682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து செல்ல கோலாகலமாக நடைபெற்றது.
கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரெங்கமன்னாரை மணந்து கொண்டார்.
பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி திருவிழா மற்றும் பங்குனி திருக்கல்யாண விழாவில் செப்பு தேரோட்டமும், ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூர தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் 16 வண்டி சப்பரமும், 5ம் நாள் காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு பெரியபெருமாள், ரெங்கமன்னார், திருவண்ணாமலை ஶ்ரீனிவாசபெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் 5 கருட சேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 7-ம் நாள் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனித்திருக்கும் சயன சேவை உற்சவமும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ரங்கம் அழகர்கோவில் மங்கலம் பொருட்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் கங்கு கொண்டு வரப்பட்டது.இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இரவு தேர் கடாட்சித்தல் வைபவம் நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை தேரோட்டத்தை முன்னிட்டு மூலவருக்கு புஷ்பாஞ்சலியும், கண்ணாடி மாளிகையில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனமும் நடைபெற்றது. அதன்பின் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் மஞ்சள் பட்டு உடுத்தியும், ரெங்கமன்னார் வெண்பட்டு உடுத்தியும் தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து செல்ல ரதவீதிகளில் ஆண்டாள் ரெங்கமன்னார் வலம் வந்து தரிசனம் கொடுத்தனர்.