e0af8d-e0ae89e0ae95e0af8de0ae95.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 24
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
மயிலை குதிரையாக உருவகம் செய்தல்
உக்கிர துரகமாகிய மயில்
பாடலின் முதல் பத்தி
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர …… கமுநீபப்
முருகப் பெருமானின் வாகனமாகிய மயிலைப் பற்றிப் பாடுகிறது. பட்சியெனும் உக்ர துரகம் என்ற சொற்களில் மயிலைக் குதிரையாக அருணகிரியார் உருவகம் புரிந்துள்ளார்.
வேறு சில திருப்புகழ் பாடல்களிலும் மயிலைக் குதிரை எனக் குறிப்பிடுகிறார். அவையாவன சம்ப்ரம மயூரதுரகக்கார (சந்தனசவாது என்ற திருப்புகழ்); ஓகார பரியின் மிசை (இரவியென); நடநவில் மரகததுரகம் (தவநெறி); வெங்கலாப ஒருபராக்ரம துரகம் (பொதுவாய்); ஆடும்பரி என்று கந்தர் அநுபூதியில் என பல பாடல்களில் அருணகிரியார் மயிலைக் குதிரையாக உருவகப்படுத்தி யுள்ளார்.
பக்கரை என்பது குதிரைக்கு அணிவிக்கும், குதிரையில் பயணிக்கும் நபர் காலை வைத்துக் கொள்ள உதவும் அங்கவடி ஆகும். விசித்திர மணி என்பது விசித்திரமாக இரத்தின மணிகளைப் பதிய வைத்துள்ளன என்பதாகும்.
பொன்கலணை இட்ட என்பதில் உள்ள கலண் என்பது சேணம் ஆகும். நடை என்பதற்கு வேகமான நடையை உடைய என்று பொருள். பட்சி என்னும் உக்ர துரகமும்என்பதற்குபட்சி என்று சொல்லப்படும் உக்கிரமுடைய குதிரையாகிய மயில் வாகனம் என்று பொருள்.
அக் குவடு பட்டு ஒழிய என்ற வரியில் கிரவுஞ்ச மலையின் மீது வேல்விட்ட வரலாறு சொல்லப் படுகிறது. அகத்தியர், சிவபெருமானின் அருள் பெற்று, தென் திசைநோக்கி வரும் வழியிலே மாயமாபுரம் என்னும் இடம் வந்தது. அந்த இடத்தில் தலைவனாக இருந்தவன், சூரபன்மன் துணைவனாகிய தாரகாசுரனுக்கு உறுதுணையாயிருந்து பற்பல மாயங்களைப் புரிந்து தேவர்களையும், முனிவர்களையும் கொல்லுகின்ற கிரவுஞ்சன் என்னும் அசுரன் ஆவான்.
அவன் அன்றில் வடிவத்தை உடையவன். அவனுடைய மாயை களையும் வல்லமைகளையும் அளவிட்டு உரைத்தல் அரிது. மண்ணுலகை விண்ணுலகாக்குவான்; விண்ணுலகை மண்ணுலகாக்குவான்; காலைக் கதிரவனை மாலை மதியமாக்குவான். மதியை மயக்கி பரிதியாக்குவான்; மேருவை அணுவாகவும், அணுவை மேருவாகவும், வடவா முகாக்கினியை நீராகவும், நீரை வடவாமுகாக்கினியாகவும் இவ்வாறே ஒன்றையொன்றாக மாற்றுவான்.
இத்தகைய மாய வல்லனாகிய அவ்வசுரத் தலைவன் விந்தியமலை போல் சிகரங்களை ஆகாயம் வரை உயர்த்தி, பெரியதோர் மலை வடிவங் கொண்டு தன்னுள் வழியும் ஒன்று செய்து நின்றான். அம்மலைக்குள் ஒரு குரோச தூரஞ் சென்ற அகத்திய முனிவர் வழி காணாது நின்றார்.பின்னர் ஒரு வழிகாணப்பட்டது. அவ்வழியில் அவர் செல்லப் பின்னரும் வழியிலதாயிற்று. தவமுனிவர் மயங்கினார். பின்னர் ஒரு பக்கம் சிறுவழித் தோன்றியது. அதன்கண் நடந்த காலை அக்கினி சுவாலித்துச் சூழ, மழை சோனையாகப் பொழிய, இடி இடிக்க, இருட்படலஞ் சூழுமாறு மாயத்தைகிரவுஞ்சன் செய்தான்.
முனிவனார் இது அறிவிலிகளாகிய அவுணரது மாயமென்று உண்மையை உணர்ந்து கைக்கொட்டி நகைத்துச் சீறி “நன்று நன்று இவன் வல்லமையை ஒழிப்பேன் என்று தமது கரதத்தில் இருந்த தண்டாயுதத்தால் புடைத்துத் துவாரமுண்டாக்கிச் சாபங் கூறுவாராயினார்.
“வெய்யோய்! நீ அசுர வுருமாறி இம்மலைவடிவாய் இராக்கதருக்கு இருப்பிடமாகி இருடியருக்கும் இமையவருக்கும் இடர்மிகப் புரிந்து பல நாட்கள் இருப்பாயாக. எமது தண்டாயுதத்தாற் புழைப் படுத்தப்பட்ட இவைகளெல்லாம் மாயைகளுக்கு இருப்பாய் விளங்கிக் குமரக்கடவுளின் நெடுஞ்சுடர் வேலால் பொடியாக அழியக் கடவாய்” என்று கூறிச் சென்றனர்.
“மாற்படு நமதுபாணி வலிகெழு தண்டால் உன்தன்
பாற்படு புழைகள் யாவும் பற்பல மாயைக்கு எல்லாம்
ஏற்புடை இருக்கையாக எம்பிரான் உதவுஞ் செவ்வேள்
வேற்படை தன்னில் பின்னாள் விளிகுதி விரைவில் என்றான்“.
(கந்தபுராணம்)
அவ்வாறே அவ்வசுரன் மலைவடிவாய் இருந்து பலருக்கும் மாயஞ் செய்து வந்தான். பின் அறுமுகத்து அண்ணலார் ஆணைப்படி அமர் புரிய வந்த வீரபாகு தேவர், தாரகனுடைய மாயந் தெரியாது, அம்மலைக்குள் அவனைப் பின் தொடர்ந்துச் சென்று மயங்கினார். நம்முடையபடைத்தலைவர்சென்று திரும்பவில்லையே? யாது நிகழ்ந்ததுவோ என்று வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேச்சுரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் (இவர்கள் அனைவரும் வீரபாகுத் தேவரின் சகோதரர்கள்) என்னும் எண்மரும், இலக்கம் வீரரும், பூத வெள்ளங்களும் அவ்வாறே சென்று கிரவுஞ்சமலையில் மயங்கிக் கிடந்தனர்.
இதனை நாரதர் ஓடிச்சென்று நம் கதிர் வேலண்ணலிடம் விண்ணப்பம் புரிய, அவர் நெடுஞ்சுடர் வேலை ஏவி, அக்கிரவுஞ்ச மலையைப் பொடிப்பொடியாக அழித்தருளி, தாரகனையும் மாய்த்து, மயங்கிய இலக்கத்தொன்பான் வீரர்களுக்கும் இன்பமளித்தனர்.
பாடலின் இறுதியில் விநாயகர் மகாபாரதத்தை எழுதும் போது கொம்பை ஒடித்து எழுதினார்; கஜமுகாசுரனைக் கொல்ல ஒரு கொம்பை ஒடித்து அதனை ஆயுதமாகப் பயன் படுத்தினார்; என்ற கதைகள் புலப்படும் வண்ணம் வித்தக மருப்பு என்று குறிப்பிடுகிறார்.
திருப்புகழ் கதைகள்: உக்கிர துரகமாகிய மயில்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.