682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் உத்ஸவம், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கார்த்திகை அமாவாசையான டிச. 12 செவ்வாய்க் கிழமை நேற்று, திருவிசநல்லூரில் தன் வீட்டில் கங்கையை பொங்கச் செய்த மகான் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாளின் உத்ஸவம் கொண்டாடப்படுகிறது. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாளுக்கு சிஷ்யையாய் அமைந்து பாடல்கள் பல புனைந்தவர் செங்கோட்டையிலிருந்த ஆவுடையக்காள்.
இந்தத் தொடர்பினால் செங்கோட்டையில் உள்ள அம்மன் சன்னதி தெருவில் உள்ள ராம பஜனை மடத்தில் ஐயாவாளின் பாதுகைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு வழி வழியாக பூசிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஐயாவாளின் உத்ஸவம் செங்கோட்டையிலேயும் விமரிசையாக நடைபெறுகிறது.
இதன்படி, செங்கோட்டை அம்மன் சந்நிதித் தெரு ஶ்ரீராம பஜனை மடத்தில் டிச.12 செவ்வாய் நேற்று, திருவிசநல்லூர் ஶ்ரீ ஶ்ரீதர வேங்கடேச ஐயாவாள் பாதுகை ருத்ராபிஷேக உத்ஸவம் காலை, மாலை, இரவு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
காலை 8 மணிக்கு, செங்கோட்டையைச் சேர்ந்தவரும் தற்போது திருச்சி வாளாடியில் வசிப்பவருமான ராதாகிருஷ்ணன், முதல் முறையாக தீட்சை பெற்றுக் கொண்டு உஞ்சவிருத்தி பஜனையில் ஏற்று வர, ஶ்ரீ ஶ்ரீதர வேங்கடேச ஐயாவாள் பாதுகை ஊர்வலம் ஏழு தெருக்களிலும் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீராம பஜனை மடத்தில் ஐயாவாள் பாதுகைகளுக்கு ருத்ர ஜப அபிஷேகத்தை செங்கோட்டை சிருங்கேரி மடத்தின் ஶ்ரீ பாரதீ தீர்த்த வேத பாடசாலை வித்யார்த்திகளும் வேத விற்பன்னர்களும் கலந்து கொண்டு நடத்தினார்கள். பின்னர் தீபாராதனையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் கிராம மகளிர் பஜனை மண்டலி குழுவினர், ஶ்ரீதர வேங்கடேச ஐயாவாளின் சிஷ்யையும், செங்கோட்டையில் பிறந்து வளர்ந்து அத்வைத ஞானத்தை உலகுக்குப் பரப்பிய ஆவுடையக்காளின் பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செய்தார்கள்.
இரவு நெல்லை ஶ்ரீ பாலகுருநாதர் பாகவதர் குழுவினர் நாமசங்கீர்த்தனம் செய்து நிகழ்ச்சியை சிறப்புற அமைத்தார்கள்.
செங்கோட்டை அம்மன் சந்நிதித் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற ஶ்ரீராம், மீனாட்சி சுந்தரம், ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட சிலர் கிராம ஜனங்களின் ஆதரவுடன் முன்னின்று சிறப்பாக இந்த உத்ஸவம் நடைபெற துணை புரிந்தார்கள்.