சமஸ்கிருத நாடகங்கள் (ஓர் அறிமுகம்)

விழாக்கள் விசேஷங்கள்

பண்டைய பாரதத்தில், நாடகக்கலை தொடர்பாக ‘நாடக சூத்திரங்கள்’ என்ற பெயரில், நாடகக் கலைஞர்களுக்கான ஒரு பயிற்சி நூலை இரு முனிவர்கள் தொகுத்திருந்ததாக, கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் ‘பாணினி’ தமது ‘வியாகரண சூத்திரத்தில்’ குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்தே பாரதநாட்டில் நாடகக்கலையானது மிகப்பழமையான காலங்களிலேயே பரவலாக மிளிர்ந்துள்ளது என்பதும், அதற்கான ஒரு ‘பயிற்சி நூல்’ கூட எழுதப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. ஆயினும் அந்த நூலின் பிரதி கிடைக்கவில்லை.

நாடகங்களின் வகைகளும், அவற்றிற்கான இலக்கணமும் சமஸ்கிருத மொழியில் சிறப்பாக வரையறுக்கப்பட்டுள்ளன.

உண்மையில் நடந்த சம்பவத்தை அப்படியே பின்னர் நாட்டிய – நாடகமாக நடித்துக் காட்டுவது ‘அனுகரணம்’ எனப்படும்.

மனித வாழ்க்கையில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை கற்பனை கலந்த கதையாக்கி, அதில் காதல், சோகம், துயரம் ஆகிய இன்ப, துன்பங்களையும், நகைச்சுவையுடன் கலந்து நாடகமாக்குவதற்கு ‘ப்ரகரணம்’ என்று பெயர்.

பௌராணிக, ராஜ – ரிஷிகள் கூறிய சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, அத்துடன் வீர ரசத்தையும், சிருங்கார ரசத்தையும் சேர்த்து நாடகமாக்குவது ‘டிமம்’ என்ற வகையாகும். தேவர்களும் அசுரர்களுமாகச் சேர்ந்து, ‘பாற்கடலை’க் கடைந்தது, அதிலிருந்து அமிர்தம் வந்தது̷ 0; அதை விஷ்ணுவானவர் மோகினியாக அவதாரமெடுத்து, அசுரர்களை மயக்கி ஏமாற்றி தேவர்களுக்கு மட்டும் பிரித்துக் கொடுத்தது ஆகிய வரலாற்றை விவரிக்கும் ‘அமிர்தமதனம்’ என்ற நாடகம் ‘டிமம்’ வகையைச் சேர்ந்தது.

சிவபெருமான் ‘திரிபுராந்தர்களை’ அழித்த வரலாற்றை விவரிக்கும் ‘திரிபுராக்தகம்’ என்ற நாடகம் ‘சம்ஹாரம்’ என்ற வகையைச் சேர்ந்தது.

யுத்தங்களையும் அவற்றில் வெளிப்படும் வீரரசத்தையும் விவரிக்கும் நாடகங்கள் ‘வயாயோகம்’ எனப்பட்டன.

உண்மையில் வாழ்ந்த ஒருவரின் வரலாற்றை நகைக்கும்படியோ, பழிக்கும்படியாகவோ மாற்றி (உதாரணம்: ‘நந்தனார்’ – கிந்தனார்) நடிக்கப்பட்ட நாடகம்: ‘ப்ரஹசனம்’ எனப்பட்டது.

ஒருவரே பல கதாபாத்திரங்களையும் ‘தனி நடிப்பாக’ (Mணிணணி  அஞிtடிணிண) நடித்துக் காட்டுவதற்கு ‘பாணம்’ என்று பெயர்.

இரண்டு நடிகர்கள், ஒருவருடன் மற்றவர் விவாதம் செய்யும் பாணியில் வசனம் பேசுவதும், தர்க்கப் பாடல்கள் பாடுவதும் ‘வீதி’ எனப்பட்டது.

ஓர் அழகான பெண்ணின் காரணமாக, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போட்டி வந்து, அது யுத்தமாக மாறிய வரலாற்றை விவரிக்கும் நாடகம்: ‘ஈ காம்ருஹம்’ என்ற வகையாகும்.

சமஸ்கிருத நாடகங்களில் இன்று நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நாடகம்: ‘உதயணன் – வாசவதத்தை’ தான்! அதன் முழுப்பெயர்: ‘வாசவதத்தா – நாட்டியதாரா.’ அந்நாடகத்தின் முழுப்பிரதியும் கிடைக்கவில்லை. கிடைத்தவரை, அந்நாடக நூல் கி.மு. நான்காம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசில் முதலமைச்சராகப் பணியாற்றிய ‘சுபந்து’ என்பவர் இயற்றியது என்றும், அது ‘நாடகத்திற்குள் ஒரு நாடகமாக’ அமைந்துள்ளது என்றும் மௌரியப் பேரரசர்களின் அரண்மனையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களை, கற்பனை கலந்து எழுதப்பட்டது அந்நாடகம் என்றும் தெரிய வந்துள்ளது.

கவிசுபந்துவுக்கு அடுத்து வந்த மாபெரும் கவிஞர் ‘பாஸர்.’ இவரும் பல நாடகங்களை இயற்றினார். அவற்றில் மிகவும் பிரபலமடைந்தது: ‘ஸ்வப்ன – வாசவதத்தம்’ என்பதாம். (இதுவும் கிட்டத்தட்ட ‘உதயணன் – வாசவதத்தை’ வரலாறுதான்!)

பாஸரைப் பின்பற்றி நாடகங்களை எழுதியவர்கள் மூவர்: ‘ஸொமில்லர்’ ‘கவிபுத்ரன்’ மற்றும் மகாகவி காளிதாசர்.

‘ஸொமில்லர்’ ‘கவிபுத்ரன்’ ஆகியோரின் நாடகங்களை காளிதாசரே புகழ்ந்து எழுதியுள்ளார். ஆயினும் அவர்களது நாடகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

மகாகவி காளிதாசர் இயற்றிய பல நாடகங்களில், ‘அபிக்ஞான சாகுந்தலம்’ ‘மேக சந்தேசம்’ ‘மாளவிகா – அக்னிமித்ரம்’ ‘விக்ரம் – ஊர்வசியம்’ ஆகியவை மிகப்பிரபலமானவை. சமஸ்கிருத நாடகம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது காளிதாசர் இயற்றிய ‘அபிக்ஞான சாகுந்தலம்’ தான்!

‘சாகுந்தல’த்தைப் போலவே பிரபலமான மற்றொரு நாடகம்: ‘மிருச்ச கடிகம்’ (களிமண் வண்டி) ‘சூத்ரகர்’ என்ற கவி ‘ப்ரகரணம்’ என்ற பாணியில் எழுதிய சமகால வரலாற்று நாடகம் இது. மன்னர்களின் சரித்திரங்களில் நடந்த சில நிகழ்வுகளையும் சூழ்ச்சி, பொறாமை, வஞ்சகம், திருட்டு, புகழ்ச்சி, இகழ்ச்சி, காதல், வீரம், சோகம், நகைச்சுவை ஆகியவற்றையும் கலந்து கற்பனை வளத்துடன் இயற்றப்பட்ட நாடகம்: ‘மிருச்சகடிகம்.’

இன்னும் கூட வட பாரதத்தில் பல நாடகக் குழுக்கள் இந்நாடகத்தை நடத்துகின்றன.

சூத்ரகருக்கு அடுத்து வந்தவர் ‘பவபூதி.’ கருணை ரசத்தை சிறப்பாகக் கையாண்டவர் இக்கவிஞர். இவர் இரு நாடகங்களை எழுதினார். முதலாவது ‘மாலதி மாதவம்.’ இதுவும் (‘மிருச்சகடிகம்’ போல) சமகால வரலாற்று நாடகம். ஆனால் இது ‘மிருச்சகடிகம் அளவிற்குப் பிரபலமாகவில்லை. ‘பவபூதி’யின் இரண்டாவது நாடகம்: ‘மஹாவீரசரிதம்’ (சமண தீர்த்தங்கரர் மஹாவீரருக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை) இந்நாடகம் லவ-குசர்களின் வரலாற்றை விவரிக்கும் ‘உத்தர – ராமாயணத்தை’ அடிப்படையாகக் கொண்டது.

வால்மீகி இராமாயணத்தைப் பின்பற்றி தமிழில் ‘கம்பராமாயணம்’ ஹிந்தியில் ‘ராமசரிதமானஸ்’ ஆகியவை எழுதப்பட்டது போல, ஏராளமான நாடகங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டன.

முராரி என்பவர் எழுதிய ‘அனர்க்க ராகவம்’ ராஜசேகரன் எழுதிய, ‘பாலராமாயணம்’ ஜெயதேவன் எழுதிய ‘ப்ரசன்ன ராகவம்’ மஹாராஜா சோமவர்மரின் ‘ராமாப்யூதம்’ மயூரராஜன் எழுதிய ‘தாத்தராகவம்’ மற்றும் ‘சாலிதராமம்’ ‘க்ருத்யாராவணம்’ ‘ஜானகிராகவம்’ சக்திபுத்ரன் என்பவர் எழுதிய ‘ஆச்சார்ய சூடாமணி’ மற்றும் ‘உன்மாத வாசவம்’ ஆகிய நாடகங்கள் குறிப்பிடத் தகுந்தவை.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பேரரசர் ‘ஸ்ரீஹர்ஷர்’ (கவிஞராகவும் திகழ்ந்தவர்) மூன்று சமஸ்கிருத நாடகங்களை இயற்றினார்: ‘ப்ரியதர்சிகை’ ‘ரத்னாவளி’ மற்றும் ‘நாகாநந்தம்!’

இவற்றில் ‘ப்ரியதர்சிகை’ என்ற நாடகம் மீண்டும் உதயணன் – வாசவதத்தை வரலாற்றையே விவரிக்கிறது.

‘நாகாநந்தம்’ கௌதமபுத்தரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், துறவு பூண்ட ஒரு க்ஷத்ரியரை குறித்து, ‘ஸ்ரீஹர்ஷர்’ என்ற மற்றொரு க்ஷத்ரியர் எப்படி நாடகம் எழுதலாமென்று அக்கால மன்னர்களிடையே விவாதம் நடக்குமளவிற்கு புரட்சிகரமாக அமைந்திருந்ததாம்.

ஸ்ரீ ஹர்ஷருக்குப் பிறகு, மற்றொரு மன்னரான, ‘அனங்க ஹர்ஷர்’ என்பவர் பாசரின் பாணியைப் பின்பற்றி, ‘தாபச வத்சராஜ’ என்றொரு நாடகத்தை எழுதினார். காளிதாசரைப் போல, வர்ணனைகளுக்காகப் புகழ்பெற்றார் அனங்கஹர்ஷர்.

விசர்கதத்தர் என்ற கவிஞர் இரண்டு நாடகங்களை எழுதினார். முதலாவது, ‘முத்ரா ராட்சஸம்’ இது நந்த மன்னர்களின் மதிமந்திரியாக இருந்த ‘ராட்சஸர்’ என்பவரை கதாநாயகராகக் கொண்டது. அடுத்தது, ‘தேவி சந்திரகுப்தம்’ இந்நாடகம் சந்திரகுப்த மன்னரையும், சாணக்கியரையும் முக்கியப் பாத்திரங்களாகக் கொண்டதாகும்! இந்த நாடகத்தின் பிரதி இன்று நமக்குக் கிடைக்கவில்லை.

தான் காதலித்த ஓர் இளம்பெண்ணை, தனது மூத்த சகோதரனுக்கு மணமுடித்து, அவளையும் தனது நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளும் சந்திரகுப்தன், சாணக்கியரின் உதவியுடன், அண்ணனைக் கொன்று தனது காதலியை மீட்டதாகக் கதையமைப்பு கொண்டிருந்ததாம் அந்த ‘தேவிசந்திரகுப்தம்’

வியாசரின் மஹாபாரதத்தை முதன் முதலாக நாடகமாக்கியவர் ‘பட்டநாராயணன்’ என்பவராவார். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டநாராயணன், கொலை, களவு, கள், காமம், பொய், சூது, வஞ்சகம், அன்பு, ஆசை ஆகிய ஒன்பது ரசங்களை அந்நாடகத்தில் பின்னிப் பிணைத்திருந்தாராம். அந்நாடகம்தான் ‘வேணி சம்ஹாரம்’ (வேணி என்பது தலைமுடி! இங்கு திரௌபதியின் அவிழ்ந்த கூந்தலைக் குறிக்கும்)

பத்தாம் நூற்றாண்டில் ‘ராஜசேகரன்’ என்ற கவிஞர், ‘வித்தஸால பிஞ்சிகை’ ‘கர்ப்பூர மஞ்சரிகை’ என்ற இரு நாடகங்களை இயற்றியிருக்கிறார். காளிதாசர் ஹர்ஷவர்த்தனர் ஆகியோரின் தாக்கத்தை அந்த இரு நாடகங்களிலும் காணலாம். ‘அஸ்வகோஷர்’ எழுதிய ‘சாரிபுத்ரப்ரஹரணம்’ என்ற நாடகம் புத்தரை நாயகனாகக் கொண்டு சாந்தரசத்துடன் எழுதப்பட்டது.

மேலே விவரிக்கப்பட்ட நாடகங்களைக் குறித்து இன்றைய தமிழ்நாடக ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள். இன்றைய இளைய தலைமுறை வாசகர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

அந்த நாடகங்களனைத்தும் தமிழில் புதிதாக மொழிபெயர்க்கப்பட்டு, இன்றைய நாடகப் பாணியில் பதிப்பிக்கப் பெற்றால், குறைந்தது தமிழ்மொழியிலாவது அந்நாடகங்களை வருங்கால சந்ததியினர் வாசித்துப் பயன்பெற இயலும்!

 

 

Leave a Reply