ஸ்ரீரங்கம் :: காட்டழகியசிங்கர் திருக்கோவில் தரிசனம்

விழாக்கள் விசேஷங்கள்

காட்டழகிய சிங்கர் திருக்கோவில், ஸ்ரீரங்கம்

அதென்ன காட்டழகிய சிங்கர்..? காட்டழகியசிங்கர் மட்டுமா? மேட்டழகியசிங்கரும் இங்கு உண்டே!

வைணவர்களுக்கு பெரிய கோவில் என்று போற்றத்தக்கதான திருவரங்கம் பெரிய கோவிலில் தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ளது மேட்டழகிய சிங்கர் கோவில். திருவரங்கத்தில் மேட்டழகிய சிங்கர், காட்டழகிய சிங்கர் சந்நிதிகள் மிகப் பெருமை வாய்ந்தவை. அதிலும் மேட்டழகிய சிங்கர், திருவரங்கம் திருக்கோவிலிலேயே சந்நிதி கொண்டிருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோரும் தரிசிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், காட்டழகிய சிங்கர் சற்று தொலைவில், கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளதால், பலரும் அறியாத நிலை உள்ளது.

கம்பரின் ராமாயண அரங்கேற்றம், மேட்டழகிய சிங்கர் சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில்தான் நடந்ததாம். அரங்கேற்றத்தின்போது அழகியசிங்கர் சிரித்த ஒலி இடியென அனைவருக்கும் கேட்டதாம். அழகிய சிங்கரைப் பாட எண்ணியே கம்பர் தம் ராமாயணத்தில் சிங்கப் பெருமானின் பெருமையையும் பக்தன் பிரகலாதனின் மூலம் நாராயண மந்திரப் பெருமையையும் சொல்ல எண்ணி, இரணியன் வதைப் படலம் என்ற ஒன்றையே வைத்துப் பாடினாராம். மூல நூலான வால்மீகி ராமாயணத்தில் இது இல்லை என்றாலும், கம்பர் இந்த மேட்டழகிய சிங்கருக்காகவே பாடியதுதான் இரணியன் வதைப் படலம் என்பர்.

இனி, காட்டழகிய சிங்கருக்கு வருவோம̷் 0;

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்… இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாகத்தான் இருந்தது. திருவானைக்காவுக்குப் பிறகு திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகளும் இதர கொடிய மிருகங்களும் உலவும் இடமாகத் திகழ்ந்ததாம். இந்தப் பகுதியில் அடிக்கடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, மக்களுக்கும் பெரும் பய நெருக்கடியைத் தந்திருக்கிறது. அந்த நிலையில், யானைகளின் தொல்லையில் இருந்து தன் எல்லை மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோவிலும் கட்டுவித்தான். அப்படி உருப்பெற்றதுதான் இந்தக் கோவில். கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுகள் பழைமையான ஆலயமாகத் திகழ்கிறது. இருந்தபோதும், கி.பி.1297 வாக்கில், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இந்தக் கோவிலை எடுத்து புனர்நிர்மாணம் செய்து, கோவில் அழகுறத் திகழ வழி ஏற்படுத்தினான். இந்த மன்னனே, திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன். இவனுக்கு கலியுகராமன் என்றும் பெயர் உண்டு. இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான, கலியுகராமன் சதுர்வேதிமங்கலம் இங்கே அமையப் பெற்றது.

(உபரி தகவல்: இந்த மன்னனின் வீரதீரங்களைச் சொல்லும் ஒரு மெய்கீர்த்தி (கல்வெட்டு), திருவெள்ளறை திவ்யதேசத்தில் ஆலய சிறுகோபுரத்து நுழைவாயிலில் ஒரு புறத்தில் இருப்பதாக திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்தார். அதில் சோழன் – பாண்டியன் மோதலும், மோதலின் விளைவாக ஒருவரின் அரண்மனைகளை ஒருவர் அழித்துச் சென்றதும், ஆனால், ஒருவரின் பெயரால் கோவிலில் நிபந்தங்களை ஏற்படுத்திய செயலுக்கு மதிப்பளித்து, எதிராளியாக இருந்தாலும் அவர் பெயராலேயே அந்த நிபந்தம் தொடர்ந்து வர இந்தப் பாண்டியன் வழி ஏற்படுத்திச் சென்றதையும் அந்த மெய்கீர்த்தி உணர்த்தும் விதத்தைத் தெரிவித்தார்.)

ஸ்ரீரங்கம் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். முகப்பில் வரவேற்பு வளைவு உள்ளது. கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழையும்போதே இடப்புறத்தில் அழகான பெரிய மண்டபம் ஒன்றைக் காண்கிறோம். திருவரங்கம் நம்பெருமாள் விஜயதசமி அன்று பல்லக்கில் எழுந்தருளி இந்த மண்டபத்துக்கு வருகிறார். இங்கே நம்பெருமாளுக்கு திருவாராதனம், அமுதுபடிகள் ஆனபிறகு தங்கக் குதிரையில் ஏறி பார்வேட்டைக்குக் கிளம்புகிறார். இந்தக் கோவிலில் உள்ள வன்னி மரத்துக்கு திருவாராதனம் ஆனபிறகு, வேட்டை உற்ஸவம் தொடங்குகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மண்டபம் இது.

கோவிலின் உள்ளே செல்கிறோம். பலிபீடத்தைத் தாண்டி, கோவிலின் முன் மண்டபத்துக்குள் செல்கிறோம். மேலே பார்த்தால், அழகான திருவுருவப் படங்கள். திருச்சுற்றில் வலம் வருகிறோம். பரிவார தேவதைகளாக விஷ்வக்சேனரின் படைத்தலைவரான கஜானனர் தரிசனம் முதலில்! இதில் யோகஅனந்தர், யோக நரஸிம்ஹர் ஆகியோருடைய தரிசனமும் கிட்டுகிறது. காயத்ரி மண்டபத்தில் யோக நாராயணர், யோக வராஹர் ஆகியோரின் தரிசனம் கிடைக்கிறது.

பிராகார வலத்தில், சந்நிதியின் பின்புறம் வரிசையாக ஒன்பது துளசி மாடங்கள் உள்ளன. வலப்புறத்தில் வன்னிமரம் மற்றும் நாகப் பிரதிஷ்டையோடு கூடிய மரங்களையும் காண்கிறோம். 

உயர்ந்த விமானத்தோடு கூடிய கர்ப்பக்ருஹம். முகமண்டபம், மஹாமண்டபங்கள் பொலிவோடு திகழ்கின்றன. எதிரே கருடனுக்கு சந்நிதி உள்ளது. கர்ப்பக்ருஹம், அந்தராளம், முகமண்டபம், மஹாமண்டபம், கருடன் சந்நிதி ஆகியவை ஒன்றாக சீராக அமைந்துள்ளன. இன்னும் பல மண்டபங்கள், உத்தமநம்பி வம்சத்தில் உதித்த சக்ரராயராலும்,நாயக்க மன்னர்களாலும் அமைக்கப்பட்டுள்ளன.

மண்டபத்தின் சுவர்களில் உள்ள ஓவியங்கள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பிளந்த தூணிலிருந்து நரஸிம்மர் வெளிப்படும் தோற்றம், ஹிரண்யகசிபுவுடன் போர் செய்யும் தோற்றம், உக்ர நரஸிம்ஹராக, ஹிரண்யகசிபுவை தன் மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலம், பிரஹலாதன் நரஸிம்ஹரிடம் வேண்டிக் கொண்டு சாந்தப் படுத்தும் தோற்றம், லக்ஷ்மி நரஸிம்ஹர், யோக நரஸிம்ஹர், அனந்த நரஸிம்ஹர் என்று பல்வேறு வடிவங்களில் நரஸிம்ஹரின் தரிசனம் இங்கே நமக்குக் கிடைக்கிறது.
குலசேகரன் திருச்சுற்றான துரை பிரதட்சிணத்தில் உள்ள தூண்களில் தசாவதார உருவங்கள் அழகுற அமைந்துள்ளன. அதிலும் ஸ்ரீநரஸிம்ஹரின் உருவம் அவ்வளவு அழகு; தெளிவு!

சுற்று வலம் வந்து, சந்நிதிக்குள் செல்கிறோம். பழைமையின் கம்பீரம் உள் மண்டபத்தில் தெரிகிறது. உக்ரம்வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்; ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்|| என்று ஜொலிக்கும் மின்விளக்கு அலங்காரம் நம்மை ந்ருஸிம்ஹப் பெருமானைக் குறித்த தியானத்துக்கு தூண்டுகிறது. சந்நிதி கருவறையில், மஹாலக்ஷ்மியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லக்ஷ்மி நரஸிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கிறோம். மிகப் பெரீய்ய உருவம். சுமார் எட்டு அடி உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்ஹப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்துகிறது.

சகல நலன்களையும் வாரி வழங்கும் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹரை தரிசித்து வெளியே வருகிறோம்.

இந்தக் கோயிலில் மாதந்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷத் திருமஞ்சனம் நடக்கிறது. அதுபோல்,பிரதோஷ தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. சிங்கப்பெருமானின் வருஷத் திருநட்சத்திரம் ஆனி மாததிலும், ஜ்யேஷ்டாபிஷேகம் ஆடி மாதத்திலும் நடைபெறுகிறது. இந்தக் கோவிலில் உற்ஸவர் தனியாக இல்லை. எனவே, மற்ற உற்ஸவங்கள் அதாவது பிரம்மோற்ஸவம், ஊஞ்சல் உற்ஸவம் போன்றவை நடைபெறுவதில்லையாம்!

ஸ்ரீநரஸிம்ஹர் கோயிலில் பிரதோஷ வழிபாடா? எப்படி சாத்தியம்?
நரஸிம்ஹரும் மூன்று கண்களை உடையவர். பிரதோஷ காலத்தில் இவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிட்டும். ஆனால், இவர் ருத்ர அம்சம் இல்லை. பகவான் விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒரு அவதாரம். ஆனால், ஸ்ரீந்ருஸிம்ஹ ஸ்வாமி அவதாரம் செய்தது, பிரதோஷ காலத்தில்தான்! காரணம், ஹிரண்யகசிபு கேட்டுப் பெற்ற வரம் அது. பகலிலும் அல்லாமல் இரவிலும் அல்லாமல் பிரதோஷ காலத்தில் அந்த வரத்தை அனுசரித்து ந்ருஸிம்ஹ அவதாரம் நிகழ்ந்தது. அதனால், இங்கே பிரதோஷ சிறப்பு வழிபாடு உண்டு.

இந்தக் கோவிலுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. மகான் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த பிள்ளைலோகாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீவசனபூஷணம் என்ற அற்புத கிரந்தத்தை அருளிச் செய்தார். அப்படி அவர் அருளிச் செய்து, அதற்கான ரஹஸ்ய அர்த்தங்களையும் தம் சீடர்களுக்கு உபதேசித்த இடம் இந்தக் காட்டழகியசிங்கர் திருக்கோவிலே! ஆகவே, வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாகத் திகழ்கிறது இந்தக் கோவில்.

மேலும் படங்களுக்கு … https://senkottaisriram.blogspot.com/2010/05/blog-post_27.html

Leave a Reply