திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

ஆலய தரிசனம்

இந்தத் தலத்துக்கு அருகே உள்ள திருக்கோவிலில் எம்பெருமான் குமுதவிமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் திருநாமம் அரவிந்தலோசனர் என்பது. செந்தாமரைக் கண்ணன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

சுப்ரப முனிவர் இந்த இடத்தின் பொலிவைப் பார்த்து யாகம் செய்ய முடிவு செய்தார். யாக சாலைக்காக பூமியை பண் படுத்தினார். அப்போது ஓர் துலாக்கோலும் (தராசு) வில்லும் இருந்ததைக் கண்டார். அவற்றைத் தம் வலக்கையால் தொட்டு எடுத்ததும், துலையும் வில்லும் சாபத்திலிருந்து விடுபட்டு ஒரு தம்பதியராக முன்னின்றன. அவர்கள் இருவரும் குபேரனின் சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், இந்தத் தலத்தில் வந்து இருந்ததாலும், மங்களம் கிடைக்கப் பெற்றதாலும், அவர் கையால் சாப விமோசனம் அடையப் பெற்றன. எனவே இந்தத் தலம் துலை வில்லி மங்களம் என்று அழைக்கப்படுகிறது. அதன்பின் முனிவர்கள் யாகத்தை முழுமை செய்து விஷ்ணுவை ஆராதனை செய்தனர். அங்கே தோன்றிய தேவர்பிரானை, தேவபிரான் என்ற திருநாமத்தில் அழைத்தனர். அவரை இந்த யாகசாலையில் எழுந்தருளச் செய்து, பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என முனிவர்கள் வேண்டிக் கொண்டனர். அதனால், தேவபிரான் இங்கே எழுந்தருளி அருள்புரிகிறார்.

இது, யாகசாலை இருந்த இடம் என்பதால் துவாரபாலகர்கள் இல்லை.

தேவபிரான் சந்நிதிக்கு வடதிசையில் உள்ள பொய்கையில் இருந்து சுப்ரப முனிவர் தாமரைப் பூக்களைப் பறித்து மாலையாக்கி பெருமானுக்கு அணிவித்து வந்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த தேவபிரான், சுப்ரப முனிவரின் பின்னேயே சென்று, அந்த மலர்ப் பொய்கையைக் கண்டார். பொய்கையின் பொலிவும், புஷ்ப, மரங்கள் மற்றும் அங்கே தவழும் தென்றலும் அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. எனவே பெருமான், தான் அங்கும் தங்க விரும்பினார். எனவே சுப்ரப முனிவரிடம், யாகசாலையில் தேவபிரானாகவும், இந்த அழகிய தாமரைத் தடாகத்தில் அரவிந்த லோசனனாகவும் (செந்தாமரைக் கண்ணன்) அருள்புரிவதாகக் கூறினார்.

அசுவினி தேவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தேவர்பிரானையும், அரவிந்தலோசனரையும் வழிபட்டனர். பலனாக, வேள்வியில் தமக்கும் அவிர்ப்பாகம் கிடைக்க வேண்டி, அவிர்பாகம் பெற்றனர்.

ஐப்பசி மாத ரேவதி நட்சத்திரத்தில் பிரம்மோற்ஸவம் தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது. ஆடி சுவாதி நட்சத்திரத்தில், பட்சிராஜனான கருடனுக்கு விழா நடைபெறுகிறது. இவ்விரு பெருமாளையும் தரிசிப்பவர்களுக்கு கால சர்ப்ப தோஷம், ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். பூர்வ புண்ய பாவம் தொலையும்.

தலத்தின் பெயர் : இரட்டைத் திருப்பதி (இரட்டைத் துலைவில்லிமங்கலம்)

அம்சம் : ராகு

மூலவர் : ஸ்ரீனிவாசன்

உற்ஸவர் : தேவர்பிரான்

தாயார் : அலமேலுமங்கை , பத்மாவதி

இருப்பிடம் : பெருங்குளத்தில் இருந்து கிழக்கே அரை கி.மீ. தொலைவு.

தலத்தின் பெயர் : இரட்டை திருப்பதி (இரட்டைத் துலைவில்லிமங்கலம்)

அம்சம் : கேது

மூலவர் : அரவிந்தலோசனர்

உற்ஸவர் : செந்தாமரைக் கண்ணன்

தாயார் : கருத்தடங்கண்ணி

இருப்பிடம் : பெருங்குளத்தில் இருந்து கிழக்கே அரை கி.மீ. தொலைவு.

இரட்டைத் திருப்பதி – ஏ. வெங்கட்ராமன் 9443 554570

நடை திறக்கும் நேரம் : காலை 8 – 12 மாலை 1 – 5

Leave a Reply