ஆனால், தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலும், நடராஜப் பெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான குற்றாலம் சித்திரசபையும், குற்றால நாதர் கோயிலும் தவிர இன்னும் பல திவ்வியத் தலங்கள் சுற்றிலும் உள்ளன. அவைகளில் முக்கியமானதாகவும், இயற்கை அழகு கொஞ்சும் மனசுக்கு நிம்மதியளிக்கும் தலமாகவும், வரம் தரும் முருகப் பெருமானின் திவ்வியத் தலமாகவும் திகழ்வது திருமலைக் கோயில் என்னும் திருத்தலம். இது குற்றாலம் – செங்கோட்டை- பண்பொழி மார்க்கத்தில் குற்றாலத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
பொதிகை மலையின் ரம்மியமான அழகையும் மலையேறிச் செல்லும் நிம்மதியையும் விரும்புவோருக்கு அருமையான இடம் இந்தத் தலம். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் சுகமான இடம் இந்தத் திருமலைக்கோயில். இங்குள்ள முருகப் பெருமான், பால முருகனாக கையில் வேலோடும், மயிலோடும் காட்சி தருகிறான். மிகப் பிரமாண்டமான கோயில். படிகளில் ஏறிச் செல்லுகையில், அங்கங்கே ஓய்வெடுக்க அழகான மண்டபங்களைக் கட்டி வைத்துள்ளார்கள் பக்தர்கள் பலர். சுமார் 500 அடி உயரம் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.
செல்வதற்கு அழகான மிதமான படிகள், ஓய்வெடுக்க மண்டபங்கள் என வயதானவரும் கூட வந்து தரிசிக்கும் வண்ணம் திகழும் இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் பேரழகின் பிம்பமாய் காட்சி தருகிறார். நான்கு திருக்கரங்கள், வலது முன் கை அபய ஹஸ்தமாக உற்ற துணை நானே என்று அருகில் அழைத்து அருள் மழை பொழியும் சங்கதியைச் சொல்லுகிறது. வலது பக்க பின் கை வஜ்ராயுதம் தாங்கி அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன இந்தத் திருவுருவம் இங்கு வந்த கதை சுவாரஸ்யமான ஒன்று.
>முருகன் தலத்தின் சிறப்பு:

அது – ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியில் உற்பத்தியாகி, பல ஆயிரம் ச.மைல் பரப்புள்ள நிலத்தைப் பசுமையாக்கி, அதே மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் உள்ள கடல்பகுதியில் கடலில் சங்கமிக்கிறது என்ற சிறப்பு பெற்ற தாமிரவருணி நதி ஒரு சிறப்பு. மற்றொரு சிறப்பு, பழங்கால இலக்கியங்கள் காட்டும் ஐவகை நிலப்பரப்பும் கொண்ட ஒரே பகுதி என்ற சிறப்பு கொண்டது நெல்லைச் சீமை என்பதே அது.
மலையும் மலை சார்ந்த இடமும் – குறிஞ்சி, நிலமும் நிலம் சார்ந்த இடமும் – முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமும் – மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் – நெய்தல், வறண்ட பகுதி – பாலை என்று ஐவகை நிலப்பகுதியைப் பிரித்து வைத்தது முன்னோர் சாதனை. இந்த ஐவகை நிலப்பரப்பும் நெல்லைச் சீமையிலேயே உள்ளது.

சிலப்பதிகாரம் சொல்லும்… குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து, நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்து, பாலை என்பதோர் படிவம் கொள்ளும்… என்று! பாலை என்ற ஐந்தாவது நிலப் பகுதி, தனியாக இல்லாதுபோயினும், குறிஞ்சியும் முல்லையும் தட்பவெப்ப நிலை மாறின், பாலையாக மாறுகிறது என்பது இதன் கருத்து. ஆனால், நெல்லைச் சீமையில் இந்தப் பாலை நிலமும் உண்டு. வள்ளியூர், ராதாபுரம் பகுதிகளைச் சேர்ந்த நிலப்பகுதி அதைச் சொல்லும். ஆக, இந்த ஐவகை நிலப்பாகுபாடும் நெல்லைச்சீமையில் உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க இந்தப் பகுதியில், முருக வழிபாடும் திருமால் வழிபாடும் செழித்தோங்கியுள்ளது. மாலவன் பேர் சொல்லும் நவ திருப்பதிகள் இந்தத் தாமிரபரணிக் கரையோரம் சிறப்புற விளங்குகிறது. அதுபோல் பொதிகை மலையை ஒட்டிய திருமலைக்கோயில் முருகப் பெருமானும், கடற்கரையை ஒட்டிய பகுதியான திருச்சீரலைவாய் என்று போற்றப்பெறும் திருச்செந்தூர் முருகப் பெருமானும் நெல்லைச் சீமைக்கு அணிசேர்த்து அருள் செய்கின்றனர்.

பிரணவ மலை – திருமலை:

கோட்டைத்திரடு கோயில்:

சேரநாட்டைச் சேர்ந்த பந்தள அரசர்கள் இங்கு கோட்டையமைத்து கோட்டையில் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார்களாம். பகைவர்களாலும் ஆற்று வெள்ளத்தாலும் கோட்டையும் கோயிலும் பெரும் அழிவைச் சந்திக்க, பந்தள அரசமரபினர் இந்தக் கோட்டையை அப்படியே கைவிட்டு அவர்கள் பிரதேசத்துக்குச் சென்றுவிட்டார்களாம். அதன்பிறகு கவனிப்பாரற்றுப் போனது கோட்டையில் இருந்த கோயில். ஆனால் முருகப் பெருமான் தன் பக்தர் ஒருவர் மூலம் தன்னை வெளிப்படுத்தி, மலைமீது கொண்டான்.
ஆதி உத்தண்ட நிலையம்:

புளியமரத்தடியில் காட்சி தரும் இதனை அந்தக்காலத்தில் பலர் வழிபட்டு வந்துள்ளனர். அவர்களில் பூவன் பட்டர் என்பாரும் ஒருவர். இவர் திருமலையில் எழுந்தருளியிருந்த ஆதி உத்தண்ட நிலைய மயிலையும் வேலையும் முருகனையும் வழிபட்டு, பூசனைகள் புரிந்த பிறகு புளியமரத்தடியில் சற்றே ஒய்வெடுத்து, பிறகு மலையிலிருந்து கீழிறங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அப்படி ஒருநாள் அவர் மதிய நேரத்தில் ஓய்வெடுக்க சிறிது கண்ணயர்ந்த போது, முருகன் அவர் கனவில் தோன்றி ‘தாம் கோட்டைத் திரடு கோட்டையில் புதர்கள் மண்டிய பகுதியில் மறைந்து கிடப்பதாகவும், தாம் இருக்கும் இடத்தை கட்டெறும்புகள் கூடி வழிகாட்டும்’ என்றும் கூறி மறைந்தான். அதே நேரத்தில், பந்தள அரசர் கனவிலும் முருகன் தன் இருப்பிடம் குறித்த செய்தியைக் கூறி மறைந்தான். உடனே அவர்களும் விரைந்து வர, கோட்டைத் திரடு பகுதியில் பூவன் பட்டர் அவர்களை எதிர்கொண்டழைத்து, முருகன் கனவில் சொன்ன செய்தியைக் கூற, அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். பிறகு கட்டெறும்புகள் வழிகாட்ட, அங்கே ஒரு புதருக்குள் மறைந்து கிடந்த முருகப் பெருமானை வெளிக்கொணர்ந்தார்கள். அப்படி மண்ணை வெட்டி விக்கிரகத்தை வெளியே எடுக்கும்போது, மண்வெட்டி முருகப் பெருமான் மூக்கில் சிறிது சேதம் விளைவித்துவிட்டது. இதனை இன்றும் திருமலையில் காணலாம். அதனால் இந்தப் பெருமானை நாட்டுப்புற வழக்கில் மூக்கன் என்றும் அழைக்கின்றார்கள்.

அதன்பிறகு திருமலையில் மலைமீது ஆதி உத்தண்ட நிலையத்துக்கு அருகில் அருமையான ஒரு கோயிலை எழுப்பினார்கள் பந்தள அரசர்கள். அந்தக் கோயில் கேரள பாணியில் அமைந்திருந்தது. பிற்காலங்களில் பலர் பலவிதமான திருப்பணிகளைச் செய்து தற்போதைய பிரமாண்டமான கோட்டை போன்ற இந்தக் கோயிலை நாம் தரிசித்து வருகிறோம்.
தமிழுக்கு இலக்கணம் வகுத்த குறுமுனி அகத்தியர் இந்தக் கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்ட செய்திகள் உண்டு. பொதிகை மலையில் வாழ்ந்து வந்த அகத்தியர் திருமலைக்கு வந்து முருகனை வணங்கி வந்தார். முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அமைத்தார். அதில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் பெயர்களில் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். அவற்றில் எப்போதும் நீர் நிறைந்தே இருக்கும். எப்போதாவது இக்குழிகளில் நீர் குறைந்தால், உடனே மழை பொழிந்து இந்தக் குழிகளை நிரப்பி விடும் என்பது இந்தத் தலத்து வரலாறு.
இந்தச் சுனைக்கு அஷ்ட பத்மக் குளம் என்று பெயர் ஏற்பட்டது. இதில் நீராடி, முருகனை வழிபட்டு வந்தால், நோய்நொடி நீங்கி நீண்ட நாட்கள் வாழலாம் என்பது நம்பிக்கை. இந்தச் சுனையில் நாள்தோறும் குவளைப் பூ ஒன்று பூக்குமாம். அதை சப்தகன்னியர் எடுத்து ஆதி உத்தண்ட நிலைய முருகப் பெருமானை வழிபட்டு வந்தார்களாம். இந்த முருகன் சன்னிதியில் ஏழுகன்னிமார்களுக்கும் சன்னதியிருப்பது ஆச்சர்யமான ஒன்று.
முருகபக்தர்களாகத் திகழ்ந்த பல கவிகளும் பெரியவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து முருகனைப் பாடி அருள் பெற்றுள்ளார்கள்.
சன்னிதிகள்:

இந்த விநாயகரை வணங்கி, வலம் வந்து ஆதி உத்தண்ட வேலாயுதத்தையும், சப்த கன்னியரையும் வணங்கி, அருகே இருக்கும் தீர்த்தக் குளத்தை தரிசிக்கலாம். அத்தோடு சுற்றிலும் சூழ்ந்திருக்கும் மலைகளின் இயற்கை அழகை ரசிக்கலாம். மேகங்கள் நம் கைகளைத் தொட்டுச் செல்வதுபோல் நம்மை உரசிச் செல்லும் அனுபவத்தைப் பெறலாம்.
பிறகு திருமலைக்காளி சன்னிதி சென்று காளிதேவியை வணங்கி திருமலைக் குமாரனின் சன்னிதிக்குள் சென்றால் அங்கே அழகிய பாண்டி நாட்டு கட்டடக் கலையில் அமைந்த அழகான தூண்கள் அமைந்த மண்டபத்தையும் முருகன் சன்னிதியையும் தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தியும் அறுமுகப் பெருமானும் ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்கள்.

விழாக்கள்:
பண்பொழி திருமலைக் குமாரசுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இந்தக் கோயிலின் திருவிழாக்கள் திருமலையின் மேல்தளத்திலும் வண்டாடும் பொட்டலிலும் பண்பொழியிலும் நடைபெறுகின்றன.
கார்த்திகை மாதத்தில் கடைசித் திங்கள் பண்பொழியில் நரீசுவரமுடிஅயார் கோயிலுக்கு எதிர்ப்புறமுள்ல சிங்காரத் தெப்பக் குளத்தில் திருமலைக் குமாரசாமிக்கு தெப்ப உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். தைப்பூச உத்ஸவம் இந்தக் கோயிலின் சிறப்பான உத்ஸ்வமாகும். ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா பத்து தினங்கள் சிறப்பாக நடைபெறும். சித்திரை மாத ஐந்து தினங்கள், தமிழ் மாதப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு உத்ஸவங்கள் என்று எப்போதும் இங்கு திருவிழாக்கள் களைகட்டும்.

முருகப் பெருமான் அருளால் நல்லோர் நெஞ்சில் இந்த எண்ணம் புகுந்தது. இப்போது, மலைப்பாதை அமைக்கும் பணி தொடங்கப் பட்டிருக்கின்றது. விரைவில் இது நிறைவேறும் என்று நம்புவோம்.
குற்றாலத்துக்கு சுற்றுலா வருகிறவர்கள் அப்படியே இந்தத் திருமலைக்கும் வந்து திருமலைக்குமாரசாமியின் தரிசனம் பெற்று சகல நலங்களும் பெறலாம்.
– கட்டுரை மற்றும் படங்கள் : செங்கோட்டை ஸ்ரீராம்
(குறிப்பு: முருகப் பெருமானின் படம், பைரவர் படம் பெரிய அளவில் (பிக்சல் பெரிதாக) தேவைப்பட்டால் e-mail இல் தொடர்பு கொள்ளுங்கள். mail id: request@deivatamil.com )
Panpozhi – Thirumalaikumarasamy Temple Photos: