ஒரு நாள் வைகுண்ட ஏகாதசி. கிருஷ்ணனை தரிசிக்க மகரிஷிகளும் பக்தர்களும் துவாரகை வந்திருந்தார்கள். அப்பொழுது அவர் ஒரு சின்ன நாடகத்தை அரங்கேற்றினார். தலைவலியால் அவதிப்பட்டார். என்ன செய்தாலும் என்ன கொடுத்தாலும் அவர் தலைவலி போகவில்லை.
நாரதர், தலைமையில் ருக்மணி, பாமா சென்று இந்தத் தலைவலிக்கு மருந்து என்னவென்று சொல்லுங்கள், கொண்டுவந்து தருகிறோம் என்று கேட்டனர். என் மீது உண்மையான பக்தியுள்ள பக்தனின் பாதத்துளிதான் மருந்து. அந்தப் பாதத் தூசியை எடுத்துவந்து என் நெற்றியில் தடவினால் என் தலைவலி போய்விடும் என்கிறார் கண்ணன். இதைக்கேட்ட அவர்கள் திகைத்தனர். அவர்களின் பாதத்துளியை பகவான் மீது தடவி அந்தப் பாவத்தைச் சுமக்க அவர்கள் தயாராக இல்லை.
கிருஷ்ணன் உடனே பிருந்தாவனம் சென்று கோபியர்களிடம் கேள் என்றார். நாரதர் பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனுக்கு வந்துள்ள பிணியையும் அதற்கான மருந்தையும் கோபியர்களிடம் சொன்னார். உடனே அவர்கள் எங்களில் சிறந்த பக்தை யாரென்று சோதிக்க நேரமில்லை என்று கூறிக் கொண்டே கீழே ஒரு துணியை விரித்து எல்லாப் பெண்களின் பாதத்தின் துளி அந்தத் துணியில் படுமாறு ஒவ்வொருவரும் நடந்து சென்றார்கள்.
மேலும் கிருஷ்ணன் குணமானால் போதும். எங்களுக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும், நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று பாதத்துளிகளின் மூட்டையைக் கட்டி நாரதரிடம் கொடுத்தனர். நாரதர் உடனே துவாரகை வந்து கிருஷ்ணனிடம் நடந்ததெல்லாம் கூறி பாதத்துளியின் மூட்டையைக் காட்டினார்.
கிருஷ்ணன் மூட்டையைப் பிரித்து பிருந்தாவனப் பெண்களின் கால்தூசியை தனது நெற்றியில் பூசிக் கொண்டார். கிருஷ்ணனுக்குத் தலைவலி பறந்துவிட்டது.
பகவான் பக்தர்களை எந்த அளவு நேசிக்கிறான் என்பதும், அவன் திருவடிகளைத் தாங்கிய பக்தனின் திருவடியின் மகிமை எந்தளவு உயர்ந்தது என்றும், தங்களுக்கு பாவமே வந்தாலும் பரமனுக்காக உருகும் கோபியர் மகிமையையும் முக்கியமாக இதிலிருந்து தெரிகிறது.
பக்தியின் தன்மை.. புரிய வைத்த பரமன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.