அறப்பளீஸ்வர சதகம்: நன்மை தீமை பகுத்தல்..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்

சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்
சொல்லும்நல் நெல்லை எள்ளைத்
தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்
தொண்டரைத் தொழுதொ ழும்பை
நவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்
நற்றமிழ்க் கவிவா ணரை
நலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க
நயமுள்ள நாரியர் தமைப்
புவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்
போர்வீர ரைத்தூ யரைப்
போதவும் பரிவோ டிதஞ்செய்ய மிகுபயன்
புகழ்பெறக் கொள்வர் கண்டாய்
அவமதி தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

தீயஅறிவை நீக்கி என்னை அடிமை கொண்ட வள்ளலே!, தலைவனே!, அருமை தேவனே!, சுவை பொருந்திய
கரும்பையும், வெண்மையான பாலையும்,
பருத்தியையும், சொல்லும் சொல்லப்படுகின்ற நல்ல
நெல்லையும், எள்ளையும், தூய்மை
பொருந்திய தென்னம் பழத்தையும், மதிக்காத தீயவர்களையும், அடிமையாளரையும்,
குற்றேவேல் செய்வோரையும், குற்றம் நீங்கும்படி, கண்டனம் செய்தே, அவர்களால் ஆன பயனைப் பெறுவார்கள், நல்ல தமிழைக் கற்றுச் சிறந்த புலவரையும், நன்மை மிகுந்த செழித்த பூவையும், ஓவியத்தில் எழுதிய பாவை என்று சொல்லத் தகுந்த அழகுள்ள பெண்களையும், பூமியின் மீதில் உதவி செய்ய வேண்டுமென்று மனம்
படைத்தோரையும், சிறுவரையும், போர்
வீரர்களையும், தூய்மை பொருந்திய பெரியோர்களையும், மிகுதியான அன்போடு மிகுந்த பயன்களை அவர்களுக்குப் புகழ் உண்டாகும்படி கொள்வார்கள்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply