67. கைகளில் தெய்வீகம்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“அயம் மே ஹஸ்தோ பகவான்… சிவாபிமர்சன:” – அதர்வண வேதம்.
“இந்த என் கை பாக்கியம் பெற்றது. பவித்ரமான ஸ்பரிசம் உடையது”
நம் கைகளில் மறைந்துள்ள ஆற்றல்கள் பல. நம் எண்ணங்களின் சக்தி எல்லாம் நம் உடலிலுள்ள பல்வேறு அவயவங்களில் பாய்கின்றன. அவற்றில் முக்கியமானது கைகள். இவை செயல்படும் சக்தியின் ஸ்தானம். எதைத் தொட்டாலும், எந்த செயலைச் செய்தாலும் கைகளால் தானே செய்ய முடியும்!
சிலருடைய கைகள் நம் மேல் பட்டாலே நம்மில் மறைந்திருக்கும் துஷ்ட சக்திகளைக் கூட வெளியே தள்ளி விடும். வேறு சிலரின் ஸ்பரிசம் தீய எண்ணங்களை நம்மில் செலுத்தக் கூடும். அது அந்தந்த மனிதர்கள் நல்லவரா கெட்டவரா என்பதைப் பொருத்து இருக்கும்.
நம் எண்ணங்களின் ஆற்றலை ஒன்றிணைத்து செயல்படுத்தினால் உடலெங்கும் உயிர்ப்பு பெறுகிறது. முக்கியமாக கைகளின் வழியே இது நடைபெறுகிறது. இந்த ரகசியத்தை கூறும் பாரதிய சனாதன விஞ்ஞானத்தில் ‘கர ஸ்பரிசம்’ தொடர்பான சில சம்பிரதாயங்கள் உள்ளன.
மந்திர ஜபம், பூஜை போன்றவற்றைச் செய்யும்போது அங்கந்யாஸம், கரந்யாஸம் செய்கிறோம். அதாவது மந்திர சக்தியை நம் உடலில் ஏற்பதற்கு முன்பாக கைகளில் உள்ள ஒவ்வொரு விரலிலும் உள்ளங்கையிலும் (கரதலம்), முதலில் நியாசம் செய்கிறோம். (இருத்துகிறோம்). அப்படிச் செய்தபின் கைகளால் உடல் முழுவதும் மந்திர சக்தியை நியாசம் செய்கிறோம். முதலில் மந்திர சக்தியை ஏற்பது கரங்களே!
கரங்களின் வழியாகவே தேவதைகளுக்கு தர்ப்பணம் அளிக்கிறோம். தேவ தர்பணம், பித்ரு தர்ப்பணம், ருஷி தர்ப்பணம் ஆகியவை கைகளின் வழியாகவே அளிக்கப்படுகிறது.
ஆசீர்வதிப்பதோடு கூட குரு தன் சீடனுக்கு அளிக்கும் தீட்சையில் ஹஸ்த ஸ்பரிச தீக்ஷை என்பது மிக முக்கியமானது. சீடனின் தலைமீது கைவைத்து மகான்கள் சக்திபாதம் மூலம் சீடனை அனுக்ரஹிப்பார்கள்.
நித்திய தெய்வ உபாசனை செய்பவர்களின் வலது கையில் அக்னி இருக்கும். அதனால்தான் அவர்களுக்கு ஏதேனும் தானம் செய்தால் அக்னிக்கு சமர்ப்பித்த (யக்ஞம் செய்த) பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தினமும் அனுஷ்டானம் செய்யும் மந்திரங்களை ஜபித்து, இரு உள்ளங்கைகளையும் தேய்த்து அந்த மந்திர சக்தியை உள்ளங்கையில் ஆவாகனம் செய்வதாக பாவனை செய்து வெப்பம் ஏறிய அந்த உள்ளங்கையால் யாராவது நோயாளியின் உடலைத் தொட்டால் விரைவில் குணமடைவார்.
விபூதியைக் கையில் பிடித்து, உள்ளங்கையில் உள்ள தெய்வீக சக்தியை கிரகிக்கும் முறையால் அந்த விபூதியை சக்தியோடு கூடியதாக்கலாம்.
இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் கையில் உள்ள ஐந்து விரல்களும் பஞ்ச பூதங்களுக்குக் குறியீடுகள். விரல்களில் “லம் ப்ருதிவீ தத்த்வாத்மனே” முதலிய மந்திரங்களால் தேவர்களுக்கு பஞ்ச பூஜை செய்வது வழக்கம்.
நல்ல எண்ணங்களோடும் அன்போடும் அமைதியான உள்ளத்தோடும் இறைவனை தியானித்து எதைத் தொட்டாலும் நம் கைகள் புனிதமான பலனை அருளுகின்றன.
இறை சக்தியை பரப்புவதற்கு இடமாக இருப்பதால்தான் கரங்களையே பகவான் என்றார்கள். அது மட்டுமின்றி கரத்தின் ஸ்பரிசம் மங்களகரமானதால், “சிவாபிமர்ஸன:” என்கிறது வேதமந்திரம்.
அண்மையில் இந்த சனாதன வேத சிந்தனையே மீண்டும் வெளிநாடுகளிலிருந்து Healing Touch என்ற பெயரோடு வந்துள்ளது. நாமும் அந்த நவீன முறையின் பின்னால் செல்கிறோம்.
பவித்திரமான ஸ்பரிசம் என்று அழைக்கப்படும் சக்தியும் சாதனையும் வேத கலாச்சாரத்தில் தெளிவாகவும் திடமாகவும் கூறப்பட்டுள்ளன. இந்த முறையை நம் நித்திய அனுஷ்டானத்தில் அமைத்து அளித்துள்ளனர் நம் முன்னோர். ஆனால் நம் சம்பிரதாயங்கள் மீதும் தர்மத்தின் மீதும் சரியான புரிதலை இழந்த நாம் நம் சக்தியை அறியாமல் இருக்கிறோம்.
“பைஷஜ்ய வேத” மான (மருத்துவ தொடர்பான) அதர்வண வேதத்தில் உள்ள இந்த சித்தாந்தம் ஸ்பரிசத்தின் முக்கியமான வைத்திய முறையை விளக்குகிறது.
தினசரி ஒரு வேத வாக்கியம்: 67. கைகளிலே தெய்வீகம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.