பொய்கையாழ்வார் சரிதம்

பொய்கையாழ்வார்

இவருடைய பாசுரங்களில் இருந்து ஒன்று மட்டும் தெரியவருகிறது̷ 0; கடைச்சங்க காலத்திலேயே சித்தாந்த ரீதியாக, பெரிதும் வளர்ந்துவிட்ட சைவ வைணவ சமய பேதங்கள் எல்லாம், கடைச்சங்க காலத்தின் இறுதியில், அதாவது முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தில் படித்த பண்டிதர்களிடம் அதிகமாக இருந்தன. ஆனால் இந்த இரு சமயங்களின் மூலங்களையும் ஓருருவாய் தரிசித்ததாக எழுந்த முதல் குரல், முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வாரின் குரல்.

 

இந்த இடத்தில் சில விளக்கங்களும் தேவைப்படுகிறது. இன்றைய காலத்தில் பரவலாக ஒரு கருத்தை எல்லோரும் சொல்வதை கேட்கலாம். அரியும் சிவனும் ஒண்ணு. அரியாதவன் வாயில் மண்ணு… என்று. ஆனால், தர்க்க ரீதியாக யோசித்தால், ஒன்று புலப்படுகிறது. சொல்லப்படும் இரண்டும் ஒன்றானால், அந்த இன்னொன்று எதற்கு? ஒன்றே இருந்துவிட்டுப் போயிருக்கலாமே! ஏதோ ஒரு சிறிய வித்யாசம்தானே, அந்த இன்னொன்றை தனிப்படுத்திக் காட்டுகிறது. அவ்வகையில், குணபேதங்களால் விளைந்த வேற்றுமை இவை என்பதை ஓரளவு யூகித்துக் கொள்ளலாம்! பொய்கையாழ்வார் காலத்தில் இருந்த மக்கள் மனநிலையைச் சீர்படுத்த, அப்போது ஆழ்வாரின் இந்தக் கருத்தும் தேவைப்பட்டிருக்கலாம்.

பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியில் ஒரு பாசுரத்தில்…

அரன், நாரணன்-நாமம்; ஆன்விடை புள்-ஊர்தி;

உரை-நூல்,மறை; உறையும் கோயில் – வரை,நீர்;

கருமம்-அழிப்பு, அளிப்பு; கையது-வேல், நேமி;

உருவம்-எரி,கார்; மேனி ஒன்று (5)

என்றவாறு,

அரன், நாராயணன் ஆகியவை உனது பெயர்கள்.

எருது, கருடன் ஆகியவை உம் வாகனங்கள்.

ஆகமமும் வேதமும் உன் பெருமை பறைசாற்றும் நூல்கள்.

மலையும் (கைலாய மலை) கடலும் (திருப்பாற்கடல்) உன் இருப்பிடங்கள்…

அழித்தலும், காத்தலும் நினது தொழில்கள்.

வேற்படையும், சக்கரப் படையும் நின் ஆயுதங்கள்.

தீயின் சிவப்பும், கார் மேகத்தின் கருப்பும் நின் உருவம்.

ஆயினும் உடல் – ஒன்றே!

அரியும் அரனும் சேர்ந்த உருவமான சங்கரநாராயணர் தத்துவத்துக்கு இந்தப் பாசுரத்தை சிலர் மேற்கோள் காட்டுவர்.

ஆனால், பொய்கையாழ்வார் தம் இன்னுமொரு பாசுரத்தில், ஒருவருக்குள் ஒருவர் உறைவதை எடுத்துக் காட்டியிருப்பார்.

பொன் திகழு மேனிப் புரிசடை அம் புண்ணியனும்,

நின்று உலகம் தாய நெடுமாலும் – என்றும்

இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்

ஒருவன் அங்கத்து என்றும் உளன் (98)

பொன் நிற உடலும் பின்னிய சடையும் கொண்ட சிவபெருமானும், நின்று கொண்டே உலகை அளந்த நெடிய திருமாலும், எப்போதும் இரண்டு வடிவங்களில் திரிவார்கள் என்றாலும், சிவன் திருமாலின் உடம்பாக இருக்கிறான். சிவன், திருமாலுக்குள் உறைபவனாய் வாழ்வுக்குக் காரணம் ஆகிறான்… என்று தத்துவப் பொருளையும் பேசுகிறார்.

ஏற்றான், புள் ஊர்ந்தான்; எயில் எரித்தான்; மார்வு இடந்தான்;

நீற்றான்; நிழல் மணிவண்ணத்தான்; – கூற்று ஒருபால்

மங்கையான், பூமகளான், வார் சடையான், நீள்முடியான்;

கங்கையான், நீள்கழலான் காப்பு ( 74)

என்ற பாசுர அழகால் அவருடைய சமரச உணர்வைப் புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பாசுரத்தில், காளை வாகனம் கொண்ட சிவன் முப்புரங்களை எரித்தவன். சாம்பல் பூசியவன். உடல் பாதியில் பெண்ணைக் கொண்டவன். சடையையும் அதில் கங்கையினையும் உடையவன். ஆயின் இச்சிவபிரானைக் காக்கும் திருமாலோ வேத புருஷனான கருடனை வாகனமாகப் பெற்றவன். இரணியன் மார்பைக் கிழித்தவன்; நீலமணி நிறத்தான்; திருமகளைத் தன் மார்பில் ஏற்றவன்; திருமுடியுடன் கங்கையின் பிறப்பிடமாகிய திருவடி கொண்டவன். ஆகவே திருமாலே சிவனின் ஆத்மாவாக அவன் உள்ளிருந்து காக்கும் பேரிறைவன் என்கிறார். இருப்பினும், சிவபெருமானைக் காட்டிலும் மிக உன்னதமான உயர்வான பொருள்களைப் பெற்று வெளிப்படுத்தியவன் திருமால் என்பது ஆழ்வாரால் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்பது, சித்தாந்த ரீதியாக சிலர் சொல்லும் கருத்து.

கைய வலம்புரியும் நேமியும்; கார்வண்ணத்து

ஐய! மலர்மகன் நின் ஆகத்தாள்; – செய்ய

மறையான் நின் உந்தியான்; மாமதிள் மூன்று எய்த

இறையான் நின் ஆகத்து இறை (28)

கையில் சங்கு, சக்கரம் கொண்டு இலங்கும் மேகவர்ண மேனி கொண்டவனான நின் அருகில் லக்குமி இருக்கிறாள். உன் உந்திக் கமலத்தில் பிரமன் இருக்கிறான். முப்புரம் எரித்த சிவபெருமானும் உன் உடலின் ஒரு பாகம்தான்… என்கிறார். இப்படி அனைவரும் அவன் ஒருவனிடம் உறைகின்றனர் என்கிற கருத்தைக் கொண்டிருந்தாலும் அதைக்காட்டினும் சிறப்பாக, நாம் எந்த உருவில் அவனை வேண்டுகிறோமோ அந்த உருவில் அவன் நமக்கு அருள்வான் என்கிற தத்துவ உண்மையை எடுத்து இயம்புகிறார் பொய்கையாழ்வார்.

தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே;

தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர்; – தமர் உகந்து

எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே,

அவ்வண்ணம் ஆழியான் ஆம் (44)

அடியார்கள் எந்த உருவத்தை விரும்புகிறார்களோ, அதுவே அவன் உருவம். எந்தப் பெயரைக் கொடுக்கிறார்களோ அதுவே அவன் பெயர். எந்த விதமாக சிந்தித்து இடைவிடாமல் தியானம் செய்கிறார்களோ அந்த விதமாகவே இருப்பான் சக்கரக் கையான் என்று சமரச தத்துவ நிலையைச் சொன்னாலும், இன்னுமொரு பாசுரத்தில் இந்த உலகத்து உயிர்கள் எல்லாம் அந்தத் திருமாலிடமே அடங்குகின்றன, எல்லா தெய்வங்களும் அவனிடமே ஒடுங்குகின்றன, எனில் அவனைக் காட்டிலும் வேறு ஒரு தெய்வத்தைத் துதிக்கவும் வேண்டுமோ என்று நாராயண பரத்துவத்தை நிலை நாட்டுகிறார் பொய்கையாழ்வார்.

ஆகாசாத் பதிதந் தோயம் யதா கச்சதி சாகரம் |

சர்வதேவ நமஸ்கார: ஸ்ரீகேசவம் ப்ரதி கச்சதி ||

எப்படி ஆகாசத்திலிருந்து மண்ணில் விழும் நீரானது ஆறுகளின் வழியே ஒன்றாகிக் கடலில் சேர்கிறதோ, அதுபோல் மற்ற எல்லா தேவதைகளுக்கும் செய்கின்ற நமஸ்காரங்கள் கடல் வண்ண நிறனான கேசவனுக்கே செல்கின்றன – என்று சொல்வதைப் போல் இவரும் பேசுகிறார். அதனால் நான் எதற்காக மற்ற தெய்வங்களை ஏற்றிச் சொல்ல வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரோடு;

உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்; & வியவேன்

திருமாலை அல்லாது தெய்வம் என்று ஏத்தேன்;

வரும் ஆறு எம்மேல் வினை? (64)

என்று, பிறன் பொருளை யான் விரும்பேன்; (அல்லது திருமாலுக்கே உரிமையான ஆத்மாவை என்னுடைய பொருளாக எண்ணி ஆசைப்படமாட்டேன் என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம்). கீழான தன்மை உடையவரோடு நட்பு பூணேன்; உயர்ந்தவரோடு சேர்ந்திருப்பேனே அல்லாது மற்றவரோடு சேரேன் (அல்லது உலக வாழ்வில் உழல்பவரோடு சேராது திருமாலடியாரோடே கூடிக் களித்திருப்பேன் என்றும் கொள்ளலாம்)… திருமாலைத் தவிர வேறு தெய்வம் எதையும் தெய்வம் என்று துதிக்கமாட்டேன். ஆதலால் பிறப்பு, இறப்புத் துன்பம் தரும் பாவ வினை என்னை நாடி எப்படி வரும்?… நிச்சயம் வராது – என்று கூறும்போது, நாராயணனையே தெய்வம் என்று ஏத்துவேன் என்பதையும் இறுதியாகச் சொல்லிவிடுகிறார்.

பொய்கையாழ்வாரின் இந்தக் கருத்தை ஒட்டி, அதன் பின்னர் வந்த தொண்டரடிப்பொடியாழ்வார்,

மற்றும் ஓர் தெய்வம் உண்டோ ? மதியிலா மானிடர்காள்!

உற்றபோது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்;

அற்றம் மேல் ஒன்று அறியீர்; அவன் அல்லால் தெய்வம் இல்லை;

கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே!

என்று, ஆபத்து வரும்போது காப்பதற்கும், கடைசிக் காலத்தில் நினைப்பதற்கும் வேறு ஏதேனும் தெய்வமும் உண்டோ ? அவன் ஒருவனே ஆபத்பாந்தவனாக ஓடோ டி வருவான் என்று சொல்லிவிட்டு, அவனை விட்டால் வேறு தெய்வமில்லை என அழுத்தமாக, நாராயண பரத்துவம் பேசுவது உணரத் தக்கது.

மேலும், பகவானின் தன்மையையும் ஆன்மாவின் தன்மையையும் வர்ணித்து, ஆன்மிக உணர்வைத் தட்டியெழுப்புகிறார். மூலப்பொருளான இறைவனை அடைந்து ஒன்றாகக் கலப்பதே ஆன்மாவின் தன்மை என்றும், அவனைப் பிரிந்திருப்பதே துன்பங்களுக்கான காரணம் என்றும் தெளிந்து தெரிவிக்கிறார்.

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது

ஒன்றும் உணரேன் நான் – அன்று

தடைத்துடைத்து கண்படுத்த ஆழி இதுநீ

படைத்திடந் துண்ட பார் (2)

பகவானே நீ என்று கடலைக் கடைந்தாய்; எப்போது இவ்வுலகத்தை நீரால் நிரப்பினாய்; இது ஒன்றும் எனக்குத் தெரியாது. அன்றொரு நாள் கடலை அடைத்துப் பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலேயே படுத்துத் தூங்குகிறாய். இந்த உலகத்தைப் படைக்கிறாய், பெயர்த்து எடுக்கிறாய், அதை உண்கிறாய்…

இப்படி உலகத்தின் முத்தொழிலுக்கும் காரணனாக நாராயணனைப் பாடும் பாடல் இது. உலகில் அனைத்தையும் செய்வது அவனே என்பது இதன் வழி உணரும் உட்கருத்து.

 

Leave a Reply