style="text-align: center;">8ஆம் பத்து 10ஆம் திருவாய்மொழிஆழ்வார் திருமால்
அடியார்களுக்கும் ஆட்படும் இனிமையைப் பேசுகிறார். (பாகவத சேஷத்வம்)
நெடுமாற்கு அடிமைசெய்வேன்போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த; சதிர் நினைந்தால்
கொடுமாவினையேன் அவன் அடியார் அடியே கூடும் இதுஅல்லால்,
விடுமாறு என்பது என்? அந்தோ! வியன் மூவுலகு பெறினுமே 8-10-1
வியன் மூவுலகு பெறினும், போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூங்கழல் அடிக்கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே! 8-10-2
உறுமோ பாவியேனுக்கு ? இவ் வுலகம் மூன்றும் உடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்த்த என் செந்தாமரைக்கண் திருக்குறளன்
நறுமா விரை நாள் மலர் அடிக்கீழ்ப் புகுதல்; அன்றி அவன் அடியார்,
சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே! 8-10-3
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்? இருமாநிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோலத்த பவளவாய்ச் செந்தாமரைக்கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய், புலன் கொள் வடிவு என் மனத்ததாய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய், வழிபட்டு ஓட அருளிலே! 8-10-4
வழிபட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிபட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிபட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ? முழுதுமே! 8-10-5
நுகர்ச்சி உறுமோ? மூவுலகின் வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச்செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான்,
நிகர்ச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன், பெரிய தனி மாப்புகழே! 8-10-6
தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப்பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே! 8-10-7
நாளும் வாய்க்க நங்கட்கு நளிர்நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும், முடிகளும் சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலைபோல் கிடந்தான் தமர்கள் கூட்டமே! 8-10-8
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர்கொள் ஆழி சங்கு, வாள் வில், தண்டு, ஆதி பல் படையன்
குமரன், கோல ஐங்கணை வேள், தாதை கோது இல் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே! 8-10-9
வாய்க்க தமியேற்கு ஊழிதோறு ஊழி ஊழி மாகாயாம்
பூக்கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கம் எல்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள்; அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே! 8-10-10
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அம் தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர், கொண்ட பெண்டிர் மக்களே! 8-10-11