சித்தம் கவரும் ‘சித்தாடி’ காத்தாயி!

அம்பிகை ஆலயம்

 

கிராமிய தெய்வங்களில் “காத்தாயி’ என்னும் காவல் தேவி வழிபாடு குறிப்பிடத் தக்கது. சில இடங்களில், “காத்தவராயனைப் பெற்றெடுத்துப் பேணிக்காக்கும் பார்வதி’ என்ற பொருளில் காத்தானின் ஆயி- காத்தாயி என்று பெயர் அமைந்ததாகக் கூறுவர். “காத்தாயி’ என்பவள் வள்ளியின் வடிவம் என்றும், அவளை மணப்பதற்காக முருகன் தேடி வந்ததாகவும் சில வட்டாரங்களில் குறிப்பிடுகின்றனர். பச்சையம்மன் குடியுள்ள கிராமக் கோயில்கள் சிலவற்றில், அவளுக்கு இணையாக அருகில் காத்தாயியும் அருள் பாலிக்கிறாள்.

தஞ்சை மாவட்டத்தில், பல கிராமங்களில் காத்தாயி அம்மன் கோயில்கள் உள்ளன. அவைகளில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சித்தாடி காத்தாயி அம்மன் கோயிலும் ஒன்று. கடந்த பல ஆண்டுகளாக மக்களிடையே பிரபலமாக விளங்கி வரும் ஆலயம் இது. கும்பகோணம்- நன்னிலம் சாலையில், “பிலாவடி’ என்ற ஊருக்கு அருகே, முடிகொண்டான் ஆற்றின் கரையில் உள்ள கோயிலில், “காத்தாயி’ அருள் ஒளி வீசிவருகிறாள். சோலை சூழ்ந்த நந்தவனத்தின் மத்தியில் அமைந்த இக்கோயிலில், “பச்சை வாழியம்மன்’ என்ற பார்வதி தேவியும் காட்சியளிக்கிறாள். மகாமண்டபத்தில் அவளுக்கு வலப்புறம் தண்டாயுதபாணி சந்நிதியும், இடது புறம் காத்தாயி அம்மன் சந்நிதியும் உள்ளன.

வலக்கரத்தில் தாமரை மலர் ஏந்தி, இடக்கரத்தை லாவகமாக ஊன்றிய கோலத்துடன் “காத்தாயி’ காட்சியளிக்கிறாள். வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும், இடது காலை மடக்கியும் சுகாசனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் இந்த அம்பிகையின் கோலம் மிகமிக அழகு. அன்னையின் தலைக்கோலமோ மூன்று முடிச்சுகளுடன் காணப்படுகிறது. அவளது பாதத்தில் ஒரு கன்னிகைப் பெண் உருவம் காணப்படுகிறது. இத்தகைய அரிய அற்புதக் கோலம், வேறு எங்கும் காண இயலாதது. இந்த வடிவம், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அம்பிகையின் தலைக் கோலம், நாயக்கர் காலத்து சிகை அலங்காரத்தை ஒத்திருக்கிறது. தம்மை வழிபடும் அன்பர்களின் சித்தத்தில் புகுந்து பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறாள் இந்த அற்புதத் தாய். ஒவ்வொருவருடைய அனுபவமும் வியப்புகளை விரிய வைக்கின்றது.

கி.பி. 1544ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த “செவப்ப நாயக்கர்’ ஆட்சியில், சோழ மண்டலத்தில், புத்தாற்றுக்கு வடக்கில் உள்ள ஆவணம், சித்தாடி என்ற இரண்டு கிராமங்கள், முன்னர் கோயில் பற்றாக அதாவது மானிய கிராமங்களாக இருந்தனவாம். பின்பு அரசு அதிகாரிகள் அதனை மாற்றியுள்ளனர். இந்த விவரத்தை, “திருவிடைமருதூர் தேவான்மியான திருச்சிற்றம்பலப்பட்டர் மங்காமற் காத்தார்’ என்பவர், செவப்பநாயக்கர் கவனத்திற்கு கொண்டு சென்றாராம். விவரமறிந்த நாயக்கரால் அந்தக் கிராமங்கள் மீண்டும் கோயில் பற்றாக மாற்றப் பெற்றுள்ளன. இத்தகவல், விஜயநகரப் பேரரசால் சாசனமாக வடிக்கப்பட்டுள்ளதை திருவிடை மருதூர் கோயில் கல்வெட்டில் காண முடிகிறது.

அக்காலத்திலிருந்தே இந்த இரண்டு கிராமங்களும் தேவமான்யமாக அளிக்கப்பட்ட பின், பிற்காலத்தில் இக்கோயில் நாயக்க மன்னர்கள் உதவியால் கட்டப் பெற்றது.

பல ஆண்டுகளுக்கு முன் இவ்வூரில் இருந்த சிவாசாரியர் ஒருவர் கனவில் அம்பிகை தோன்றி, “தாம் முடிகொண்டான் ஆற்றில் வரப்போவதாக’ தெரிவித்தாளாம். அதன்படி ஆற்றின் கரையில் கிடைத்த அம்பிகையின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து, “காத்தாயி’ என்னும் திருநாமமிட்டு வழிபட்டு வந்தாராம் அந்த சிவாசாரியர். இப்படியோர் வரலாறு, இக்கோயிலில் கூறப்படுகிறது.

இத்திருக்கோயிலில் உள்ள பச்சைவாழியம்மன், வலக்கரத்தில் தாமரை ஏந்தியுள்ளாள். அதேபோல் “கஞ்சமலை சிவன்’ சந்நிதியில், சிவபெருமான் தனது வடிவத்தில் வலதுகரத்தில் தாமரை மலர் கொண்டுள்ளதும், காத்தாயி அம்மன் வலக்கரத்திலும் தாமரை மலர் உள்ளது. இது அரிய அமைப்பாகும். இக்கோயில் பிராகாரத்தில் பேச்சியாயி, லாட சன்யாசி, ஒன்பது முனிவர்கள், வீரபாகு, வீரமித்ரர், பொம்மி, வெள்ளையம்மன் ஆகியோரது சிலைகள் அமைந்துள்ளன.

இத்திருக்கோயிலில் “பச்சை படைத்தல்’ என்னும் வழிபாட்டு முறை சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் லட்சார்ச்சனை, நவசண்டி ஹோமம், குத்துவிளக்கு பூஜை, மகாஅபிஷேகம் முதலியன விசேஷமாக நடைபெற்று வருகின்றன.

“சித்தாடி ஸ்ரீகாத்தாயி அம்மன் பக்த ஜன டிரஸ்ட்’ என்ற அமைப்பை உருவாக்கி, இந்த அம்மனை குல தெய்வமாகக் கொண்டவர்கள்- மற்றும் பொது மக்களை ஒருங்கிணைத்து பல பணிகள் செய்து வருகிறார்கள். கடந்த 2006-ம் ஆண்டில், விமானத்துடன் கூடிய தனி சன்னிதிகள் கொண்ட பெரிய ஆலயமாக இக்கோயிலைப் புதுப்பித்து, வடக்கு ராஜகோபுரம் கட்டி, வெகுவிமரிசையாக மகாகும்பாபிஷேகத்தை நடத்தியுள்ளார்கள். தற்போது கிழக்கு ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் அற்புதமாக உருவாகி வருகிறது. மேலும் இது பற்றி தகவலறிய விரும்புவோர், மேற்படி அறக்கட்டளையின் பொருளாளர் விசுவநாதனை, “98406 78981′ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

70983" target="_blank">https://www.dinamani.com/edition/Story.aspx?artid=370983

 

Leave a Reply