மறையாமல் சூட்சும வடிவில் அருள் செய்பவர்கள்தான் மகான்கள் என்று போற்றப்படுகிறார்கள். அவர்களில் ‘நெரூர் சதாசிவ பிரமேந்திரர்’ இன்றும் நம்மோடு வாழும் அதிசயிக்கத்தக்க பிரம்மஞானி. வாழும்போதே பிரம்மத்தை உணர்ந்து அருள் செய்தவர். அத்வைத ஞானி. அற்புதமான கர்நாடக இசைப்பாடலைகளை எழுதியவருமாக இவரை வரலாறு பதிவுசெய்து வைத்துள்ளது. ஆனால், இன்றும் இவரது ஜீவசமாதியை தரிசிப்பவர்கள், இவரை கடவுள் நிலைக்கே உயர்த்தி வணங்கி வருகிறார்கள்.சுமார் முந்நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிவராமகிருஷ்ணன் என்ற திருநாமத்தோடு சோமசுந்தர அவதானியாருக்கும் பார்வதி அம்மையாருக்கும் பிறந்தார். சிறுவயது முதலே ஞானக்குழந்தையாக வளர்ந்த அவர் திருவிசலூர் மஹா வித்வானிடம் கல்வி கற்றார். பின்னர் காஞ்சி மடத்தின் ஐம்பத்தியேழாவது பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சகல வேத சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார்.சிறுவயதிலேயே திருமணம் செய்விக்கப்பட்ட சிவராமன் ஒருமுறை தாயாரின் கோபத்தைக் கண்டு இல்லறத்தைத் துறந்தார். ‘குருவே சரண்’ என்று வாழ்ந்த சிவராமனுக்கு சரஸ்வதி கடாட்சம் முழுமையாகக் கிடைத்தது. இதனால், எல்லா வித்வான்களையும் வென்று காஞ்சி குருவுக்கு பெருமை சேர்த்தார்.
கடுமையான விவாதத்தில் இருந்த சிவராமனை அடக்க எண்ணிய குரு, ‘ஊரார் வாயை அடைக்க விவாதிக்கும் நீ, உன் வாயை அடக்கக் கற்று கொள்ளவில்லையே’ என்றார். அன்றோடு பேசுவதை நிறுத்திக்கொண்டார். மௌனவிரதம் இருக்கும் ஒருவருக்கு மனம் ஒன்றிவிடுமல்லவா?
சிவராமன் கடவுளோடு ஐக்கியமானார். அவரது சிந்தனை, சொல், செயல் யாவும் பிரம்மத்தை நோக்கியத் தேடலாக மாறியது. இவரது நிலை கண்டு சிலிர்த்த, காஞ்சி மஹாகுரு இவரை ‘பிரமேந்திரர்’ என்று அழைத்தார்.
ஊன், உறக்கம் யாவும் மறந்த பிரமேந்திரர், சதா காலமும் சிவசிந்தனையே கொண்டிருந்தார். ஆடைகளைத் துறந்து திகம்பரர் ஆனார். இயற்கையோடு இணைந்து மனிதர்களை விட்டு விலகி வாழ்ந்தார். ஒருநாளைக்கு ஒருவேளை, அதுவும் மூன்று கவளம் மட்டுமே பிட்சை வாங்கி உண்டார். ஒரு சம்பவத்தால் அதுவும் நின்று போனது.
ஒருமுறை பெண்ணின் வற்புறுத்தலுக்காக நாலாவது கவளம் வாங்கி உண்ண, அவளது கணவன் இவரை பார்த்து ‘இன்னும் உனக்கு மனதை கட்டுப்படுத்தத் தெரியவில்லையே, நீ எப்படி பிரம்மத்தை அறிவாய்?’ என்று கிண்டல் செய்தார். அத்தோடு உண்பதையும் நிறுத்தினார். எண்ணற்ற சித்து விளையாட்டுக்களால் பலரை காப்பாற்றினார்.
புற்று மண்ணெடுத்து இவர் உருவாக்கிய அம்பிகையே இன்றும் புன்னை நல்லூர் மாரியாக அருள்செய்து வருகிறாள். தஞ்சை, தேவதானப்பட்டி, கரூர், திருநாகேஸ்வரம் பகுதிகளில் இவரால் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டன.
19 ஞானப் புத்தகங்களும் பல பாடல்களும் எழுதினார். தான் வாழ்வதை விட, மறைந்த பிறகு தான் மக்களுக்கு அருள் புரியமுடியும் என்று உணர்ந்த சதாசிவ பிரமேந்திரர் நெரூரில் ஜீவசமாதி அடைய விரும்பினார். அதன்படி சீடர்களிடம் கூறி குழி வெட்டி அதில் அமர்ந்து ஜீவன் முக்தி பெற்றார்.
சித்திரை மாத தசமி நாளில் ஜீவசமாதி அடைந்த இடத்தில் வில்வமரம் முளைத்து, அப்பகுதி மக்களை அதிசயப்படுத்தியது. இவர் மறைந்து 120 வருடங்கள் கழித்து ஒரு அதிசயம் நடந்தது. சிருங்கேரியில் பரமாச்சாரியாராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு பிரம்ம ஞானத்தில் ஒரு சந்தேகம் உண்டானது. அதை கேட்டுக்கொள்ள அவர் நெரூர் வந்தார்.
மூன்று நாள் கடும் தியானத்துக்குப் பிறகு, அவரது சந்தேகங்களை ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் தீர்த்து அனுப்பி வைத்தார். இன்றும் எண்ணற்ற பக்தர்களின் குறைகளைத் தீர்த்து அருளாசி செய்து வருகிறார் மகான் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர்.கரூர் அருகே உள்ள நெரூருக்கு சென்று இவரை தரிசித்து பக்தர்கள் அருள் பெறலாம். அங்கு செல்ல முடியாதவர்கள் இருந்த இடத்திலேயே இவரை மானசீகமாக வணங்கி பலன் பெறலாம். இவரை வணங்கும்போது திருவருள் மட்டுமல்ல, குருவருளும் பெறலாம் என்பதே உண்மை.
ஜீவன் முக்தர்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)
இந்த நிஷ்டை கலைந்த பிறகும்கூட அவர்களின் உள்ளுக்குள்ளே அநுபவம் மாறாது. ‘நிஷ்டை கலைந்தது’ என்பது நம் பார்வையில்தான், நிஷ்டை கலைந்து அவர்கள் வெளி உணர்வோடிருப்பதாக நாம் நினைக்கும்போதுகூட அவர்கள் ஆத்மாவிலேயேதான் ஐக்யமாயிருப்பார்கள். மனஸின் பந்தமும் ஸம்ஸார பந்தமும் கர்மபந்தமும் துளிக்கூட இல்லாமல் இங்கேயே மோக்ஷம் அடைந்துவிட்ட ஜீவன் முக்தர்கள் என்று அவர்களைத்தான் சொல்வது. தூங்கிக்கொண்டே ஒரு குழந்தை தாய்ப்பால் சாப்பிடுகிறதல்லவா? இப்படி அவர்கள் உள்ளே ஸமாதி நிஷ்டையிலிருந்த கொண்டேதான் நமக்கு பஹிர் முகப்பட்டதுபோல (புறவுணர்வடைந்தது போலத்) தோன்றி வெளிலோகத்தில் ஸஞ்சாரம் செய்வது, ஸல்லாபம் செய்வது எல்லாமும். இந்த வெளி நாடகத்தில் அவர்கள் கோபப்படுகிறாற்போல, துக்கப்படுகிறாற்போல இருக்கும் ஸமயங்களிலும்கூட அவர்கள் வாஸ்தவத்தில் ஸதாநந்தமான ஆத்மாவிலேயே ஒன்று பட்டிருப்பவர்கள்தான்.
அந்த உள்ளநுபவத்தை சூன்யம் என்றும் பாழ் என்றும் நம் பார்வையிலிருந்து அந்த அநுபவிகளும்கூட சில ஸமயங்களில் சொல்வதுண்டு. உண்மையில் அது ஆனந்த பூரிதமான நிலையே.