23
42:
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண் ணகர். (2) 61
2343:
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62
2344:
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவு மொன்றாய் இசைந்து. 63
2345:
இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,
பசைந்தங் கமுது படுப்ப, – அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு? 64
2346:
அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,
மங்க இரணியன தாகத்தை, பொங்கி
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. 65
2347:
காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,
ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, – வாய்ந்த
மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,
அதுகே டவர்க்கிறுதி ஆங்கே. 66
2348:
ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,
ஓங்கு கமலத்தி னொண்போது, – ஆங்கைத்
திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்
பகரு மதியென்றும் பார்த்து. 67
2349:
பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு,
பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, – கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. 68
2350:
வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க்
கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,
பூண்டநா ளெல்லாம் புகும். 69
2351:
புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி
உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,
கண்டு வணங்கும் களிறு. 70