பஞ்சரத்ன கீர்த்தனைகளைத் தந்த தியாகராஜ ஸ்வாமிகள்

ஆன்மிக கட்டுரைகள்

குழந்தைகள் வீட்டுச் சுவர்களில் இன்றைக்கு எழுத்துக்கள் எழுதுவதைப் பார்க்கிறோம். அதுபோல் தியாகராஜர் இளவயதில் வீட்டின் சுவர்களில் திவ்ய நாம கீர்த்தனைகளை எழுதுவாராம்.

தியாகராஜருக்கு 6 வயதாக இருந்த போது அவரை கொடிய நோய் தாக்கியது. தம் மகன் இந்த இளவயதிலேயே தம்மை விட்டுப் பிரிந்துவிடுவானோ என்று ராமபிரம்மம் கவலை கொண்டார். அந்நேரத்தில் ஒரு சன்னியாசி அவர் வீட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார். அடுத்த நாள் தியாகராஜர் குணமடைந்து எழுந்தார். அதுமுதல் அந்த சன்னியாசி இவர் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமானது.

ராமபிரம்மம் அநுதினமும் காலை எழுந்து காவிரியில் குளிக்கச் செல்லும் போது, சொண்டி வேங்கடரமணய்யாவின் வீட்டின் வழியாகச் செல்வார். அப்போது அந்த வீட்டில் சங்கீதப் பயிற்சி நடைபெறுவதைக் காதால் கேட்டு, தம் மகனுக்கும் சங்கீத ஆர்வம் இருந்ததால், அவரிடம் தியாகராஜரை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

தியாகராஜர் சொண்டி வேங்கடரமணய்யாவிடம் சிறிது காலம்தான் இசைப் பயிற்சி பெற்றார். அதன்பின் வேங்கடரமணய்யா தியாகராஜரை வித்வான்களின் சபையில் பாடச் சொன்னார். தியாகராஜர் பிலஹரி ராகத்தில் தொருகுனா இடுவம்டி சேவா  என்ற பாடலைப்பாடினார். எல்லோரும் கேட்டு ஆனந்தித்தார்கள். ஒருமுறை அந்த வித்வத் சபையில் தியாகராஜர் சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே பாடுவதற்கு நேரம் கொடுக்கப்பட்டது. அவர் பாட ஆரம்பித்தார். எல்லோரும் தம்மை மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். தியாகராஜர் காம்போஜி ராகத்தில் ஒரு கீர்த்தனம் பாடி முடித்தார். பார்த்தால் வானில் விடிவெள்ளி முளைத்திருந்தது. மக்கள் தியாகராஜரின் கான ரஸத்தில் மூழ்கியிருந்தனர்.

சரபோஜி மன்னரிடம் சென்ற சொண்டி வேங்கடரமணய்யா இதைத் தெரிவித்தார். இதைக்கேட்டு வியந்த மன்னர், அவரை அழைத்துவருமாறு கேட்டுக் கொண்டார். மன்னரின் ஆட்கள் தியாகராஜரிடம் சென்று மன்னரின் ஆக்ஞையைத் தெரிவித்தனர். ஆனால் காசுக்காக அரசனைப் புகழ்ந்து பாடவேண்டி வருமோ என்று கலங்கி, ஒரு கீர்த்தனம் பாடினார். அதுதான் கல்யாணி ராக்த்தில் அமைந்த நிதிசால சுகமா என்ற புகழ் பெற்ற கீர்த்தனை.

ஒருமுறை ஹரிதாசர் என்ற சன்யாசி இவரிடம் வந்து 96 கோடி முறை ராம நாம ஜபம் செய்யுமாறு சொல்லிச் சென்றார். அவரும் அப்படியே ஜபம் செய்து பூஜை முடித்தார். அப்போது வாசல்கதவை யாரோ தட்டுவது கேட்க, எழுந்து சென்று கதவைத்திறந்து பார்க்கையில், வந்த மூன்றுபேரும் தியாகராஜரின் பூஜையறைக்குச் சென்று ஸ்ரீராமபட்டாபிஷேகக் காட்சியைக் காட்டி மறைந்துவிட்டனர். மெய்சிலிர்த்த தியாகராஜர் அடாணா ராகத்தில் பாலகனகமய என்ற அனுபல்லவியில் ஆரம்பித்து ஏல நீ தயராது என்ற கீர்த்தனையைப்பாடி முடித்தார்.

தியாகராஜர் ராமாயணத்தை 24000 கீர்த்தனைகளாகப் பாடினார். ஒருமுறை நாரதர் சன்னியாசி ரூபத்தில் வந்து ஸ்வரார்ணவமு என்ற புத்தகத்தைக் கொடுத்துச் சென்றாராம். வந்தவர் நாரதர் என்பதை அறிந்தபோது அடாணா ராகத்தில் அமைந்த நாரத கான லோலா என்னும் கீர்த்தனையைப் பாடினார்.

தியாகராஜர் தம் 80 ஆம் வயதில் ஒருநாள் காலை தம் சீடர்களைக் கூப்பிட்டு அவர்களைப் பாடும்படி சொன்னார். அதுவே தமக்குக் கடைசிப்பாட்டு என்று தெரிவித்துவிட்டு க்ரஹஸ்தாச்ரமத்தை விட்டு சன்னியாச ஆஸ்ரமம் மேற்கொண்டார். இவர் கடைசியாகப் பாடிய கீர்த்தனை, தன்யாசி ராகத்தில் சியாம சுந்தராங்கா என்பது. இதன் பிறகு அவர் முக்தி பெற்றார்.

தியாகராஜரின் கீர்த்தனங்கள் உணர்ச்சிகரமானவை. பழக்கத்திலிருந்த சாதாரண நடையிலேயே கீர்த்தனங்களைப் பாடியுள்ளார். ராம நாமத்தைச் சொல்லும் கீர்த்தனங்கள் இன்றும் மக்களின் உள்ளங்களை உருக்கக்கூடியது. பஞ்சரத்ன கீர்த்தனைகள் மூலம் தம் சாஹித்யம் அமைக்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளார். இன்றும் கர்நாடக இசை வல்லுநர்கள், இசைப்பிரியர்கள் திருவையாற்றில் இருக்கும் அவருடைய அதிஷ்டானம் முன் பஞ்சரத்ன கீர்த்தனங்களை சேர்ந்து பாடி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அவருடைய பெரும்பாலான கீர்த்தனைகள் தெலுங்கில் இருந்தாலும் தியாகராஜர் தமிழகத்திலே பிறந்து தமிழகத்திலே மறைந்த ராம பக்தர்.

– செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply