style="text-align: center;">8ஆம் பத்து 3ஆம் திருவாய்மொழி
3585
அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,
எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,
சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே. (2) 8.3.1
3586
சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே,
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம்,
கரணப் பல்படை பற்றற வோடும் கனலாழி,
அரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே. 8.3.2
3587
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்,
வாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை,
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன்,
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே. 8.3.3
3588
ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி,
ஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே,
காலம் பேர்வதோர் காரிரு ளுழியொத் துளதால்,உன்
கோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே. 8.3.4
3589
கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும்,
மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,இப்
படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. 8.3.5
3590
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,
அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,
தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல
மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே. 8.3.6
3591
வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என்
திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்,
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,
ஒருபா டுழல்வா னோரடி யானு முளனென்றே. 8.3.7
3592
என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ்,
நின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான்,
குன்றெழ் பாரேழ் சூழ்கடல் ஞாலம் முழுவேழும்,
நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே. 8.3.8
3593
திருமால் நான்முகன் செஞ்சடை யானென் றிவர்கள்,எம்
பெருமான் தன்மையை யாரறி கிற்பார் பேசியென்,
ஒருமா முதல்வா. ஊழிப் பிரானென் னையாளுடை,
கருமா மேனியன் என்பனென் காதல் கலக்கவே. 8.3.9
3594
கலக்க மில்லா நல்தவ முனிவர் கரைகண்டோர், துளக்க
மில்லா வானவ ரெல்லாம் தொழுவார்கள்,
மலக்க மெய்த மாகடல் தன்னைக் கடைந்தானை,
உலக்க நாம்புகழ் கிற்பதென் செய்வ துரையீரே. 8.3.10
3595
உரையா வெந்நோய் தவிர அருள்நீண் முடியானை,
வரையார் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்,
உரையேய் சொல்தொடை ஓரா யிரத்து ளிப்பத்தும்,
நிரையே வல்லார் நீடுல கத்துப் பிறவாரே. (2) 8.3.11