பேயாழ்வார் அவதார உற்ஸவத்தில் ஒருநாள்.

செய்திகள்

தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வைணவ ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் மூவர் முக்கியமானவர்கள். களப்பிரர்கள் காலம் என்று தமிழகத்தின் இருண்ட காலத்துக்குப் பிறகான காலத்தில், மக்களின் மத்தியில் பக்தியையும் பண்பாட்டையும் வளர்க்க இறையருளால் அவதரித்தவர்கள்ஆழ்வார்கள்.
முதல் ஆழ்வார்கள் மூவரின் காலம் என்று கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டுகள் என்று வரலாற்றுக் கால அடிப்படையில் ஆராய்ச்சிகளைச் செய்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பொய்கையார், பூதத்தார், பேயார் என்ற இந்த மூவரில் கடைசி ஆழ்வாரான பேயாழ்வார் அவதரித்த இடம் மயிலாப்பூர் என்ற மயூரபுரி. சென்னைப் பட்டணம் ஏதோ இப்போது தோன்றிய புதிய நகரமாக, அதாவது ஆங்கிலேயர் காலடி வைத்த இந்த நான்கு நூற்றாண்டுகளுக்குள் தோன்றிய நகரமாகச் சொல்கிறார்கள். நகர் அமைப்பு என்று உருவானது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த நகர் அமைப்பு எவ்வளவு மோசமான திட்டமிடல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மழைக்காலத்தில் சென்னை நகரைப் பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், இந்தப் பகுதியின் வரலாறு, மிகப் பழைமையானது. காஞ்சிபுரத்தின் வரலாற்றுத் தொன்மை எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது இந்தப் பகுதியின் வரலாறு. கி.மு. காலத்தில் இருந்து இந்தப் பகுதிகளில் நல்ல நாகரிகம் வளர்ந்திருக்கிறது.
திருவள்ளுவர் பிறந்த இடம் என்று மயிலாப்பூரைக் குறிக்கிறார்கள். அவர் பிறந்த இடம் இங்கே ஒரு கோயிலாக உள்ளது. அதுபோல், சற்று தொலைவிலேயே அருண்டேல் தெரு என்று இப்போது வழங்குகிற தெருவில் பேயாழ்வாரின் அவதார தலம் உள்ளது. அங்கே, ஒரு கிணறு உள்ளது. அதனடியில்தான் அயோனிஜராக பேயாழ்வார் அவதரித்தார் என்கிறது வைணவ மரபு வரலாறுகள்.
இந்த இடம் தற்போது ஆக்கிரமிப்புகளின் பிடியில் உள்ளது. இரும்புக் கடைகள், சைக்கிள் கடைகள், இன்னும் எஸ்டிடி பூத் என்று கடைகளின் ஆக்கிரமிப்புகள் என்றால், பேராசை மனிதர்களின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தால், நம் வரலாற்றுத் தொன்மங்களை இழக்கும் நிலையின் உண்மை சொரூபத்தை இந்த பேயாழ்வார் அவதார தலத்திலேயே நாம் காணலாம்.
ஆனால், மயிலாப்பூரில் உள்ள முக்கியமான இரு பெருமாள் கோயில்களான மாதவப் பெருமாள் கோயில் மற்றும் கேசவப் பெருமாள் கோயில் சார்பில் இந்த அவதார இடத்துக்கு வந்து பேயாழ்வார் உற்ஸவத்தை வெகு விமரிசையாக நடத்துகிறார்கள். இந்த இரண்டு கோயில்களுமே, பேயாழ்வார் அவதார ஸ்தலம் என்று சொல்லி, உற்ஸவங்களை போட்டி போட்டு நடத்துகிறார்கள். மிக பிரம்மாண்டமாக! அம்மட்டில் நமக்கு சந்தோஷமே! காரணம் உற்ஸவம் நடக்கிறதே!
மாதவப் பெருமாள் கோயில் பேயாழ்வார்தான் ஆசாரியர்கள் காட்டிய ஒரிஜினல் பேயாழ்வார் விக்ரஹம் என்கிறார் கோயில் பட்டர். அடியேன் எழுதிய ‘தமிழ்மறை தந்த பன்னிருவர்” புத்தகத்தில், இந்த அவதாரத் தலத்தைப் பற்றி குறிப்பிட்ட போது, “கேசவப் பெருமாள் கோயில் அருகில் இருக்கும் இந்த அவதார தலத்தில்” என்று எழுதியிருந்தேன். அதற்கே, மாதவப் பெருமாள் கோயில் பட்டர் என்னிடம் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். ”என்ன ஸ்வாமி, பத்து வருஷங்களுக்கும் மேலாக நம்ம மாதவப் பெருமாள் கோயில் பக்கத்துலயே இருந்துண்டு, கோயிலுக்கும் அடிக்கடி வந்துண்டிருக்கீரே! நீரே இப்படி அந்தக் கோயில் பெயரைப் போட்டு எழுதலாமா? நம்ம மாதவப் பெருமாள் கோயில்லதான் நின்னுண்டு இருக்கற மாதிரி உற்ஸவர் பேயாழ்வார் விக்ரஹம் உண்டு. (முதலாழ்வார்கள் மூவருமே நின்னுண்டுதான் இருப்பார்கள் சரிதானே!)… புஸ்தகத்தில் அருமையாக வரைந்து வாங்கி ஒரு படத்தைப் போட்டிருக்கீரே அதுல எப்படி இருக்கார்னு பாரும். அத சரியா போட்டுட்டு பேரை மட்டும் மாத்திட்டீரே” என்று!
ஆயினும், கேசவப் பெருமாள் கோயில்லயும் இப்போது உற்ஸவங்கள் களைகட்டுகின்றன. மேள தாளங்கள், வாத்தியங்கள், பூமாலைகள், யானை குதிரை என மரியாதைகள் எல்லாம் அமர்க்களப்படுகின்றன.
இப்போது, கேசவப் பெருமாளுக்குப் போட்டியாக அருகிலேயே ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸேவை சாதிக்கிறார்- தேசிகர் ஸ்வாமி சஹிதமாக! கேசவப் பெருமாள் கோயிலில் ஏதாவது உற்ஸவம் என்றால் போதும்… அவ்வளவுதான்… புதிது புதிதாக தேசிகர் ஸ்வாமி சந்நிதி ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலிலும் உற்ஸவங்கள் தடபுடல் படும். பிறகென்ன…மோதலுக்குக் கேட்கவா வேண்டும்? இந்த வருடம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மயிலாப்பூருக்கு வருகை தந்தபோது, பெருமாள் முன்னாலேயே அஹோபில மட ஜீயரையும் வைத்துக்கொண்டே கொஞ்சம் அரசியல் நடத்தினார்கள். அரசனான கிருஷ்ணன் ஸ்ரீ பார்த்தசாரதி முன்னாலேயே அரசியல் நடத்தினால் நிலைமை என்னாகும்..? ம்… ஹ்ம்… என்ன செய்வது?
அந்தக் காலத்தில் சர்ச்சைகள் செய்து சமயத்தை வளர்த்தார்கள்.
இப்போது சமயத்தை வளர்க்க சர்ச்சைகள் செய்கிறார்கள்!