பொய்கையாழ்வார் சரிதம்

பொய்கையாழ்வார்

14-ம் பாசுரத்தில், அவரவர் தாம் அறிந்த வகையில் அவனைத் தொழுது, இவர்தான் என் கடவுள் என்று சொல்லி சுவரில் சித்திரமாக வரைந்தும், சாத்தியும், மூர்த்திகளாக வைத்தும் தொழுவார்கள். ஆனால், இதற்கெல்லாம் ஆதியானது, உலகை அளந்த அந்த உத்தமனின் உருவமே என்கிறார்.

 

இறைவனைப் போற்றிப் பாடுகிறவர்கள் மத்தியில், அவனைப் பழித்தும் உரைக்கின்ற சிலர் இருக்கத்தானே செய்வார்கள். அப்போதுதானே, போற்றுபவர்களின் சிறப்பை பகவானால் உலகுக்கு வெளிப்படுத்த முடியும். ஆனால், போற்றுதலோ தூற்றுதலோ அவனுக்கு எல்லாம் ஒன்றுதான், அவனைப் புகழ்வதும் பழிப்பதும் அவரவர் உரிமை என்பதை ஒரு பாசுரத்தில் காட்டுகிறார̷் 0;

புகழ்வாய்; பழிப்பாய்; நீ பூந் துழாயானை

இகழ்வாய்; கருதுவாய்; நெஞ்சே – திகழ் நீர்க்

கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும்,

உடலும் ஏற்றான் உயிர் (73)

கடலும் மலையும் வானமும் காற்றும் உடலும் உயிரும் எல்லாமுமாக அவன் இருக்கும்போது, அவனைப் புகழ்ந்தால் என்ன? பழித்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான் என்கிற கருத்து ஆழ்ந்து நோக்கத் தக்கது.

மரணம் வரும் காலத்தே மாயவனை நினைப்பதற்கு நினைவு இருக்குமோ அல்லது நினைவு தப்பிப்போய் மரணம் துரத்துமோ தெரியாது. அந்த அளவுக்கு உலக வாழ்க்கை நிச்சயமற்ற தன்மையில் இருக்கும்போது, மரணத் தறுவாயில் அவனைத் தொழுதால்தான் வீடுபேறு கிடைக்கும் என்பது இல்லை; எப்போது உடலில் தெம்பும் உள்ளத்தில் நினைவும் நன்றாக இருக்கிறதோ அப்போதே அவனைத் தொழுது புண்ணியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் சக்தியுள்ளபோதே ஏதேனும் ஒரு வழியில் தொழலாம் என்கிறார்.

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கமா நகருளானே என்கின்ற ஆழ்வாரின் கருத்து இந்தப் பாசுரத்தோடு இயைந்து போகிறது.

சொல்லும் தனையும் தொழுமின்; விழும் உடம்பு

செல்லும் தனையும் திருமாலை;  -நல் இதழ்த்

தாமத்தால், வேள்வியால், தந்திரத்தால், மந்திரத்தால்

நாமத்தால் ஏத்துதிரேல், நன்று.

என்ற பாசுரம் மூலம் காட்டும் கருத்து…

உடம்பு விரைவிலேயே விழுந்துவிடும்… நாவால் அவன் நாமத்தைச் சொல்லும் சக்தி இருக்கும்போதே, திருமாலை வழிபடுங்கள், அழகு மலர் மாலை சூட்டுங்கள், யாகம் செய்தோ, தந்திரத்தாலோ, மந்திரங்கள் ஓதியோ, அல்லது அவன் நாமங்களைச் சொல்லியோ எப்படி வணங்கினாலும் நல்லது என்கிறார்.

இப்படி நாராயணனைச் சிறப்பித்து பாசுரங்களைப் பாடிவரும்போது, அவனுக்குக் குடையாக அமர்ந்த ஆதிசேஷன் சிறப்பையும் பாசுரத்தில் காட்டுகிறார்.

சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காசனமாம்;

நின்றால் மரவடியாம், நீள் கடலுள் – என்றும்

புணையாம் மணி விளக்காம், பூம்பட்டாம் புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு.

திருவனந்தாழ்வான், பிராட்டியுடன் கூடிய பெருமாளுக்கு அவர் செல்லும்போது குடை ஆவான். அவர் இருந்தால் சிங்காசனம் ஆவான். நின்றால் அவருடைய பாதுகை ஆவான். பரந்த கடலில் படுத்துறங்கின் தெப்பம் ஆவான். மங்கள விளக்காவான், பூம்பட்டாவான், அவர் தழுவிக் கொள்ளத் தலையணையும் ஆவான் என்று அனந்தாழ்வானின் சிறப்பைக் காட்டுகிறார்.

இத்தகு சிறப்பு வாய்ந்த அழகிய நூறு அந்தாதிப் பாசுரங்கள் தந்தவர் பொய்கையாழ்வார்!

பொய்கையாழ்வார் வாழி திருநாமம்

செய்ய துலா வோணத்தில் செகத்துதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே

வையம் தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே

வனச மலர் கரு அதனில் வந்து அமைந்தான் வாழியே

வெய்ய கதிரோன்தன்னை விளக்கு இட்டான் வாழியே

வேங்கடவர் திருமலையை விரும்பும் அவன் வாழியே

பொய்கை முனி வடிவு அழகும் பொற்பதமும் வாழியே

பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே

Leave a Reply