ஏற்றங்களைத் தருவார் எட்டீஸ்வரர்!

சிவ ஆலயம்

 

இச்சிறப்புமிகு மாமல்லபுரத்துக்கு அருகே அமைந்துள்ள திருத்தலம், “பையனூர்’ ஆகும். இங்கே சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. பல்லவர்கள் காலத்தில் முழுவதும் கற்றளியாக மாற்றப்பட்ட இக்கோயில், காலப் போக்கில் கவனிப்பாரின்றி சிதிலமடைந்தது. (இது பற்றி ஏற்கெனவே “வெள்ளிமணி’யில் ஓர் கட்டுரை வெளியிட்டிருந்தோம்) தற்போது அடியார்களின் திருப்பணி வாயிலாக புதுப் பொலிவு பெற்று அருள் வழங்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றது ஆலயம்.

இக்கோயிலின் தொன்மையை இவ்வூரில் கி.பி. 193 2-33ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள மூன்று கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

கி.பி. 768-ஆம் ஆண்டு நந்தி விக்கிரம வர்மனின் கல்வெட்டு, இவ்வாலயத்தின் தொன்மையை எடுத்துக் கூறுகிறது. இதில் இறைவன் பெயர் “எட்டீஸ்வரர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரில் ஊர் சபை உருவானது, நீர் நிலைகளைப் பராமரித்தது, நிலங்களை முறையாகக் கையாண்டது, பொதுச் சொத்துக்களைப் பராமரிப்பதில் பாவ- புண்ணியங்களின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தது போன்ற பல அரிய தகவல்களைக் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.
மற்றொரு கல்வெட்டில் இறைவனின் பெயர்,
“எட்டீஸ்வரமுடைய நாயனார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரில் “அருளாளப் பெருமான் கோயில்’ என்ற திருப்பெயரோடு வைணவக் கோயிலும் இருந்துள்ளதை கி.பி. 1233ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது.

ஆனால் அத்திருமாலின் இன்றைய பெயர், “கருணாகரப் பெருமாள்’ ஆகும். இவ்வாலயம், சிவன் கோயிலுடைய குளக்கரையின் மறுபுறம் அமைந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள மற்றொரு கல்வெட்டின் மூலம், “மதுராந்தக சோழன்’ பையனூரின் வயல்கள் பலவற்றை காஞ்சி வரதர் கோயிலுக்கு பூஜைகள் செய்யத் தானமாக்கிய செய்தியை அறிய முடிகிறது.

இச்சிறப்புமிகு சிவாலயம், கடந்த இருநூறு ஆண்டுகள் வரை செடி கொடிகள் என புதர்மண்டி சிதிலமடைந்திருந்தது. இதனை நாள்தோறும் கண்டு மனம் வருந்தி, கண்ணீர் சிந்திய இவ்வூர் சிவனடியார் ஒருவர், மற்ற பக்தர்களின் ஆதரவோடும், ஊர்மக்களின் ஒத்துழைப்போடும் பழமை மாறாமல் இவ்வாலயத்தைப் புதுப்பித்துக் கொண்டுள்ளார். சென்னை, வேளச்சேரியை சார்ந்த, “திருக்கோயில் உழவாரப் பணி மன்ற’ அன்பர்களின் ஒருமித்த ஆதரவால் இக்கோயில் புத்துயிர் பெற்று கொண்டிருக்கிறது எனலாம். முக்கியத் திருப்பணிகள் பல முடிந்துவிட்டாலும், இன்னும் நிறைவேற வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன.

ஆலய அமைப்பு:

கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்ட கற்றளியாக  பையனூர் சிவாலயம் அமைந்துள்ளது. ஆலய விமான அமைப்பு, “கஜபிரஷ்டம்’ எனப்படும் தூங்காளை மாட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

எதிரே நந்தி மண்டபத்தில் எழிலான நந்தி தேவர், இறைவனை நோக்கி அமரக் காத்துள்ளார். அன்னை எழிலார் குழலி, ஆலயத்தின் இடது முன்புறம் சந்நிதி கொண்டுள்ளாள்.

இது தவிர தென்மேற்கில் விநாயகர், வட மேற்கில் வள்ளி- தெய்வானையுடன் முருகப் பெருமான், மேற்கில் வள்ளலார், சரபேஸ்வரர், வட கிழக்கில் கால பைரவர், பஞ்ச கோட்டங்களில் நர்த்தன விநாயகர். தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். அம்மன் சந்நிதி அருகே நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது. இவற்றுள் சில, அண்மைக்கால அமைப்பாகும்.
பையனூர் சிவாலயத்தின் பெரும்பகுதி திருப்பணி முடிவடைந்து, மீதமுள்ள பணிகள் பொருளாதாரக் குறைவினால் மிக மந்தமாக நடந்தேறி வருகின்றன. அடியார்கள் மனது வைத்தால் விரைவில் திருப்பணிகள் முற்றுப் பெறும்.

எனினும் ஆண்டவன் மீதுள்ள அளவற்ற நம்பிக்கையால், இப்பழமையான சிவாலயத்திற்கு வரும் ஜனவரி 26ஆம் நாளன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் கும்பாபிஷேக விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் கலந்துகொண்டு எட்டீஸ்வரர் அருளால் வாழ்வில் ஏற்றங்கள் பெறுவோம்!
ஆலயத் திருப்பணியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், தங்கள் உதவியை காசோலையாகவோ, டி.டி.யாகவோ, மணியார்டர் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இந்தியன் வங்கி, திருப்போரூர் சேமிப்பு கணக்கு எண்: 827996759லும் நன்கொடை செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு அணுகவேண்டிய முகவரி:

“அருள்மிகு எழிலார் குழலி உடனுறை எட்டீஸ்வரர்
பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட்,
பையனூர் கிராமம், செங்கை வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம், பின்கோடு: 603 104.
தொலைபேசி: 99415 34893.

அமைவிடம்:

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில், பழைய மாமல்லபுரம் சாலையில் பையனூர் அமைந்துள்ளது. திருப்போரூரில் இருந்து தெற்கே 8.கி.மீ., மாமல்லபுரத்திற்கு வடக்கே 5 கி.மீ., சென்னையிலிருந்து தெற்கே 53 கி.மீ., செங்கல்பட்டிற்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் இத்தலத்தை தரிசிக்கலாம்.

Leave a Reply