திருப்புகழ்க் கதைகள் 269 முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இருவினை புனைந்து – சுவாமி மலை
அருணகிரிநாதர் அருளிசெய்துள்ள இருநூற்றி ஐந்தாவது திருப்புகழான “இருவினை புனைந்து” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, அடியேன் சிவயோகி ஆகி, உம்முடன் இரண்டறக் கலந்து, மயில் மீது உல்லாசமாக வர அருள்வாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி னிருவினை யிடைந்து போக …… மலமூட
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத மிலையென இரண்டு பேரு …… மழகான
இத்திருப்புகழின் பொருளாவது – திருமாலும் திசைமுகனும் தேடித்தேடி அறிதற்கரிதான இரண்டு திருவடிகளை உடையவரும், தமது தூக்கிய செம்மலர் திருவடிக் கமலமே உலகங்களுக்கெல்லாம் முதன்மையானது என்று விளக்கி அருட்பெருஞ் ஜோதியாக ஆநந்தத் தாண்டவம் புரிந்தருளும் நடராஜப் பெருமானும், நெருப்பிலிட்டு மிக மிக ஒளிரும் இரும்பைப் போன்ற செம்மேனியைக் கண்டு மகிழ்கின்ற, மரகத மேனியையுடைய மலைமகளை அருகில் இருத்திக் கொண்டிருப்பவரும் மங்கலத்தை யருள்பவரும், திரிபுரதகனரும் ஆகிய சிவபெருமான் உலகங்கள் உய்யும் பொருட்டுப் பெற்றருளிய திருப்புதல்வரே;
பகைவர்களாகிய அசுரர்களுடைய வலி பெற்று அலங்காரமாகவுடைய மணிமாலைகளுடன் கூடிய தலை உடல் இவைகள் அச்சத்தினால் நடுங்கவும், அவர்களுடைய உயிரை இயமன் உண்ணவும் வெற்றி பெற வேலாயுதத்தைப் படைக்கலமாக உடையவரே; சங்குகளின் கூட்டம் உருண்டு ஒளி செய்கின்ற காவிரி நதியின் வடபுறத்தில் விளங்குகின்ற சுவாமி மலையென்னுந் திருவேரகத் திருப்பதியில் எழுந்தருளியுள்ள தேவர் தலைவரே;
அடியேன் பெரிய செயலாகிய சிவயோகத்தை மேற்கொண்டு அறிவுக் கண்ணாகும் புருவ மத்தியிலுள்ள நந்திச் சுழி திறக்கப் பெற்று, அதனால் பிறவிப் பிணிக்குக் காரணமாயுள்ள நல்வினை தீவினையென்னும் இரு வினைகளும் பயந்து பின் வாங்கியோடிப் போகவும், அறியாமைக்குக் காரணமாயுள்ள ஆணவமென்னும் இருள் மலம் தேய்ந்தழியவும், அதனால் ஞானவொளி வீசப்பெற்று விளக்கமுற்று, தேவரீருடைய ஆறுதிருமுகங்களின் கருணைப் பிரவாகத்தில் கலந்து, பரமான்மாவாகிய தேவரீரும், ஜீவான்மாவாகிய அடியேனும், நல்ல மணம் வீசும் மலரும் அதன் மணமும்போல் இரண்டற்று அத்துவிதமாகக் கலந்து, தேவர்கள் வந்து வணங்கவும். விண்மாது திருவடிமேல் கற்பக மலர்மாரி பொழியவும், எண்ணிறந்த பலகோடி முனிவர் குழாங்கள் மிக்க அன்பு கொண்டு புகழ்ந்து பாடவும், பெரிய மயிற்பரியின் மீது ஆரோகணித்து உல்லாசமாக உலாவி வரவேணும் – என்பதாகும்.