682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்
“மனிதனுக்கு உண்மையான சொந்தக்காரன் யார்?” என்று கேட்டால் தனக்குத்தானே தான் சொந்தக்காரன் என கீதையில் பகவான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
சாதாரணமாக நமக்கு யார் நன்மை புரிகிறார்களோ, அவர்தான் நம் சொந்தக்காரர். அப்படி பார்க்கும் பொழுது “உனக்கு நல்லது எது?” என்று கேட்டால் அதற்கு பதில்” இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை தான் எனக்கு நல்லது” என்பதாகும். இது நம்மால் தான் நமக்காக செய்ய முடியுமே தவிர வேறு யாராலும் செய்ய முடியாது.
ஸம்ஸாரஸாகரத்தில் மூழ்கி இருக்கும் தன்னை தன்னால்தான் உத்தரித்துக் கொள்ள முடியும் என்று பலரும் சொல்லி இருக்கிறார்.
அது எப்போது முடியும்? என்றால், வெளி விஷயங்களில் இருந்து மனதை ஆத்ம விஷயத்தில் திருப்பினால் தான்.
இது நடக்கவேண்டி இருந்தால், லௌகீக விஷயங்களில் முழு விரக்தி உண்டாக வேண்டும். இந்த விரக்தி லௌகீக விஷயங்கள் நிஸ்ஸாரமானவை என்கிற பாவம் உறுதியானால் தான் உண்டாகும். அதற்கு குருவின் உபதேசம் அருளும் மிகவும் அவசியம். இவ்வாறு ஒரு குருவின் உபதேசத்தால் எவனுக்கு வைராக்ய பாவனை அதிகமாகிறதோ அவனுக்கு ஆத்ம தர்சனம் செய்யும் தகுதி ஏற்படும். ஆத்ம சாக்ஷாத்காரம் ஏற்பட்டவனுக்குத்தான் ஜன்ம ஸார்த்தகம் (ஸாபல்யம்) கிடைக்கும். எவ்வளவு படிப்பு படித்திருந்தாலும் அந்தக் கல்வி கடைசியில் ஆத்ம தர்சனத்துக்கு ஒரு சாதனமாக வேண்டும்.
सा विद्या या विमुक्तये என்று முன்னோர்கள் சொல்லி இருப்பதை ஒருவரும் மறக்கக்கூடாது. ஆத்ம தர்சனத்துக்கு உதவாத வித்தை வித்தையே அல்ல.
பகவான் கீதையிலே சொல்லியிருக்கின்றார்;
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதெள |
ஞாத்வா சாஸ்த்ரவிதானோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி ||
அதாவது, “எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? நாம் எதைச் செய்தால் நமக்கு நல்லதாகும்? “ எதைச் செய்தால் நமக்குக் கெட்டதாகும்?” என்பதைத் தீர்மானம் செய்ய நம்மால் முடியாது. ஒவ்வொருவனுடைய புத்தியும் ஒரே வழியில் போகும் என்று சொல்ல முடியாது. ஆகவே, சாஸ்திரம்தான் பிரமாணம், இந்த தர்ம அதர்மங்களைப் பற்றி தீர்மானமாகச் சொல்வதற்குச் சாஸ்திரம் ஒன்றிற்குத்தான் உரிமை உண்டு. சாஸ்திரம் எதைச் சொல்கின்றதோ அதைத்தான் நாம் அனுசரிக்கவேண்டும். சாஸ்திரத்தின் மூலமாகத் தான் எது பாபம், எது புண்ணியம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மனிதனுடைய அகம்பாவத்துக்கு காரணமான அவனுடைய பணம், பாண்டித்யம் அல்லது பலம் அவனை கர்வம் கொள்ளச்செய்கிறது. ஆனால் இந்த மமதை உண்மையில் சத்ரு என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அது அவனை மிகவும் தொந்தரவு செய்யது தவறுகளிலும் ஈடுபட வைக்கிறது. தன்னை யாரும் எதிர்க்க முடியாது என்று அவன் தவராக நினைக்கிரான். ஆனால் அவனுடைய கெட்ட கர்மாவினால் அவன் கஷ்டங்களை அனுபவிப்பது நிச்சயம். அகம்பாவத்தை கைவிட்டாலே இதை தவிர்க்க முடியும்.
மனிதன் பணம், யௌவனம், பாண்டித்யம் காரணமாக கர்வப்படக்கூடாது. எல்லாவற்றையும் காலம் எடுத்து சென்றுவிடும். அவை சாஸ்வதமல்ல. பகவத்பாதர் போன்ற மஹரிஷிகள் எவ்வளவு அறிவாற்றல் பெற்றிருந்தாலும் துளி கர்வம் கூட இல்லாதவர்கள். அதனால் ஜனங்கள் அவர்களை மஹா புருஷர்கள் என்று வர்ணித்து இருக்கிறார்கள். ஆகவே எக்காரணம் கொண்டும் அகம்பாவம் கொள்ளாமல் மனிதன் எளிமையுடன் வாழ வேண்டும்..