e0af8d-e0aeaee0aea4e0af8de0aea4.jpg" style="display: block; margin: 1em auto">


திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 8
மத்தமும்மதியமும்வைத்திடும்அரன்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கைத்தல நிறைகனி பாடலின்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை– என்ற வரியில் சிவபெருமான் தனது தலையில் ஏன் பிறையைச் சூடினார் என்பதற்கான கதை உள்ளது.
சமயக் குரவர் நால்வருள் சுந்தரர் தன்னுடைய முதற் பாடலிலேயே இறைவனை
பித்தாபிறை சூடீ பெருமானே யரு ளாளா
எத்தான் மற வாதே நினைக்கின்றேன் மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்
அத்தா உனக் காளாய் இனிஅல்லேன் என லாமே!
எனப்பாடுவார். பித்தன் – பேரருள் உடையவன்; பேரருள் பித்தோடு ஒத்தலின், `பித்து` எனப்படும். `பிறைசூடி` என்றதும், `பித்தன்` என்றதனாற் பெறப்பட்ட பேரருளை ஆளுந்தன்மைக்குச் சான்றாய், பின்வரும் `அருளாளன்` என்பதன் காரணத்தை அங்ஙனம் உணர்த்தியதேயாம்.

தக்கனது சாபத்தால் இளைத்து வந்த சந்திரனை அவன் அழியாதவாறு காக்க அவனது ஒரு கலையைச் சிவபெருமான் தனது முடியிற் கண்ணியாகச் சூடிக் கொண்டமையால் அஃது அவனது பேரருளுக்குச் சான்றாயிற்று.
மலர்மிசை வாழும் பிரும்மாவின் மானச புத்திரருள் ஒருவனாகிய தட்சப் பிரஜாபதி தான்பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும், அநுசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன், அழகில் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்கு மணம் செய்து கொடுத்து, அவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடு அனுப்பினன்.
சந்திரன் சிறிது நாள் அவ்வாறே வாழ்ந்தான்.பின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதர் இருவரும் பேரழகு உடையராய் இருத்தலால், அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்து, ஏனையோரைக் கண்ணெடுத்தும் பாரான் ஆயினன்.
மற்றைய மாதர்கள் மனம் கொதித்து தமது தந்தையாகிய தக்கனிடம் வந்து தம் குறைகளைக் கூறி வருந்தி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டு, சந்திரனை விளித்து “உனது அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் பல்லோராலும் இகழப்படுவாய்” என்று சபித்தனன்.
அவ்வாறே சந்திரன் நாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்த பின் ஒரு கலையோடு மனம் வருந்தி, இந்திரனிடம் சென்று தனக்கு உற்ற இன்னல்களை எடுத்துச் சொன்னான். பின்னர்“இடர் களைந்து என்னைக் காத்தருள்வாய்” என்று வேண்டினான். அதற்கு இந்திரன், “நீ பிரும்மாவிடம் சென்று இதனைக் கூறுவாயானால், அவர் தன் மகனாகிய தக்கனிடம் சொல்லி சாபவிமோசனம் செய்தல் கூடும்” எனச் சொன்னான்.
அவ்வண்ணமே சந்திரன் சதுர்முகனைச் சரண்புக, மலரவன் “சந்திரா! தக்கன் தந்தை என்று என்னை மதித்து, எனது சொல்லைக் கேளான். நீ திருக்கயிலையை அடைந்து கருணாமூர்த்தியாகியக் கண்ணுதற் கடவுளைச் சரண் புகுவாயானால், அப்பரம்பொருள் உனது அல்லலை அகற்றுவார்” என்று சொன்னார்.

சந்திரன் திருக்கயிலைமலை சென்று, நந்தியெம்பெருமானிடம் உத்தரவு பெற்று மகா சந்நிதியை அடைந்து, அருட்பெருங் கடலாகிய சிவபெருமானை முறையே வணங்கி, தனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரம தயாளுவே! இவ்விடரை நீக்கி இன்பமருள்வீர்” என்ற குறையிரந்து நின்றனன்.
மலைமகள் மகிழ்நன் மனமிரங்கி, அஞ்சேலென அருள் உரை கூறி அவ்வொரு கலையினைத் தம் முடியில் தரித்து, “உனது கலைகளில் ஒன்று நமது திருமுடியில் இருத்தலால் நாளுக்கொரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய், எப்போதும் ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணை பாலித்தனர்.
எந்தை அவ்வழி மதியினை நோக்கி, நீ யாதும்
சிந்தை செய்திடேல், எம்முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்தம் இல்லை இக் கலை இவண் இருந்திடும் அதனால்
வந்து தோன்றும் நின் கலையெலாம் நாள்தொறும் மரபால். — கந்தபுராணம்.
இவ்வரியில் வரும் மத்தம் என்பது ‘ஊமத்தமலர்’. இம்மலர் சிவபெருமானுக்கு உகந்தது.
திருப்புகழ் கதைகள்: மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.