49. கோ மாதாவுக்கு எது நிகர்?
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகம் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“கோஸ்து மாத்ரா நவித்யதே” – சுக்ல யஜுர்வேதம்.
“கோ மாதாவுக்குச் சமமானது எதுவும் இல்லை”
வேதங்கள் முதல் இன்றைய நம் நூல்கள் வரையில் அனைத்தும் கோமாதாவின் முக்கியத்துவத்தை விவரிக்கின்றன. பசுக்கள் நிறைந்திருப்பதே உண்மையான செல்வம் என்றார்கள். “தனம் ச கோதனம் ஸ்ராஹு” என்கிறது சாஸ்திரம்.
ருத்ரர்கள், ஆதித்யர்கள், மனு முதலான தேவதைகளனைவரும் பசு மாட்டில் நிரம்பி இருக்கிறார்கள் என்று ருக் வேதம் வர்ணிக்கிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை கோபாலன், கோவிந்தன் என்று போற்றுகிறோம்.
கோ என்ற சொல்லுக்கு பசு என்பது மட்டுமின்றி காந்தி, கிரணம், வேதமந்திரம், வாக்கு, பூமி, புலன்கள், எண்ணங்கள் என்று பல பொருள் உண்டு. இவை அனைத்திற்கும் பசுவோடு தொடர்புள்ளது. பசுவை நன்கு பாதுகாத்தால் இவை அனைத்தும் காப்பாற்றப் படும்.
பசுவை துன்புறுத்தினால் சூரியசக்திக்குக் கூட ஆபத்து விளையும். அதனால் மழை சரியாகப் பொழியாமல் போகும். பசுவை வருந்தச் செய்தால் வேத தர்மம் நலிவடையும். மந்திர சக்திகள் க்ஷீணமடையும். பூகம்பம் போன்றவை ஏற்படும். புலன்களில் வலிமை குறையும். சிந்தனைகள் தாறுமாறாகும். அதாவது சங்கல்ப பலம் குறைவுபடும்.
மேலே கூறிய ஆறுவிஷயங்களுக்கும் ‘கோ’ வுக்குமுள்ள சூட்சும சம்பந்தத்தின் தாக்கம் இது.
பசு மாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சிறுநீர், சாணம் இவற்றை யக்ஞ திரவியங்களாக பயன்படுத்துகிறோம். இவற்றில் மருத்துவ விழுமியங்கள் உள்ளன என்று விஞ்ஞான சாஸ்திரம் கூறுகிறது. பௌதீக விஞ்ஞானத்தை மட்டுமின்றி சூட்சும பிரபஞ்சத்தின் விஞ்ஞானத்தைக் கூட அறிந்த பாரத தேசத்தில் இன்னும் சில ரகசியங்களை கூட தெரிவித்தார்கள்.
பசுஞ்சாணியால் வாசல் தெளித்த இல்லத்தில் தரித்திரமோ தீய சக்திகளோ நுழையாது. ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும். கோசாலைகள் தேவதைகளின் சக்தி வசிக்குமிடம்.
பசு நெய்யால் தீபம் ஏற்றினால் அந்த வீட்டில் லட்சுமி தேவி ஸ்திரமாக விளங்குவாள். பண்டைக்காலத்தில் கோ மூத்திரத்தை தெளித்து, பசுவின் வாலில் உள்ள முடியால் ரக்ஷை கட்டுவார்கள். அதனால் பேய், பிசாசு சக்திகள், திருஷ்டி தோஷங்கள் தொலையும் என்று பாகவதம் வர்ணிக்கிறது.
யக்ஞம் மூலம் தேவதைகளை திருப்திப்படுத்தி அவர்கள் மூலம் பூமிக்கு செல்வங்களைப் பெறுவது கோமாதாவின் அனுகிரகத்தால்தான். ஒரு காலத்தில் பாரத தேசம் சிறந்து விளங்கியதற்கு கோ ரட்சணையே காரணம்.
கர்ம பூமி, யக்ஞ பூமியான பாரத தேசம் தகுந்த முன்னேற்றத்தை சாதிக்க வேண்டுமென்றால்அன்போடு கோமாதாவை பாதுகாத்து ஆதரவு காட்ட வேண்டும். இதற்கு நாம் முன்வர வேண்டும். நம்மையும் நம் தர்மத்தையும் எந்த அரசாங்கமோ எந்த அமைப்போ வந்து பாதுகாக்கும் என்று காத்திருக்க வேண்டாம். நமக்கு நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சக்தி வஞ்சனையின்றி முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும்.
வசதியும் இடமும் இருப்பவர்கள் பசுவிற்காக ஒரு கோசாலை கட்டி அதனைப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு ஆளை நியமிக்கலாம். அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து கோசாலை அமைத்து பசுக்களை பாதுகாப்பதற்கு ஏற்பாடு செய்யலாம். கோசாலைக்கு நன்கொடை சேகரித்து உதவலாம்.
கோவதை தடைச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தும் விதமாக அனைவரும் சேர்ந்து ஒரு இயக்கமாக இயங்கவேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றையோ அனைத்தையுமோ கடைபிடிக்கலாம். இவை அசாத்தியம் அல்ல. உண்மையாக செய்ய முனைந்தால் மிக எளிதே.
நாமனைவரும் இவ்விதம் பசுமாடுகளைப் பாதுகாத்து வந்தால், கோவதை போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். சட்டத்திற்கு விரோதமாக பல இடங்களில் ஆயிரக்கணக்கான பசுவதைகள் இப்போதும் நடந்து வருகின்றன. புகார்கள் அளித்தாலும் போராட்டங்கள் நடத்தினாலும் எந்த பலனும் இருப்பதில்லை.
பசுக்களை துன்புறுத்துவது தொடர்ந்தால் நம் இருப்பிற்கே ஆபத்து ஏற்படக்கூடும். இது சாஸ்வத சத்தியங்களை தரிசித்துக் கூறிய ருஷிகளின் எச்சரிக்கை. இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற பல நூல்களை மதித்து வணங்கும் நாமனைவரும் பசு சம்ரக்ஷணையை மேற்கொள்ளா விட்டால் நமக்கு நாமே துரோகம் செய்தவர்கள் ஆவோம்.
“கவாம் மத்யே வஸாம்யஹம்” –“பசுக்களின் இடையே நான் இருப்பேன்” என்ற பிரதிக்ஞை மகாபாரதத்தில் காணப்படுகிறது. அதனை உண்மையாக்குவோம்.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 49. கோ மாதாவுக்கு எது நிகர்? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.