style="text-align: center;">10ஆம் பத்து 10ஆம் திருவாய்மொழி
3882
முனியே. நான்முகனே. முக்கண்ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே. என்கள்வா
தனியேன் ஆருயிரே. என் தலை மிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட் டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே. (2) 10.10.1
3883
மாயம்செய் யேலென்னை உன்திரு மார்வத்து மாலைநங்கை
வாசம்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய்
நேசம்செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம்செய் யாதுகொண் டாயென்னைக் கூவிச்கொள் ளாய்வந்தந்தோ. 10.10.2
3884
கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என் பொல்லாக்கரு மாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றி லேன்யான்
மேவித் தொழும்பிரமன் சிவன் இந்திர னாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே. உம்பர் அந்ததுவே. 10.10.3
3885
உம்ப ரந்தண் பாழேயோ. அதனுள்மிசை நீயேயோ
அம்பர நற்சோதி. அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன்நீ
எம்பரம் சாதிக்க லுற்றென்னைப் போரவிட் டிட்டாயே. 10.10.4
3886
போரவிட் டிட்டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான்
ஆரைக்கொண் டெத்தையந்தோ. எனதென்பதென் யானென்பதென்
தீர இரும்புண்ட நீரது போலவென் ஆருயிரை
ஆரப் பருக,எனக்கு ஆராவமுதானாயே. 10.10.5
3887
எனக்கா ராவமு தாயென தாவியை இன்னுயிரை
மனக்கா ராமைமன்னி யுண்டிட்டா யினியுண் டொழியாய்
புனக்கா யாநிறத்த புண்டரீ கக்கட்f செங்கனிவாய்
உனக்கேற்கும் கோல மலர்ப்பாவைக் கன்பா..என் அன்பேயோ. 10.10.6
3888
கோல மலர்ப்பாவைக் கன்பா கியவென் அன்பேயோ
நீல வரையிரண்டு பிறைகவ்வி நிமிர்ந்த தொப்ப
கோல வராகமொன் றாய்நிலங் கோட்டிடைக் கொண்டேந்தாய்
நீலக் கடல்கடைந் தாயுன்னைப் பெற்றினிப் போக்குவனோ? (2) 10.10.7
3889
பெற்றினிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை
உற்ற இருவினையாய் உயிராய்ப் பயனாய் அவையாய்
முற்றவிம் மூவுலகும் பெருந் தூறாய்த் தூற்றில்புக்கு
முற்றக் கரந்தொளித் தாய்.என் முதல்தனி னித்தேயோ. 10.10.8
3890
முதல்தனி வித்தேயோ. முழுமூ வுலகாதிக் கெல்லாம்
முதல்தனி யுன்னையுன்னை எனைநாள் வந்து கூடுவன்நான்
முதல்தனி அங்குமிங்கும் முழுமுற் றுறுவாழ் பாழாய்
முதல்தனி சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவி லீயோ. 10.10.9
3891
சூழ்ந்தகன் றழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ
சூழ்ந்தத னில்பெரிய பரநன் மலர்ச்சோ தீயோ
சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான வின்ப மேயோ
சூழ்ந்தத னில்பெரிய என்னவா அறச்சூழ்ந் தாயே. (2) 10.10.10.
3892
அவாவறச்சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே. (2) 10.10.11
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்