திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மகா சிவராத்திரி விழாவும் ஒன்று.
திருமாலும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி முடி காணாமல் திகைத்த போது அவர் லிங்கோத்பவ மூர்த்தியாக அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது. மகா சிவராத்திரி உருவான திருத்தலம் என்ற தனிச்சிறப்பு பெற்றது திருவண்ணாமலை.
இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கோவிலில் பல்வேறு வண்ண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் கொடிமரத்தின் அருகில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மகா சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் இன்று (புதன்கிழமை) அதிகாலை வரை 4 கால பூஜைகளும் நடைபெற்றது.
முதல் கால பூஜையை பிரம்மாவும், 2-ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4-ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம் உள்ளது.
பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இந்த பூஜையில் மட்டும் லிங்கோத்பவருக்கு தாழம்பூ பயன்படுத்தப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பு மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் தவில் இசை சங்கத்தின் சார்பில் உலக அமைதிக்காக பிச்சாண்டி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெற்றது.
அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு எதிரிலுள்ள சக்கர தீர்த்த குளத்தில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.