திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் திறப்பு!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
srirangam2 - 1

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை நடைபெற்றது. பரமபத வாசலைக் கடந்து நம்பெருமாள் ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்களைத் தரித்தபடி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்ப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானது. இங்கே மார்கழி மாதம் 20 நாட்கள் திரு அத்யயன உத்ஸவம் என்ற வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடைபெறும். இந்த விழா நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பகல் பத்து, இராப்பத்து என்று இரண்டு பகுதிகளாக நடத்தப்படுகிறது.

பகல் பத்து நாட்களில் பெருமாள் முன் அரையர்கள் திருமங்கை ஆழ்வாரின் திருமொழிப் பாசுரங்களை அபிநயத்துடன் பாடுவார்கள். திருநெடுந்தாண்டகத்துடன் இந்த விழா தொடங்கும். இதற்கு திருமொழித் திருநாள் என்று பெயர்.

srirangam3 - 2

இராப்பத்து தொடக்க நாளின் அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அருள்வார்.

இராப்பத்து 10 நாட்களும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் பாடப்படும். இதற்கு திருவாய்மொழித் திருநாள் என்று பெயர்.

பகல் பத்து – திருமொழித் திருநாள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அன்று முதல் நம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு, கோயில் அர்ஜுன மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து திருமொழிப் பாசுரங்களைக் கேட்டார். பகல் பத்து உத்ஸவத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரம் என்ற நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.

வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியான இன்று பரமபத வாசல்  திறப்பு அதிகாலை நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை 3.30க்கு மூலஸ்தானத்திலிருந்து சிம்மகதியில் புறப்பட்டு, காலை 4.45க்கு பரமபதவாசல் முன் எழுந்தருளினார். பரமபதவாசல் திறக்கப்பட்டதும் அதன் வழியே நம்பெருமாள் கடந்து வந்தார். நம்பெருமாள் ரத்தின அங்கி பாண்டியன் கொண்டை கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து சேவை சாதித்தார்.

நேற்று இரவு முதலே காத்திருந்த முக்கியஸ்தர்கள் நம்பெருமாளுடன் பரமபத வாசலைக் கடந்து வந்தனர்.

srirangam4 - 3

பரமபத வாசல் திறப்பின் போது பெருவாரியான பக்தர்களுக்கு  அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. கொரோனா கால கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் இந்த ஆண்டும் பெருமாள் புறப்பாட்டின் போது பணியாளர்கள் தவிர பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் வந்து ஆஸ்தானம் சேர்ந்ததும் வழக்கம் போல் பக்தர்கள் பரமபத வாசல் வழியே சென்று பெருமாளை தரிசிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நம்பெருமாளை ஆயிரங்கால் மண்டபத்தில் தரிசிக்க விரும்புபவர்கள் கிழக்கு வெள்ளை கோபுரம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

srirangam1 - 4

ஸ்ரீரங்கத்தில் தை பிரம்மோத்ஸவம் – மிக முக்கியமானது. விருப்பன் திருநாள் உத்ஸவம் சிறப்பு பெற்றது என்பதால், அந்த உத்ஸவம் தொடங்கும் நாளில் வைகுண்ட ஏகாதசி உத்ஸவமும் இடையீடாக இந்த முறை வருகிறது. எனவே ஒரு மாதம் முன் வரும் ஏகாதசியை கணக்கிட்டு, கார்த்திகை மாதத்திலேயே ஏகாதசி உத்ஸவம் தொடங்கி நடைபெற்றது. இவ்வாறு திருவரங்கத்தில் மட்டும் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி உத்ஸவம நடைபெறுவது வழக்கம்.

sriranganathar 9 days alankara - 5
ஒன்பது நாட்களிலும் திருவரங்கம் ந்ம்பெஉமாளின் அலங்காரங்கள்…

Leave a Reply