குரோம்பேட்டை: குமரன்குன்றம்:: ராஜ குமாரனுக்கு ராஜகோபுரம்!

முருகன் ஆலயம்

கோயில் அடிவாரத்தில் ஸ்ரீசித்தி விநாயகர், ஜெயமங்கள தன்ம காளி, நவக்கிரகங்கள், இடும்பன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. தரிசித்து படி ஏறினால் சிவன் கோயிலை அடையலாம். கோயிலுக்கு முன்பு ஒரு அழகான மண்டபம் உருவாகி வருகின்றது. அங்கு சற்று ஓய்வெடுத்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்கச் செல்கிறோம். தனயனைப் போல தந்தையும் வடக்கு நோக்கியுள்ளார். தாய், கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இங்குள்ள உற்சவ நடராஜர், கால் மாறி நடனமாடி மதுரையில் உள்ள “வெள்ளி அம்பலவாணரை’ நினைவூட்டுகிறார். அருகே சிவகாமி அம்மை, மாணிக்க வாசகர் ஆகியோர் தரிசனமளிக்கின்றனர்.

திருச்சுற்றின் கிழக்குப் பக்கத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்குத் தனி சந்நிதி உள்ளது. மேலும் கோஷ்ட தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, துர்க்கை முதலியோர் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர், “சிவ தரிசன புண்ணியம்’ தர, தனியே வீற்றிருக்கிறார். சூரியன், சந்திரன், பைரவர் சந்நிதிகளும், உற்சவர் மண்டபமும் சிவன் கோயிலிலேயே உள்ளன.

அனைத்துத் தெய்வங்களையும் சிவாலயத்தில் தரிசித்து, வெளியே வந்து மேலும் சில படிகள் ஏறினால் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயிலை அடையலாம். இந்த சந்நிதி அழகுற அமைந்துள்ளது. “வெகு கோடி நாம சம்பு குமாரனை’ தரிசிக்க மனமெல்லாம் நிறைவடைகிறது. திரிசூலம், திருநீர்மலை இரண்டுக்கும் இடையில் உள்ளது குமரன் குன்றம். இந்த அமைப்பு, “சோமாஸ்கந்த’ வடிவத்தை நினைவூட்டுகிறது.

இக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம் (பால் காவடி), தைக் கிருத்திகை, சிவராத்திரி, தமிழ்ப் புத்தாண்டு (குமரன் குன்றம் திருப்புகழ் மன்றத்தினரின் மாபெரும் படித் திருவிழா), வைகாசி விசாக லட்சார்ச்சனை, ஆடிக் கிருத்திகை, நவராத்திரி, அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், திருக்கார்த்திகை முதலிய விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக திருவாதிரை அன்று திருவீதி உலா, அற்புதமாக நடைபெறுகிறது.

மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் அரங்கில் தினசரி திருப்புகழ், தேவார இன்னிசையும், விழாக்காலங்களில் சொற்பொழிவும் நடைபெறுகின்றன. அருகில் உள்ள வேத பாடசாலையில் மாணவர்கள் “மறைகள்’ பயின்று வருகின்றனர்.

இத்தனைச் சிறப்பு மிக்க கோயிலில் ராஜ கோபுரம் இல்லாதது ஓர் குறையாக இருந்து வருகிறது. இதைத் தீர்க்க இந்து அறநிலையத்துறை ஒப்புதலுடன் ராஜ கோபுரத் திருப்பணியை ஆலய நிர்வாகத்தினர் துவங்கியுள்ளார்கள். ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் எழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்ற 12.12.2010 அன்று பூஜை போடப்பட்டு, 24.2.2011 அன்று திருப்பணி துவக்க விழா நடைபெற்று, பணிகள் தொடர்கின்றன. இத்துடன் கொடி மர ஸ்தாபனமும் உண்டு. செங்கல், ஜல்லி, மணல், சிமெண்ட், இரும்பு கம்பிகள் முதலியவை பெருமளவில் தேவைப்படுகின்றன. இவை தவிர, நுழைவாயிலில் உள்ள கல் திருப்பணி வேலையும் நடைபெற்றாக வேண்டும்.

ராஜகோபுரம் முடித்த பின்பு குடமுழுக்கு நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் பெருந்தொகை செலவாகக் கூடும்.

“ஸ்தூல லிங்கம்’ என்று ராஜ கோபுரத்தை இயம்புவார்கள். நெடுந்தூரத்துக்கு அப்பால் இருந்தும் ராஜ கோபுரத்தை தரிசிப்பது புண்ணியம். கண்களில் ராஜ கோபுரம் தென்படும் பொழுது அதையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவது முறை. எட்ட இருப்பவர்களுக்கும் கடவுளைப் பற்றிய ஞாபகமூட்டுதற்கே அது அமைந்திருக்கிறது.

“”புல்லினால் ஐந்து கோடி, புது மண்ணால் பத்து கோடி, செல்லுமா ஞாலம் தன்னில் செங்கல்லால் நூறு கோடி அல்லியங் கோதை கேளாய் அரனுறை ஆலயத்தை கல்லினால் செய்வித்தோர்கள் கயிலை விட்டு அகலாரென்றே” என்ற வாக்கின்படி ஆலயத் திருப்பணியில் பங்கேற்போர் பெறும் புண்ணியம் அளவிடற்கரியது. எனவே இத்திருப்பணியில் முருக பக்தர்கள் எங்கிருந்தாலும் ஈடுபட்டு ஸ்ரீசுவாமிநாத சுவாமியின் அருளைப் பெற வேண்டும்.

முருகப் பெருமான் ஆண்டிக் கோலத்திலும் தரிசனமளிப்பவர்; ஆயினும் அவரே அரசர்க்கும் அரசரான சிவபெருமான் பெற்ற ராஜ குமாரன் அல்லவா? அவருடைய ஆலயத்தில் ராஜ கோபுரம் அமைப்பது நமது புண்ணியக் கடமையன்றோ!

நடைபெற வேண்டிய அனைத்துத் திருப்பணிகளுக்காகவும் பக்தர்களின் மேலான பங்கேற்பை எதிர்பார்க்கின்றோம். திருப்பணி ஆர்வலர்கள், காசோலை மற்றும் வரைவோலை மூலம் நன்கொடை அனுப்பலாம்.

“”kumaran Kundram Rajagopuram Tiruppani committee” என்ற பெயரில் காசோலை / வரைவோலை எடுத்து, “”அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை-44” என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விபரங்களுக்கு சி.ஆர். நரசிம்மன், 94441 7843 4 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கட்டுரை: தினமணி – வெள்ளிமணி

Leave a Reply