e0af8d-e0aea8e0aebfe0aea9e0aea4.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 27
நினது திருவடி திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நினது திருவடி திருப்புகழ் என்ற இந்தத் திருப்புகழும் விநாயகரைத் துதிக்கும் திருப்புகழாகும்.
“கடுமையானபோரில், பல்வேறு தாள வாத்தியங்கள் முழங்க தன்னை எதிர்த்துப் போரிட்ட அவுணர்களைக் கொன்ற பெருமித முடைய முருகக் கடவுளே! நான் விநாயக மூர்த்தியை வலஞ் செய்து, மலர்களைத் தூவி, துதி செய்து, தோப்புக் கரணம் போட்டு சிரசில் குட்டிக் கொண்டு, அவரை வணங்க மறக்க மாட்டேன்” என்று இப்பாடலில் அருணகிரியார் பாடுகிறார். பாடல் இதோ…
நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ……நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் …… இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை …… வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை …… மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் …… செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் …… செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் …… எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் …… பெருமாளே.
இந்தப் பாடலில் நாம் விநாயகரை வழிபடும் போது என்னென்ன பொருட்களெல்லாம் அவருக்குப் படைக்கலாம் என்று சொல்லப் படுகிறது.
மேலும் விநாயகப் பெருமான் கடலைக் குடித்த கதை இடம் பெறுகிறது. மேலும் நாம் காதுகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு, தோப்புக்கரணம் ஏன் போடுகிறோம் என்ற செய்தியும் மறைமுகமாக உள்ளது. இவை மட்டுமல்லாமல் ஒரு போர்க்களத்தில் என்னென்ன வகையான தாளக்கருவிகள் இசைக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்களத்தில் ஒலிக்கும் தாளக் கருவிகள்
திமித திமி திமி என்று ஒலிக்கும் மத்தளமும்,இடக்கை என்ற வாத்தியங்களும், செக சேசே என்று ஒலிக்கவும், ஒத்து என்ற ஊதுகுழல் துகு துகு துத்து என்று ஊதவும், இடியை நிகர்த்து உடுக்கைகள் ஒலிக்கவும், தவில் என்ற வாத்தியம் டிமுட டிமு டிமு டிட்டி என்று ஒலிக்கவும், பேய்கள் ஒன்றோடொன்று மாறுபட்டு கையிலே உள்ள பறைகளைக் கொட்டி முழக்கவும்,இரண பைரவி என்ற தேவதை போர்க்களத்தில் சுற்றி நடனம் புரியவும், எதிர்க்கின்ற அரக்கர்களைக் கொன்று அருளியவர் முருகப் பெருமான் என இவ்வரிகளில் அருணகிரியார் பாடுகிறார்.
விநாயகருக்கு, பூஜை செய்யும் முறை
“முருகப் பெருமானின் திருவடியையும், வேலையும், மயிலையும், சேவலையும் நினைந்து ஒழியாது தியானிக்கின்ற அறிவை விநாயகரிடம் பெறும் பொருட்டு, நிறைய அமுது, மா, வாழை, பலா என்ற முக்கனிகள், அப்பம், பால், தேன், நீண்டு வளைந்த முறுக்கு, கரும்பு, இலட்டு, ஒளிநிறைந்த அரிசி, பருப்பு, எள், பொரி, ஒப்பில்லாத இனிய பழ வகைகள், இளநீர் என்ற இவைகளை மன மகிழ்ச்சியுடன் தொட்டு உண்ணுகின்ற திருக் கரத்தையும், ஒப்பற்ற மகராலயமாகியக் கடலைத் தொட்டு உண்ட தும்பிகையையும் உடைய, பெருமை வளர்கின்ற யானை முகமும் ஒற்றைக் கொம்பும் உடைய விநாயகமூர்த்தியை வலஞ் செய்து, அவருக்கென்று உரிய மலர்களைத் தூவி, உயர்ந்த சொற்களால் துதி செய்து, கரங்களைத் தூக்கி தோடணிந்த காதுகளைப் பற்றித் தோப்புக் கரணம் போட்டு சிரசில் குட்டிக்கொண்டு, அவருடைய பரிபுரம் அணிந்த தாமரைமலர் போன்ற திருவடிகளின் அர்ச்சனை செய்ய நான் மறக்க மாட்டேன்” என்று அருணகிரியார் பாடுகிறார்.
மனிதர்களிடையே மூன்று குணங்கள் காணப்படுகின்றன. அவையாவன சாத்விக குணம், இராஜச குணம், தாமச குணம் ஆகும்.
சாத்வீகம் வெள்ளை நிறத்தையும், இராஜசம் சிவப்பு நிறத்தையும், தாமசம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும் என்பர். முக்குணங்களும் உணவினாலேயே அமைகின்றன. அவல் பொரி அப்பம் பழம் பால் தேன் முதலிய உணவுகள் சத்துவ குணத்தை வளர்க்கின்றன.காரம், புளி, ஈருள்ளி, வெங்காயம்,முள்ளங்கி முதலிய உணவுகள் ராஜஸ குணத்தை வளர்க்கின்றன.பழையது, பிண்ணாக்கு, மாமிசம் முதலிய உணவுகள் தாமச குணத்தை வளர்க்கின்றன.தூக்கம், சோம்பல், மயக்கம் முதலியன தாமச குணத்தால் வருவன.கோபம், டம்பம், வீண்பெருமை, அகங்காரம் முதலியன ராஜஸ குணத்தால் வருவன.சாந்தம், அன்பு, அடக்கம்,பொறுமை, கருணை முதலியன சத்துவ குணத்தால் வருவன.சத்துவ குணத்தால் தூய அறிவு தோன்றும். அறிவின் சொரூபம் விநாயகர். அவருக்கு சத்துவகுணப் பொருள்களை நிவேதிப்பதனால் சாந்தமும் நல்லறிவும் நமக்கு உண்டாகும்.
எனவே விநாயகருக்கு நாம் படைக்கும் எல்லாப் பொருட்களும் நமக்கு சத்துவ குணத்தை ஏற்படுத்தக் கூடியவை.
திருப்புகழ் கதைகள்: நினது திருவடி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.