e0af8d-e0aeaae0af81e0aea9e0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ்க் கதைகள் 104
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தரிக்கும்கலை – திருச்செந்தூர்
புன் கவிகள் பாடும் புலவர்
புலவர்கள் செல்வமுடையவர்களிடம் சென்று அருமையினும் அருமையான இனிய தமிழை, ஈசனுக்கு அர்ப்பணியாமல் அழிந்து போகின்றவர்களும், பரமலோபிகளும், மகா மூடர்களுமாகியப் பாவிகளைப் பாடிப் பரிதவிக்கின்றார்கள். இந்த அவல நிலையைக் கண்டு அருணகிரிநாதர் இத் திருப்புகழில் வருந்துகின்றார். அந்தோ! இவர்கட்கு என்ன மதி? கேட்டதெல்லாம் தரும் பரம கருணாநிதியாகிய முருகனைப்பாடினால் இகம், பரம் இரண்டு நலன்களையும் வழங்குவானே? அப்பரமனை வாழ்த்தக் கூடவேண்டாம். தமிழால் வைதாலும் வாழவைப்பானே?
மூடர்களாகிய உலோபிகளை, “தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அர்ச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனமிரங்கி அரைக்காசும் உதவமாட்டார்கள். இதனை ஔவையாரின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
கோரைக்கால் ஆழ்வான்
கோரைக்கால் என்ற ஊரில் ஆழ்வான் என்ற பெருஞ் செல்வந்தன் இருந்தான். அவன் பலரும் தன்னைப் புகழ்ந்து பாடிப் போற்ற வேண்டுமென விரும்பினான். ஆனால், அடுத்தவனுக்கு ஒரு பருக்கையும் கொடுக்க மனம் இல்லாத கருமி. ஆகையால் யாருக்கும் தம்படி காசு வழங்க மாட்டான். இத்தகைய பண்புடையவனை ஔவையாரும் சென்று பாடினார். அவன் பரிசு தருவதாக வாக்களித்தான். இறுதியிலே அவள் தந்த பரிசையும் மிக ஏளனமாகக் கூறுகிறார்.
கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்
எருதாய் முழப் புடவை யாகித் திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்து கால் ஓய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை.
ஔவையார் பாடிய கவிதை மனதிற்கு இன்பத்தை தரவும் மகிழ்ந்தான், கோரை ஆழ்வான். வாக்களித்தபடி பரிசு தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள் யானையை என்றான். யானையா? என்று எண்ணும் போதே மூதாட்டியே! நாளை வரும் என்றதும். ஔவையும் தவறாமல் சென்றார். அவனோ! அம்மையே நன்கு சிந்தித்தேன். யானையைக் கட்டி தீனி இடமுடியாது. ஒரு குதிரையைத் தருகிறேன். மறுநாள் வந்து பெற்றுக்கொள் என்றான். அடுத்தநாள் குதிரையை விட எருமை மாடு உபயோகமாக இருக்கும். அதனைத் தருகிறேன் என்றான். உண்மையே… குதிரையை வைத்து என்ன செய்யப் போகிறேன். எருமை பயனுடையது அல்லவா சரி என்றார். தற்போது தர இயலாது நாளை வாரும் என்றான்.
அதற்கு, அடுத்த நாள் எருமைக்குப் பதிலாக எருதைத் தருகிறேன் என்றான். மூதாட்டியும் சளைக்காமல் சென்றார். எருதும் வேண்டாம். உங்களுக்கு மிகவும் பயனுடையது. நீங்களே அணிந்து மகிழ புடவையைத் தருகிறேன் என்றதும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் கோரைக்கால் ஆழ்வானே’ நாளைக்கு நீ தரும் சேலை, திரிதிரியாக கிழிந்துபோகும் என்று தோன்றுகிறது.
எனவே, நீ தரும் பரிசுக்காக என் கால்களோ நடந்து நடந்து தேரைக்காலின் (யானைக்கால் போன்று) தன்மையை அடைந்து விட்டன. மிகவும் தேய்ந்து தேய்ந்து ஓய்ந்தும் போனது. யானை, குதிரை, எருமை, எருது, புடவை என்று பெரிய யானை அளவில் குறைந்து இறுதியில் எதுவும் தரவில்லை. ஆனால், என் கால்கள் யானைக் காலாக பெருத்துக் கொண்டு போகிறது என எள்ளி நகையாடினாள். ஈயாதார் மனம் எத்தகையது என்பதைச் சுட்டிக் காட்டினாள்.
முருகனின் திருவருள்
செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலிமகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.
அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,
ஆபத்து அகற்றி அன்பாய்
ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,
ஆண்மைஉள விசயன்நீ, என்று
எத்தனை விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்
இயற்றினும் இரக்கஞ் செயார்,
இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்
இறைஞ்சிஎனை ஏத்த வேண்டாம்,
பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!
பெருவயிற்றான் தம்பி,அப்
பேய்ச்சிமுலை உண்டகள் வன்மருகன், வேடுவப்
பெண்மணவன், என்றுஏசினும்,
சித்தமகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்
சிறுபறை முழக்கி அருளே!
செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,
சிறுபறை முழக்கி அருளே!
(கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்)
மேற்சொன்னது போலவே சுந்தர் மூர்த்தி நாயனார் ஒரு பாடலில்,
நலம்இலாதானை நல்லனே என்றும்,
நரைத்த மாந்தரை இளையனே,
குலமிலாதானைக் குலவனே என்று
கூறினும் கொடுப்பார்இலை,
புலம்எலாம்வெறி கமழும் பூம்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்,
அலமராது அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே... என்று குறிப்பிடுவார்.
திருப்புகழ் கதைகள்: புன்கவிகள் பாடும் புலவர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.