682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

வருவாய் அருள்வாய் கணபதியே!
விநாயகரின் பன்னிரு அவதாரங்கள்
வக்கிரதுண்ட விநாயகர்: இவர் பிரளயகால முடிவில் தோன்றி அரி, அயன், ருத்திரன் முதலான மூவருக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை அருளினார்.
சிந்தாமணி விநாயகர்: கபில முனிவருடைய சிந்தாமணியைக் கவர்ந்து சென்ற கணராஜனை வென்று அதனை மீட்டருளினார்.
கஜானன விநாயகர்: பிரம்மனிடம் இருந்து தோன்றிய சிந்துரன், தேவர்களுக்கு தொல்லை தந்தபோது அவனை அழித்து தேவர்களை காப்பாற்றினார்.
விக்னராஜ விநாயகர்: காலரூபன் என்ற கொடியவனை அழித்து உலகினை காத்தருளினார்.
மயூரேச விநாயகர்: பிரம்மதேவனிடத்தில் இருந்த வேதங்களைக் கவர்ந்து சென்ற கமலாசுரனையும், தேவர்களையும் சிறையில் வைத்த சிந்தாசுரனையும் வென்றருளினார்.
பாலசந்திர விநாயகர்: எமனிடத்தில் உதித்த அனலாசுரனை சிறிய குழந்தை வடிவில் சென்று அந்த அசுரை விழுங்கி அருளினார்.
தூமகேது விநாயகர்: மாதவராசனுக்கும் அவர் மனைவி சுமுதைக்கும் தீங்கு செய்த தூமராசனைக் கொன்று அவர்களை காத்து அருளினார்.
கணேச விநாயகர்: தம்மிடத்தில் அருள்பெற்ற பெலி என்ற அசுரன் தேவர்களுக்குத் துன்பம் தந்து அலைக்கழித்த போது தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஐந்து முகத்தினராய் அவதரித்து அந்த அசுரனை அழித்தார்.
கணபதி விநாயகர்: கஜமுகாசுரனை வெல்வதற்காக சிவபெருமானால் படைக்கப் பெற்றவர். விஷ்ணுவின் சாபத்தை நீக்கியருளினார்.
மகோற்கட விநாயகர்: காசிராஜனுக்காக நராந்தகனையும், தேவாந்தகனையும் நாசம் செய்து காசிராஜனை காத்தருளினார்.
துண்டி விநாயகர்: துராசதனை வென்று திவோதாசன் மனம் களிக்கச் செய்தார்.
வல்லபை விநாயகர்: மரீசி முனிவருடைய புத்திரியாகிய வல்லபையினையும், விஷ்ணு புத்திரிகள் பன்னிருபேரையும் திருமணம் செய்து கொண்டு விஷ்ணுவுக்கு யோக ஞான தத்துவம் என்றும் கணேச கீதையை அருளினார்.