57. விடியலில் துயிலெழு!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“ப்ராஹ்மீ முஹூர்தே யா நித்ரா ஸா புண்ய க்ஷய காரிணீ” – யாக்ஞவல்க்ய ஸ்மிருதி.
“பிரம்மமுகூர்த்தத்தில் உறங்கினால் புண்ணியம் அழியும்”
இதே வாக்கியம் ராமாயணத்திலும், மகாபாரதத்திலும், வைத்திய, யோக சாஸ்திரங்களிலும் கூட காணப்படுகிறது. இவை அனைத்துக்கும் ஒன்றோடு ஒன்றுக்கு உள்ள பொருத்தத்தை இதன் மூலம் அறிய முடிகிறது.
“யுக்தாஹார விஹாரஸ்ய யுக்த சேஷ்டஸ்ய கர்மஸு” என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மா, ஒரு நல்ல வாழ்க்கை முறையைக் கூறுகிறார். உசிதமான உணவை சரியான நேரத்தில் நியம நிஷ்டையோடு உண்பது மிக அவசியம்.
பிரம்ம முகூர்த்தத்தில் விழித்தெழ வேண்டும் என்று இரவு 11 மணிக்கோ 12 மணிக்கோ படுத்து காலை 3.30, 4.00 மணிக்கு எழுந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். அதனால் பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த விதமாக இரவு சற்று முன்பாகவே உறங்கச் செல்லவேண்டும். இவ்விதம் உணவு உறக்கம் இரண்டிற்கும் நம் முன்னோர் ஒரு வழிமுறையை ஏற்பாடு செய்தார்கள்.முழுவதுமாக வயிற்றைக் காயப் போடுமாறு எங்குமே கூறவில்லை. அதேபோல் வயிறு புடைக்க உண்ணுதல் நல்லதல்ல என்றும் கூறியுள்ளார்கள்.
தற்போது உடல் ஆரோக்கியம் குறித்து அதிகம் கவனம் செலுத்துகிறார்களே தவிர மானசீக ஆரோக்கியம் பற்றி அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. துயரங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர உண்மையில் துன்பம் வராமல் இருப்பதற்கான ஜீவன விதானம் என்ன என்பதை அறிய முயற்சிப்பது இல்லை.
உணர்ச்சிவசப்படுவது மானுட இயல்பு. விலங்குகளுக்குக் கூட ஆவேசம் வரும். எதிரில் யார் வருகிறார்கள் என்று பார்க்காமல் கொம்பால் முட்டித் தள்ளும். மனிதன் ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் மிருகம் போல் நடந்து கொள்ளலாமா? கட்டுப்பாடு என்பது தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும். அல்லது பெரியவர்களுக்காவது அடங்க வேண்டும். கட்டுப்பாடு நிச்சயம் வலிமை அளிக்கும்.
மன நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சரகர் கூறுகிறார். “லோப சோக பய க்ரோத வேகான் நிவாரயேத்” – “லோபம், சோகம், பயம், குரோதம் அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். இந்த மன உணர்ச்சிகளை அடக்காதவனுடைய ஆயுள் குறையும்” என்கிறது வைத்திய சாஸ்திரம்.
“இவையெல்லாம் ஆன்மிகம். நாங்கள் நாத்திகர்கள். அதனால் கடைபிடிக்க மாட்டோம்” என்பவர்களின் ஆயுள்தான் குறைந்து போகும்.
சனாதன தர்ம ஜீவன விதானத்தில் புராண, இதிகாசங்கள், தர்ம சாஸ்திரங்கள் கூறுபவை அனைத்தும் மனம் உடல் இவ்விரண்டின் வழியே வாழ்வை ஒழுக்கத்தோடு நடத்திச் செல்வதற்காகவே. அவற்றை அனுசரித்து வாழ்பவன் ஆரோக்கியத்தோடு வாழ்கிறான் என்பதற்கு உதாரணங்கள் பல உள்ளன.
சரகர் முதலான ஆயுர்வேத அறிஞர்கள் எழுதி வைத்த சூத்திரங்கள் நம் கலாச்சாரத்தில் வாழ்க்கைக்கான ஒழுங்கு முறையை ஏற்படுத்திக் கொடுத்தன. “ந நக்தம் ததி புஞ்ஜீதா” என்பது சரக சம்ஹிதையின் வாக்கியம். அதாவது இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்று பொருள்.
காலை வேளையில் நல்ல தண்ணீர், மதியம் மோர், இரவில் பால் அருந்த வேண்டும் என்று ஒரு ஒழுங்கு அமைத்துள்ளார். இவற்றை கடைபிடிக்காவிட்டால் தோஷம் என்றார்கள். நரகத்துக்குப் போவாய் என்றார்கள். அதாவது நோய் வரும், உடல் நலம் கெடும் என்பதாக இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். உடல்நிலை கெட்டு நோய் வருவதை விட நரகம் வேறு என்ன இருக்கிறது?
உடல் நன்றாக இருக்கும் இளமையில் ஒழுக்கத்தை மீறி கட்டுப்பாடின்றி நடக்கத் தோன்றும். அவற்றின் பலனை பின்னர் அனுபவிக்க வேண்டி வரும். அதனால் சிறு வயது முதல் ஒழுக்க நியமங்களை கற்றுத்தர வேண்டும்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 57. விடியலில் துயிலெழு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.