பொது சிவில் சட்டம் பற்றி மகா பெரியவர் என்ன சொன்னார் தெரியுமா?

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

– Advertisement –

– Advertisement –

kanchi maha periyava

தொகுப்பு: வேதா டி .ஸ்ரீதரன்

உண்மையான ஸெக்யூலரிசம்

ஒரு நாட்டின் அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாமல், எல்லா மதங்களையும் ஏற்றத்தாழ்வின்றி சம பாவத்துடன் ஆதரிக்க வேண்டும். மதங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பகை இல்லாமல் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான ‘ஸெக்யூலரிசம்’ ஆகும்.

மதக் கொள்கைக்கு முரணான சட்டங்கள் கூடாது

தாங்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகளை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் மதங்களின் கோட்பாடுகளுக்கு விரோதமாக அரசாங்கம் சட்டம் இயற்றக் கூடாது..‘எந்த மதத்திலும் சம்பந்தப்படுவதில்லை’ என்று செக்யூலரிசத்துக்கு விளக்கம் சொல்லி விட்டு, அதற்கு விரோதமாக, மத விதிகளில் உள்நுழைந்து சட்டம் போடலாம் என்று அரசாங்கம் நினைத்தால் அதனை நாம் ஏற்பதற்கில்லை.

எல்லா மதங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட
சுதந்திரம் பெற்ற தனியமைப்பு (Autonomous Body)

ஏனைய துறைகளில் செய்வது போல – அரசாங்கம் தனக்கு ஆலோசனை தருவதற்காகக் குழு நியமிப்பது போல – மத விஷயங்களிலும் தனக்கு ஆலோசனை தரும் குழுவை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது.மாறாக, அரசாங்கம் மத விஷயங்களில் இருந்து முழுவதுமாக விலகி நிற்க வேண்டும். மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முழு நிர்வாகப் பொறுப்பும், சட்டப்படி முழுமையான அதிகாரமும் கொண்ட சுதந்திரமான ஓர் அமைப்பை (autonomous body) ஏற்படுத்த வேண்டியது கட்டாயம். மத விஷயங்களில் புதிய சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அந்த அமைப்பின் பரிந்துரைகள் அடிப்படையிலேயே சட்டம் இயற்ற வேண்டும்.

அரசாங்கம் இதில் நேரடியாகத் தலையிட்டு எந்த மாற்றமும் செய்யக் கூடாது. அரசாங்கத்துக்கும் நன்மை உண்டு

முற்காலத்தை விடத் தன்னிச்சையாக மக்கள் நடக்கத் தொடங்கி இருக்கும் காலம் இது. முந்தைய காலங்களை விட ஆசைகளையும், பேராசைகளையும் தூண்டிவிடக்கூடிய பொருள்களும், கொள்கைகளும் நாள்தோறும் மலிந்து வருகின்றன, இதனால் குற்றம் புரியும் வாய்ப்புகளும் பெருகிவிட்டன. விஷமயமான இத்தகைய சூழலுக்கு மாற்று மருந்தான அமிர்தமாகத் திகழ்வது மனிதர்களின் உள்ளங்களைப் பண்படுத்துவதே.இதற்கு அடிப்படையாக அமைவது மதங்களின் வளர்ச்சியே.நவீன விஞ்ஞானத்தாலும் புரட்சிக் கருத்துகளாலும் உலகாயத சிந்தனைகள் மேலோங்கி ஆன்மவியல் அடித்துச் செல்லப்படும் ஆபத்துக் கட்டத்தில் ஜன சமுதாயம் இருக்கிறது.இத்தருணத்தில், மக்கள் மாக்களாகி விடாமல் காக்க வேண்டுமெனில் இத்தகைய செக்யூலரிசமே நடைமுறையாக வேண்டும்.

kanchi maha periyava
kanchi periyava

அரசு போஷணை: ஹிந்து மதமும் பிற மதங்களும்

சுதந்திர பாரத அரசாங்கம் மக்களின் உள்ள உயர்வுக்குத் தனது பங்களிப்பை அளிக்க வேண்டும்.மதத்தின் மூலம்தான் அத்தகைய உயர்வு ஏற்படும் என்பதைக் கடந்த கால வரலாறுகள் தெளிவாகவே காட்டுகின்றன.ஆகவே, இங்குள்ள எல்லா மதங்களுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டியது அரசின் கடமை.அதைச் செயல்படுத்தும்போது, மிகவும் பாதிப்புக்கு உள்ளானதும், பெரும்பாலான மக்களுக்கு உரியதுமான ஹிந்து மதத்துக்குத்தான் அதிகப் பொருளுதவி அளிக்க வேண்டும்.

தந்திரங்கள் மூலம் மதம் மாற்றுவது
கற்பழிப்புக்கு இணையான குற்றமாகக் கருதப்பட வேண்டும்

ஒரு பிரஜையின் மதச் சுதந்திரம் என்பது அந்நபர் சுதந்திரமாகவும், சுய விருப்பத்தின் பேரிலும் ஒரு மதத்தைத் தழுவியிருப்பதற்கான உரிமையாகும்.இது அவரது உள்ள உயர்வு என்ற மிகவும் உத்தமமான விஷயம் தொடர்பானது.உள்ள உயர்வு கண்ட பிரஜைகளால்தான் ஒரு நாட்டின் நலவாழ்வு அமைய முடியும்.எனவே, அதற்கு ஊறு விளைவித்தால் அது சாதாரணக் குற்றங்களில் சேராமல் பெரிய குற்றங்களிலேயே சேரும். மதச் சுதந்திரம் என்பது அரசியல் நிர்ணயச் சட்டத்தின் அங்கீகாரம் பெற்றுவிடும்போது அச்சுதந்திரத்தில் குறுக்கிடுவதும் மிகப்பெரும் குற்றமாகும் என்ற காரணத்தையும் கருத்தில் கொண்டால், பொய்ப் பிரச்சாரம், பலவந்தம், வசிய உபாயம் ஆகிவற்றால் மத மாற்றம் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பது புரியும். எனவே, அதற்குரிய கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.இத்தகைய குற்றங்களுக்கு deterrant punishment என்ற வகையிலான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.அதாவது, தண்டனை பற்றிய அச்சத்தினாலேயே ஒருவர் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடாதபடி தடுக்குமளவு கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அது சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும்.

ஒருவரது உள்ள உயர்வுக்கே ஊறு விளைவித்து, அவரது கொள்கை நோன்பைக் குலைப்பது கொள்ளையடிப்பதற்கும் கற்பழிப்பதற்கும் இணையான குற்றமே.

மத மாற்றத் தடை என்பதுமத உரிமையைப் பறிப்பதல்ல

பழைய காலத்தில் இருந்து நவீன காலத்துக்கு வரும்போது எந்த ஒரு ராஜ்யமும் மற்ற ராஜ்யங்களின் மீது படையெடுப்பது தப்பு என்பதைக் கொள்கை அளவில் அத்தனை தேசத்தாரும் ஒப்புக் கொண்டிருக்கிறோம் அல்லவா? ஆதிகால ராஜ்ய விஸ்தரிப்புக் கொள்கையை இப்போதைய சூழ்நிலையில் சொல்லிக் கொண்டிருந்தால் சரிப்படுமா?

அதுபோலவே, ஆதிகாலத்தில் நடந்த மத மாற்ற, மத விஸ்தரிப்புக் கொள்கையை இந்தக் காலத்தில் சொல்வதும் கொஞ்சம் கூடச் சரிப்படாது.

மத மாற்றம் இருக்கும்வரை தாய்மதம் திருப்பும் பணிகளும் அவசியம்

சட்டம் இயற்றிவிடுவதால் மட்டுமே எந்தக் குற்றமும் நிகழாமல் தடுத்து நிறுத்திவிட முடிவதில்லை.எல்லா நாடுகளிலும் எல்லாக் குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.அதுபோலவே இத்தகைய மத மாற்றக் குற்றங்களும் நடைபெற வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எனவே, இத்தகைய மத மாற்றங்கள் நடைபெறும் வரையில் அவற்றுக்கு எதிர் நடவடிக்கையாகத் தாய் மதத்திற்கே மீண்டும் மதம் மாற்றுவதைக் குற்றமாகக் கருதாமல் அரசாங்கம் அநுமதிக்க வேண்டும்.

சுதந்திரம் என்றால் என்ன?

இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்? தொன்மையான பாரத தேசத்தவர்களாகிய நாம் மீண்டும் நமது ஆன்மிக நாகரிகத்திற்கே திரும்பி, எளிமையான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், பண்பட்ட உள்ளத்தால் பெரியவர்களாகவும் விளங்கி, உலக நாடுகளிடையே தனி ஸ்தானம் பெற்ற உன்னத தேசமாகத் திகழ்ந்து, இதர தேசங்களுக்கும் நல்வழி காட்டி அனைவரும் உய்வடைய முயற்சி செய்யப் போகிறோமா? அல்லது நமது ஆன்மிக நாகரிகத்தில் இப்போது எஞ்சி நிற்கும் அம்சங்களையும் மனதறிந்து நாமாகவே பறிகொடுத்து, நமக்கு அரசியல் சுதந்திரம் கொடுத்து வெளியேறிய அந்நிர்களின் உலகியல் நாகரிகத்துக்கு அடிமைப்பட்டவர்களாகவே இனிமேலும் இருந்து, ஏனைய நாடுகளில் பின்தங்கிய ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கப் போகிறோமா? தற்போது இதுதான் எம் மனத்தை மிகவும் கவலைப்படுத்தும் பெரிய கேள்வியாக நிற்கிறது.

State Religion

மிகப் பெரும்பாலான பிரஜைகளால் பின்பற்றப்படுவதும் – உலகின் அனைத்து மதங்களுக்கும் முற்பட்டதும் – ஏராளமான பிற மதங்களுக்கும் ஆதாரக் கொள்கைகள், சடங்குகள் ஆகியவற்றை அளித்துள்ளதும் -, குறிப்பாக, பல்வேறு மதங்களும் ஒரே பரம்பொருளை அடைவதற்கான பல்வேறு வழிகள்தான் என்று பரந்த திருஷ்டியுடன் கூறி அவற்றின் உரிய வளர்ச்சிக்கு ஆதரவு தரும் ஒரே மதமாகத் திகழ்வதும் – எல்லாவற்றுக்கும் மேலாக, தான் விமரிசையாகக் கொடிகட்டிப் பறந்த பொற்காலத்திலும்கூட மத மாற்றத்தில் ஈடுபடாததுமான ஹிந்து மதத்தை சுதந்திர பாரதத்தின் State Religion என்பதாக — அரசாங்கத்தின் மதமாக — ஏற்பதில் மிகுந்த நியாயமிருப்பதாகக் கருதுகிறோம். இதனால் பிற மதங்களின் நியாயமான வளர்ச்சி ஒரு விதத்திலும் தடைப்படாது என்பது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

கல்வித் திட்டத்தில் மாற்றம் தேவை

இன்றைய கல்விமுறையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது ஹிந்து மதத்தினரே, ஹிந்து மதம் தவிர பிற மதங்களைச் சார்ந்தவர்கள் மாத்திரம் தங்களுக்கென இருக்கும் பள்ளிகளில் தமது மதபோதனையை நன்கு நடத்துவதாகவும், பெரும்பான்மையினரான ஹிந்து மாணவர்கள் அதனைப் பெறாமல் நன்னெறி போதனை (moral Instruction) என்று பெயரளவில் ஏதோ சிறிது படிப்பதுமாகவே உள்ளது. இளவயதில் பாடங்கள் நன்கு மனதில் பதியும். ஆனால், பள்ளிப் படிப்பு, அதன் தொடர்ச்சியாக வீட்டிலும் ஹோம்ஒர்க், சிறிது நேரம் விளையாட்டு முதலானவை மட்டுமே ஹிந்து மதச் சிறுவர்களின் நேரம் முழுதையும் ஆக்கிரமித்திருக்கும் நிலையில் அவர்களுக்குச் சமய அறிவும், அதனால் ஏற்படும் மத அபிமானமும் மறுக்கப்பட்டு விட்டன. ஹிந்துக்களுக்குத் தமது பண்பாட்டை இழுக்காகக் கருதும் புத்தியும், மேல்நாட்டு நாகரிகத்தில் மோகமும் ஏற்பட்டிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இந்தக் கல்விமுறையே.இத்தகைய கல்விமுறையை அதன் அடித்தளத்திலிருந்தே மாற்ற வேண்டியது அவசியம்.

மத சுதந்திரத்துக்காகவும் போராட வேண்டும்

அரசியல் சுதந்திரத்துக்காகப் போராடியது போல
மத சுதந்திரத்திற்காகவும் மக்களே போராட வேண்டும்

இப்போது பொது ஜனங்களேதான் – குறிப்பாக, அந்நிய நாடுகளின் உலகாயதம் சார்ந்த கொள்கைக்கு மாறாக பாரதத்திற்கே உரிய ஆன்மிக மரபில் நாட்டம் கொண்டவர்களாக இன்றைக்கும் வாழ்ந்து வரும் அறிஞர் பெருமக்களேதான் – செயற்களத்தில் முழுமூச்சுடன் குதித்து, சகப் பிரஜைகளையும் தட்டியெழுப்ப வேண்டும் என வற்புறுத்துகிறோம். சுதந்திரம் பெற்றுள்ள இந்தச் சூழ்நிலையில், பாரதத்தை உண்மையான ஸ்வ-தந்திர நாடாக – பாரத தேசத்துக்கே உரிய ஆன்மிகத்தைக் கைக்கொள்ளும்  நாடாக – புத்துயிர் கொள்ளச் செய்யும் அரிய வாய்ப்புக் கிட்டியுள்ளது. ஆனால், புதிய அரசாங்கம் அந்த வாய்ப்பை நெஞ்சாரப் பறிகொடுத்துவிடும் நிலைதான் ஏற்படுமோ என்றே எமக்குத் தோன்றுகிறது. எனவே, உண்மையை உணரும் அறிவு படைத்த மேன்மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை மனப்பூர்வமாக ஏற்று, மற்றவர்களையும் தட்டி எழுப்பும் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு ஆர்வமுடன் பணியில் ஈடுபடவேண்டும் என வற்புறுத்துகிறோம். அரசியல் சுதந்திரத்திற்காக ஆர்வத்துடன் போராடத் தொண்டர் படை திரண்டது போலவே, நமது ஆன்மிகச் சுதந்திரத்திற்காகப் போராடுவதற்கும் ஒரு சாத்துவிகப் படை திரள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்! இதற்கு உறுதுணையாக என்றும் உடன் நிற்குமாறு ஈசனையும் கூவியழைத்து வேண்டுகிறோம்.அவ்வாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு நன்மக்கள் யாவரையும் தூண்டுகிறோம்.

அருளாசி

நமக்குக் கிடைத்துள்ள அரசியல் சுதந்திரம் அவருடைய அருளால் நமது தேசத்திற்கே உரிய ‘ஸ்வ’தந்திரமாகி, அரிய பயன்களாகிய அறத்தையும், அற வாழ்வின் மாறுபடாத பயன்களைத் தரும் இன்பத்தையும், இறுதியில் பேரின்பமான வீட்டையும் அளிக்கட்டும்!

பண்டைய பாரதம் போலவே இன்றைய சுதந்திர பாரதமும் உயரிய தியாக லட்சியத்தில் உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ வேண்டுமெனப் பிரார்த்தித்து வாழ்த்துகிறோம்.

– Advertisement –

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply