திருப்பதி திருமலையில் திருக்கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான குடில்கள், புரோகிதர் சங்கத்துக்குச் சொந்தமான இடம், மடங்களில் மட்டுமே இதுவரை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. கோவிலுக்குச் சொந்தமான தனி திருமண மண்டபம் இதுவரை திருமலையில் கட்டப்படவில்லை.
கோவிலுக்காக திருமண மண்டபம் கட்ட முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ஆதிகேசவலு நாயுடு முடிவெடுத்து, பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள இடத்தில் அதற்கான பணிகளையும் தொடங்கினார். தற்போது பெரும்பாலான பணிகள் முடிவுற்றுள்ளன. இந்த மண்டபத்தில் முதல் நிகழ்ச்சியாக திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் மே 20-ம் தேதி 6-வது கட்டமாக செய்ய உள்ள இலவசத் திருமணங்கள் நடக்கும் எனத் தெரிகிறது. இதன் பிறகு இந்த மண்டபம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படுமாம்.