எது நம் பண்பாடு?

ஆன்மிக கட்டுரைகள்

 

இந்தச் செய்திகள் பெற்றோர்களால் வளர்த்து ஆளாக்கப்பட்ட பிள்ளைகள், வளர்ந்து வாழ்வில் மனைவி மக்கள் என்றானதும், மூப்படைந்த தங்கள் தாய் – தந்தையரைச் சுமையாகக் கருதி நாளுக்குநாள் புறக்கணித்து வருகின்றனர் என்பதைத்தான் வெட்டவெளிச்சமாகக் காட்டுகின்றன.

இத்தனைக்கும் நம் நாட்டில்தான் “தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை”, “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றெல்லாம் பெற்றோர்களை முதன்மைப்படுத்தும் பழமொழிகள் அன்று முதல் இன்றுவரையில் அழுத்தமாகச் சொல்லப்பட்டே வருகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் நினைத்துப் பார்க்கத் தக்க பழஞ்செய்தி ஒன்று இப்போது கவனத்திற்கு வருகிறது. சங்க காலத்தில் வாழ்ந்தவர் பிசிராந்தையார் என்ற புலவர். பிசிர் என்பது அந்நாளைய பாண்டிய நாட்டில் உள்ள ஓர் ஊர். ஆந்தையார் கோப்பெருஞ்சோழனுக்கு உயிர் நண்பன். நண்பர் உயிர்விட்ட பின்னர் அவரோடு தாமும் உயிர் விட்ட உணர்ச்சி ஒத்த உத்தமர் அல்லவா அவர்? அந்தப் பிசிராந்தையார் புலமையில் மிகச் சிறந்தவர்; வயதிலும் முதிர்ந்தவரும் கூட. இதில் வியப்பு என்னவென்றால், வயதில் மூத்திருந்தாலும் அவரது தலைமுடியில் நரை ஏதும் விழவில்லை; உடலிலோ சுருக்கம் எதுவும் இல்லை; முதுமைக்கான அடையாளம் இல்லாமல் இளமைத் தோற்றத்துடனே அவர் காணப்பட்டார்.

கோப்பெருஞ்சோழனின் பெருமையெல்லாம் செவிவழியாகவே அறிந்திருந்த பிசிராந்தையார் முதன்முதலில் தன்னுயிர் நண்பனைக் காணச் சோழ நாட்டுக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவர் வருவதைக் கேள்விப்பட்ட புலவர் சிலர், அவரை வழியில் எதிர்கொண்டு வரவேற்றார்கள். ஆந்தையாரை வயதில் முதியவராக இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்த புலவர்கள், நரை திரை மூப்பு இல்லாத அவரது தோற்றத்தைக் கண்டதும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அதன் இரகசியம் என்ன என்பதையும் ஆவலுடன் அவரிடமே வினவினார்கள்.

மெல்லச் சிரித்த பிசிராந்தையார் தன் இளமைத் தோற்றத்திற்குச் சொன்ன காரணங்கள்: “இல்லறத்திற்கு ஏற்ற இனிய பண்புடைய என் மனைவி – முதற்காரணம்; என் மனைவியுடன் என் மக்களும் குணங்களால் நிரம்பியவர்கள்” என்று மேலும்சில காரணங்களைச் சொன்னார் பிசிராந்தையார்.

“மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்” (புறம் – 199) என்பது புலவரது வாக்கு. அவர் இங்கு மக்கள் என்றது அவரது பிள்ளைகளை. அவர் புதல்வர்கள் குணங்களால் நிரம்பியவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால் பிள்ளைகள் அவர் மகிழும்படியாக எப்பொழுதும் நடந்து கொண்டார்கள். அதன் காரணமாகப் புலவர்க்குக் கவலை என்பதே இல்லாமல் போய்விட்டது. கவலை இல்லை என்றால் நரை திரை மூப்புக்கு இடம் ஏது? பிசிராந்தையார் மிகவும் கொடுத்து வைத்த தந்தை என்றே சொல்லத் தோன்றுகிறது.

இந்த நேரத்தில் நம் பெற்றோர் பங்களிப்பைக் கொஞ்சம் பின்நோக்கி எண்ணிப்பாருங்கள். எந்தத் தாயும் ஆசை ஆசையாய்க் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். தன் இரத்தத்தைப் பாலாக்கிப் பிள்ளைக்குத் தருகிறாள். ஈ, எறும்பு அணுகாது காக்கிறாள். இரவு பகல் பாராது சீராட்டி வளர்க்கிறாள். மகன் மழலையர் வகுப்பில் சேர்கின்றபோது ஆசிரியையாகவும் அவள் மாறிவிடுகிறாள். அவனே உலகம் என்பதாக அவள் மனம் மகிழ்வில் ஆழ்ந்துவிடுகிறது.

தந்தையோ பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரையில் தன் வருமானத்தில் பெரும் பகுதியை மகனின் கல்விக்காகச் செலவிடுகிறாள். தாயும் பிள்ளைக்குப் பணிவிடை செய்வதில் ஓடாய்த் தேய்ந்து போகிறாள். மகன் படித்துப்பட்டம் பெறும்போது பெற்றோர் பெரிதும் மகிழ்கின்றனர். இவ்வளவு காலமும் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்தும் விடுகின்றனர்.

வேலையில் சேர்ந்து கை நிறையச் சம்பாதிக்கும் அந்த மகனுக்கு அழகிய பெண்ணைத் தேடி மணம்முடித்தும் வைக்கின்றனர். அவனோ மனைவியிடம் கொண்ட மயக்கத்தால், பெற்றோரை விட்டு மனதால் மெல்ல விலகத் தொடங்குகிறான். மோகம் பாசத்தை மழுங்கச் செய்து விடுகிறது. அவன் ஒன்று இரண்டு குழந்தைக்குத் தந்தை ஆகிவிட்டாலோ தன் மனைவி மக்களே உலகம் என்றாகிவிடுகிறான்.

இந்தப்போட்டி உலகில் தன் பிள்ளைகளை முன்னிறுத்த அவன் கூடுதலாக உழைக்க வேண்டியதாகிறது. நடுவயதைக் கடக்கும் நிலையில் அவன் மூப்படைந்த தன் பெற்றோரைச் சுமையாகவே கருதுகிறான். அவர்களிடம் பாராமுகமாய் இருக்கிறான். அடிக்கடி வெறுப்பையும் கொட்டுகிறான். பெற்றோரோ ஓய்ந்து சோர்ந்த நிலையில் செய்வது அறியாது திகைக்கின்றனர். பலர் மனநோய்க்கும் ஆளாகி விடுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் இருவர் அல்லது ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறி முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிடுவதும் காலத்தின் கட்டாயமாகி விடுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல குடும்பங்களில் முதிய பெற்றோர், பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுவதைக் கண்ட பாவேந்தர், நல்லதோர் குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாகக் குடும்ப விளக்கு என்ற இலக்கியத்தைப் படைத்துக் காட்டியுள்ளார். அதனில் வயது முதிர்ந்த பெற்றோரிடம் அன்பும் அரவணைப்பும் காட்டும் மூத்த மகனையும், அந்த மாமன் மாமியிடம் பரிவாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்கின்ற மருமகளையும் காட்டுகிறார். இன்னும், அந்த முதிய பெற்றோரிடம் அறிவுரை கேட்டுச் சொல்லும் அவரது மற்றப் பிள்ளைகளையும் அவரைச் சார்ந்தவர்களையும் காட்டும் கவிஞர், பெயரர் – பெயர்த்தியர் அந்தத் தாத்தா – பாட்டியோடு கொஞ்சி விளையாடி அவர்களை மகிழ்வுறுத்தும் மாண்பையும் காட்டியுள்ளார்.

திருமேனி நாகராசன்

 

 

Leave a Reply