சிருங்கேரி தரிசனம்

சிவ ஆலயம்

சிர்ங்க கிரி என்பதே சிருங்கேரி என்றானதாம். தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இந்த யாகத்தை நடத்திக் கொடுத்தவர், விபாந்தக முனிவரின் புதல்வரான ரிஷ்யசிருங்கர். அதாவது, ‘மான் கொம்பு உடையவர்’ என்று பொருள். இவர் வாழ்ந்த பகுதியே சிருங்கேரி.
(இந்த ரிஷ்யசிருங்கருக்கு என்று ஒரு கோயிலும் சிருங்கேரி பகுதியில் உள்ளது. சிருங்கேரியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் ஒற்றையடி மலைப்பாதையில் சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். சிருங்கேரியில் இருந்து பேருந்து, ஜீப் வசதிகள் உள்ளன. மழைக் கடவுளாக இவர் வணங்கப் படுகிறார்.)
சிருங்கேரி – இயற்கை எழில் கூடிய அருமையான பகுதி. மலைப் பகுதியில் அமைந்துள்ளது ஊர். இயற்கையின் எழிலுக்கு எழில் சேர்த்தபடி ஓடுகிறது துங்கா நதி. நதியின் இரு கரையிலும் அழகாகத் திகழ்கிறது சிருங்கேரி மடமும், ஸ்ரீவித்யாசங்கரர் ஆலயமும்.
ஆதிசங்கர பகவத்பாதரின் முக்கிய சீடராகத் திகழ்ந்த சுரேஷ்வராச்சார்யரை முதலாவதாகக் கொண்டு சிருங்கேரி மடத்தின் குருபரம்பரை தொடர்கிறது.
மலையாள தேசத்தின் காலடி என்ற இடத்தில் இருந்து வடக்கு நோக்கி யாத்திரை சென்ற ஆதிசங்கரர், தாம் செல்லும் வழியில் பண்டிதர்களுடன் வாதம் செய்து, தோற்கடித்து, அவர்களைத் தன் சீடர்களாக்கினார். அப்படி ஒருமுறை… மண்டனமிச்ரர் என்ற விஸ்வரூபரிடம் வாதம் செய்தார். அவரின் மனைவி, சரஸ்வதி தேவியின் அம்சமான உபயபாரதி. அந்த வாதத்தில் விஸ்வரூபர் தோற்று, துறவறம் ஏற்றார். அவருக்கு சுரேஷ்வரர் என்ற திருநாமம் கொடுத்து சீடராக்கினார் ஆதிசங்கரர். மேலும், சாட்சாத் சரஸ்வதியின் அம்சமான உபயபாரதியும் உடன் வரவேண்டும் என வேண்டினார். அதற்கு உபயபாரதி, ”சரி… உங்கள் பின் வருகிறேன். நீங்கள் திரும்பிப் பாராமல் செல்ல வேண்டும். அப்படிப் பார்த்துவிட்டால், நான் அங்கேயே நின்றுவிடுவேன்” என்றாள்.
மேற்குத் தொடர்ச்சி மலை வழியே சீடர்களுடன் ஆதிசங்கரர் நடந்து சென்றார். அவர்களின் பின்னே உபயபாரதியும் கால் சலங்கை ‘கலீர் கலீர்’ என ஒலிக்க நடந்து வந்தாள். துங்கை நதிக்கரையோரம் வந்தபோது, அவர்கள் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டனர்.
சுட்டெரிக்கும் வெயில். தவளை ஒன்று பிரசவ வேதனையில் தவித்தது. அப்போது, விறுவிறுவென வந்த பாம்பு ஒன்று, தவளையின் மீது வெயில் படாதவாறு படம் எடுத்து பாதுகாத்தது. இதைக் கண்ட ஆதிசங்கரர், விரோதமுள்ள பிராணியிடம்கூட இரக்கமும் அன்பும் தவழும் இந்த இடத்தை தியானம் செய்ய சிறந்த இடமாகத் தேர்ந்தெடுத்தார்.
அதேநேரம், தேவியின் சிலம்பொலியும் நின்றுவிட, திரும்பிப் பார்த்தார் சங்கரர். நிபந்தனைப்படி அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் உபயபாரதி. பிறகு அங்கேயே ஸ்ரீசக்ரம் வடித்து, தேவிக்கு ‘சாரதா’ எனும் திருநாமம் சூட்டி (மரத்தில்) பிரதிஷ்டை செய்தார்.
இவருக்கு காட்சி கொடுத்த அன்னை, ”இந்த பீடம் சிருங்கேரி சாரதா பீடம் என்று அழைக்கப் படட்டும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடிகொண்டுஅருள் வழங்குவேன்” என அருள்பாலித்தாள்.
தேவி ஸ்ரீசாரதாவின் ஆலயம்… பாம்பும் தவளையும் ஒற்றுமையுடன் இருந்த தலம்… இப்படி எல்லாம் யோசித்தபோதே, என் உள்ளத்தில் விவரிக்க முடியாத உணர்ச்சி ஆக்கிரமித்தது.
அந்தத் தலத்தை எப்போது தரிசிக்கப் போகிறோம் என்ற ஏக்கத்துடன் மங்களூரு ரயில் நிலையத்தில் இறங்கினேன். நண்பர்களான கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் மற்றும் ஜோதிடர், எழுத்தாளர் சீதாராமன் ஆகியோர் அடிக்கடி சிருங்கேரி சென்று வருபவர்கள். சிருங்கேரியைப் பற்றி நிறைய தகவல்களைச் சொல்லியடியே உடன் அழைத்துச் சென்றார்கள்.
காலைப் பனியின் குளிர்ச்சி வெளியில்; அன்பு மயமான சிருங்கேரித் தலத்தின் குளுமை உள்ளத்தில்!
மங்களூருவில் இருந்து பேருந்தில் பயணித்தோம். அருமையான மலைப் பிரதேசம்; குறுகலான பாதை. சுமார் நான்கு மணி நேர பயணத்தில் சிருங்கேரியை அடைந்தோம். மடத்தின் சார்பில் நடத்தப்படும் தங்கும் விடுதிகளில் நல்ல வசதிகள் உள்ளன. முன்னதாகவே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யவும் வசதி உண்டு.
மடத்தின் கோயில் வளாகத்தில்… மிக மிக அழகாகக் காட்சி தருகிறது வித்யாசங்கரர் ஆலயம். விஜயநகர கட்டடக் கலையின் கம்பீரத்தைக் காட்டி நிற்கும் கற்கோயில். அருகில் கோபுரத்துடன் ஸ்ரீசாரதாம்பாள் கோயில். எதிர்ப்புறத்தில் ஸ்ரீநரசிம்மபாரதி யாக மண்டபம்; அழகான அமைப்பு; வேதகோஷங்கள் முழங்கிய வண்ணமாக மாணவர்கள். மனது குளிர்கிறது. தோரணவாயில் கணபதியை தரிசித்து, கோயிலுக்குள் செல்கிறோம். அன்னை சாரதாம்பாளின் அற்புத தரிசனம். கூடியிருக்கும் பக்தர்களின் கோஷத்தைக் கேட்கும்போது உடல் சிலிர்க்கிறது. வலப்புறம் பெரிய மண்டபம். அழகான ஓவியங்கள், சிற்பங்கள் கருத்தைக் கவர்கின்றன.
அடுத்து, சிற்பக் கலையின் அற்புதமாகத் திகழும் வித்யாசங்கரர் கோயிலுக்குச் செல்கிறோம். ஸ்வாமியை தரிசித்து, வெளிவரும் நம்மை மெய்ம்மறக்கச் செய்கின்றன கற்சிற்பங்கள். இங்கே, ஆதிசங்கரர், ஜனார்த்தனர், சக்தி கணபதி, வாகீஸ்வரி, அனுமன், கருடன், ராமர், ஹரிஹரன், மலையாள பிரம்மா, சுப்ரமணியர் என தனிச் சந்நிதிகளில் அருளும் தெய்வங்களை தரிசிக்கலாம்.
கோயிலை ஒட்டி ஓடுகிறது துங்கை நதி. படிகளில் இறங்கிச் சென்றால், நதியை ஒட்டி, படித்துறையில் சிறு மண்டபம். அதனுள்ளே, தவளைக்கு நிழல் தந்த பாம்பின் சிலை… வாலினைச் சுற்றியபடி காட்சி தருகிறது. சுற்றிலும் தண்ணீர்.காணும் நம் கண்களிலோ ஆனந்தக் கண்ணீர்.
படிகளில் ஏறி, பாலத்தில் செல்கிறோம். துங்கை ஆற்றின் மறுகரையில் உள்ளது சிருங்கேரி பீடாதிபதிகளின் மடம். இயற்கை கொஞ்சி விளையாடும் பச்சைப் பசேல் இடம். வெற்றிலைக் கொடிகளும் மரங்களும் நம் மனத்தை மயக்குகிறது. சற்று தொலைவில் மடம் தென்படுகிறது. அழகிய பூங்கா, நீரூற்று என்று அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறார்கள். நவீன மயமான பெரிய அரங்கு நம்மை வரவேற்கிறது. உள்ளே செல்கிறோம். பக்தர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அனைவருக்கும் சிருங்கேரி சுவாமிகள் சிரித்த முகத்துடன் பிரசாதம் வழங்குகிறார். சிலரிடம் அவர்களின் குறைகளைக் கேட்டு, அது நிவர்த்தி ஆக ஆசி அளிக்கிறார். சிலரிடம் குடும்ப நலன்களை விசாரிக்கிறார். அந்த அரங்கத்துள்ளே மேடையில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட மரத்தாலான மண்டபம். அதில் இறைவனின் விக்கிரகங்கள். சுவாமிகள் பூஜை செய்யும் இடம் இதுதான்!

Leave a Reply