அண்ணா என் உடைமைப் பொருள் (56): அண்ணாவும் நானும்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna en udaimaiporul 2 - 6
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 56
அண்ணாவும் நானும் – 2
– வேதா டி. ஸ்ரீதரன் –

ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று அண்ணாவைப் பார்க்கப் போயிருந்தேன். திருவான்மியூர் அறையின் முன்புறத்தில் இருக்கும் வீட்டில் பூஜை அறை உண்டு. அண்ணா அங்கே அமர்ந்திருந்தார். என்னையும் உள்ளே வந்து உட்காரச் சொன்னார்.

அப்போது, ‘‘யார் யாரோ வந்து என் கிட்ட ப்ரார்த்தனை பண்றா. அனுக்ரஹம் பண்ணணும், ஆசீர்வாதம் பண்ணணும்ங்கறா. போன வாரம் பத்மா ஶ்ரீநாத் வந்திருந்தா. அவளுக்கு அமெரிக்கா போறதுக்கு விசா டிலே ஆயிண்டே போறதாம். அவ பொண்ணு இங்கே டெலிவெரிக்காக வரணுமாம். பொண்ணு வர்றதுக்குள்ள ஸ்டேட்ஸ் போயி வேலையை முடிச்சுட்டு வரணுமேன்னு இருக்கு. நீங்க தான் அனுக்ரஹம் பண்ணணும் அண்ணா-ன்னு என் கால்ல விழுந்தா. என்னை நமஸ்காரம் பண்ணிட்டுப் போன மறு நாள் அவளுக்கு விசா வந்திடுத்தாம். உங்களோட அனுக்ரஹம் தான் அண்ணா-ன்னு ஃபோன் பண்ணினா….

‘‘எல்லாரும் என் கால்ல விழறாளே, எனக்கு என்ன தெரியும்னு தோணும். அம்பாள் கிட்ட ப்ரார்த்தனை பண்ணுவேன். அம்மா, இவா எல்லாரும் என் கிட்ட ப்ரார்த்தனை பண்றா. இவாளுக்கு நல்லது எது, கெட்டது எது-ன்னு இவாளுக்குத் தெரியலை. எனக்கும் தெரியாது. உனக்குத் தான் தெரியும். எல்லாருக்கும் எது நல்லதோ, அதைத் தான் நீ பண்ணுவே. அதையே இவாளுக்கும் பண்ணு-ன்னு ப்ரார்த்தனை பண்ணிக்கறேன்-னு வேண்டிப்பேன்’’ என்று குறிப்பிட்டார்.

இந்த வார்த்தைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்தன.


பத்மா ஶ்ரீநாத் என்பவர் எனக்கு நன்றாகத் தெரிந்தவர் போல அண்ணா அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டார். ஆனால், அவர் யார் என்பதே அப்போது எனக்குத் தெரியாது. அந்தப் பெயரை அப்போது தான் முதன் முதலாகக் கேள்விப்பட்டேன். வெகு விரைவிலேயே அண்ணா மூலமாக அவருடைய அறிமுகம் கிடைத்தது. பிற்காலத்தில் சாரதா பப்ளிகேஷன் வெளியிட்ட நூல்களின் ஆங்கில மொழிநடையைச் சரி செய்து தந்தவர் அவரே. தற்போது வரை, பள்ளிக் கல்வி சம்பந்தமான விஷயங்களில் எனது வழிகாட்டியாக விளங்குபவரும் அவரே.


அண்ணா பணிபுரிந்த காலத்தில் கல்கி பத்திரிகையில் வாரம் இரண்டு சிறு கதைகள் பிரசுரிப்பார்கள். பெரும்பாலும், கதைகளைத் தேர்ந்தெடுக்கும் வேலை அண்ணாவிடம் வந்து சேரும். இதைப் பற்றி ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார்:

‘‘ஃபைலை என் கிட்ட கொடுத்து ரெண்டு கதை செலக்ட் பண்ணித் தரச் சொல்லுவா. நான் அந்தக் கதைகளையெல்லாம் படிச்சுப் பார்ப்பேன். எந்த அடிப்படையில செலக்ட் பண்றதுன்னே எனக்குப் புரியாது. நல்லா இருக்கு, நல்லா இல்லைன்னு எதை வச்சு முடிவு பண்றது? இதுக்கு எதாவது யார்ட்ஸ்டிக் இருக்கா? அந்தக் கதையை எழுதினவனுக்கு அது பிடிச்சுத் தானே இருக்கு? இல்லேன்னா அவன் எழுதியே இருக்க மாட்டானே! அவனை மாதிரியே இருக்கற மத்தவாளுக்கும் அதைப் பிடிக்கத் தானே செய்யும்? இதுக்கெல்லாம் தகுதி-ன்னு ஒண்ணை யாரு முடிவு பண்றது? எந்த அடிப்படையில முடிவு பண்றது?’’

anna alias ra ganapathy9 - 3

இந்தக் கேள்வி அடிக்கடி என் மனதில் எழும்.

சரி எது, தவறு எது? தகுதி என்றால் என்ன, தகுதியின்மை என்றால் என்ன?

ஆம், வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் அளவுகோல்கள் எத்தகையவை?

இவற்றையெல்லாம் யார் முடிவு செய்வது? எந்த அடிப்படையில் முடிவு செய்வது?


தெய்விக விஷயம் தான் எழுதுகிறோம் என்றாலும், எழுத்துப் பணிகளை, அண்ணா, ஒரு சுமையாகவே கருதினார். துறவறம் ஏற்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.

துறவறம் வேண்டும் என்று இரண்டு முறை பெரியவாளிடம் அனுமதி கேட்டுப் பார்த்தார். பெரியவா பதிலேதும் சொல்லவில்லை.

மூன்றாவது முறை அனுமதி கேட்டுப் போனபோது, அண்ணா, ‘‘இமய மலையில் ஏகாந்தமாய் அமர்ந்து தவம் செய்யும் நாள் எப்போது வாய்க்குமோ?’’ என்று பொருள் தரும் ஒரு சித்தர் பாடலைப் பாடி விட்டு, பெரியவா முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாராம்.

அதற்குப் பெரியவா, ‘‘நான் இங்கே உக்கார்ந்து வயிறு வளர்த்திண்டிருப்பேனாம், நீ என்னடான்னா, என்னை விட்டுட்டு தனியா ஹிமாலயாஸ் போயி தபஸ் பண்ணி மோக்ஷம் போயிடுவியாம். தோ பாரு, நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்’’ என்று சொன்னாராம்.

anna alias ra ganapathy3 - 4

(பெரியவா, ‘‘நான் உருப்பட மாட்டேன், உன்னையும் உருப்பட விட மாட்டேன்’’ என்பதை ராகத்தோடு சொன்னாராம். அண்ணா அப்படியே அதை எனக்குப் பாடிக் காட்டினார்.)

அண்ணாவுக்குப் பெருத்த ஏமாற்றம்.

சிறிது நேரத்துக்குப் பின்னர், அண்ணாவிடம் பெரியவா, ‘‘எழுத்து-ங்கற கர்மா வாய்ச்சிருக்கு. ஸத் விஷயம்-னாலும் எழுதறது பிடிக்கலே. பரவாயில்லை. முடிஞ்ச வரைக்கும் பண்ணிண்டிரு. எதையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ண வேண்டாம். புரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்லை. உன்னால புரிஞ்சுக்கவும் முடியாது’’ என்று சொன்னாராம்.

அதன்பிறகு அண்ணா துறவறம் பற்றிப் பேச்சே எடுக்கவில்லை.


ஒருமுறை ஓர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு மனிதருடன் எனக்கு ஓர் உரசல். நேரே அந்த அலுவலகத்துக்குப் போய், அவரைக் கன்னாபின்னா என்று திட்ட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். சில காரணங்களால் அது தாமதமாகிக் கொண்டு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அண்ணாவைப் பார்க்கப் போகாமல் தவிர்த்து வந்தேன். நேரில் போனால், ஒளிக்காமல் எல்லா விஷயங்களையும் அண்ணாவிடம் சொல்லி விடுவேன். திட்டுவதோ, சண்டை போடுவதோ அண்ணாவுக்குப் பிடிக்காது. எனக்குத் தடை போட்டு விடுவார். அதன் பின்னர் என்னால் அந்த மனிதரிடம் கோபத்தைக் காட்ட முடியாது. எனவே, அண்ணாவிடம் போவதைத் தாற்காலிகமாகத் தவிர்த்தேன்.

அண்ணாவோ, ஏதேதோ பணிகளைச் சொல்லி அனுப்பிய வண்ணம் இருந்தார்,  அத்தனை வேலைகளையும்  முடித்து, உரிய பொருட்களை எடுத்துக் கொண்டு நானே அண்ணாவிடம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் நேரில் போய் விட்டேன்.

anna alias ra ganapathy8 - 5

இருந்தாலும், சண்டை விஷயத்தை அண்ணாவிடம் சொல்லாமல் தவிர்க்க விரும்பினேன். அண்ணா விடவில்லை. ‘‘வேற என்ன விஷயம், வேற என்ன விஷயம்?’’ என்று திரும்பத் திரும்பக் கேட்டார். அதற்கு மேல் என்னால் மறைக்க முடியவில்லை. முழு விவகாரத்தையும் அண்ணாவிடம் ஒப்புவித்தேன்.

‘‘சாரதா பப்ளிகேஷன்ஸை நீ தான் நடத்தறயா?’’ என்று கேட்ட அண்ணா, ‘‘இல்லைடா குழந்தை, அம்பாள் தான் நடத்தறா.  அண்ணா சொல்றேன். சாரதா பப்ளிகேஷன்ஸை சாரதை தான் நடத்தறா.  அம்பாளே நடத்தறாள்-னா ஏன் இவ்வளவு அப்ஸ் அன்ட் டௌன்ஸ்-னு உனக்குத் தோணலாம். உனக்குப் புரியாது.  உன்னால புரிஞ்சுக்கவும் முடியாது. புரிஞ்சுக்க முயற்சியும் பண்ணாதே…. இஃப் அட் ஆல், உன்னால யார் கிட்டயாவது இந்த விஷயத்தைப் பத்தி அன்பா பேச முடிஞ்சா பேசு. இல்லாட்ட அப்படியே விட்டுடு’’ என்றார்.


வாழ்வில் எனக்கு சம்பந்தமே இல்லாத காரணங்களால் எனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். இது தான் கர்ம வினை என்பதோ என்று நினைத்தேன். இதைப்பற்றி அண்ணாவிடம் கேட்கலாம் என்று தோன்றியது.

ஒருமுறை அண்ணாவிடம் போயிருந்த போது, ‘‘அண்ணா, கர்மா, கர்மா-ன்னு சொல்றாளே, அண்ணா’’ என்று ஆரம்பித்தேன். அண்ணா என்னை மேற்கொண்டு பேசவே விடவில்லை

‘‘இதோ பாரு, ஒரு பைத்தியம் தன்னைத் தானே சவுக்கால அடிச்சுக்கறதுன்னா அதுக்கு என்ன காரணம் சொல்லுவே? அது பைத்தியம். அப்படித்தான் இருக்கும். அதுக்கு யாரு என்ன காரணம் சொல்றது? பராசக்தியும் பைத்தியம் தான். அவள் மகா மாயை. அவ என்ன பண்றா, ஏன் பண்றா-ன்னு நம்மால புரிஞ்சுக்க முடியாது. குழப்பிக்காதே’’ என்றார்.


அண்ணாவுடன் பல வருடங்கள் இருந்தும் என்னிடம் எந்த மாற்றமும் இல்லை தான்.

அதேநேரத்தில் –

எது நல்லது, எது கெட்டது என்று இந்த உலகத்தில் சொல்கிறோமோ, அது உண்மையில் நல்லது-கெட்டது அல்ல என்பது புரிகிறது.

என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியாது என்கிற தெளிவு இருக்கிறது.

வாழ்க்கையில் எதையோ புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் மறைந்து விட்டது.

அதாவது –

புரிய வைக்கப்பட்டிருக்கிறது.

தெளிவு தரப்பட்டிருக்கிறது.

ஆர்வம் அகற்றப்பட்டிருக்கிறது.

இது தான் அண்ணா எனக்குச் செய்த அனுக்கிரகம்.

அண்ணா என் உடைமைப் பொருள் (56): அண்ணாவும் நானும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply