– Advertisements –
இன்று நடராஜர் ஆனி மாத திருமஞ்சனத்தை முன்னிட்டு திருக்குற்றாலம் சித்திர சபை மற்றும் நெல்லை தாமிர சபை நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.
தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வே திருமஞ்சனம். ஆனியில், உத்திர நட்சத்திரத்தில் ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கு செய்விக்கப் பெறும் அபிஷேக நிகழ்வே, ஆனித் திருமஞ்சன விழாவென சிறப்பிக்கப் படுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு பெருமானுக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.
ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள தாமிர சபையில் காலை முதலே சிறப்பு யாகங்களும் நடராஜருக்கான சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. திருக்குற்றாலம் சித்திர சபையிலும் அதே போல் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
– Advertisements –
சிதம்பரம், திருவாவடுதுறை உள்ளிட்ட நடராஜப் பெருமான் சிறப்புற விளங்கும் சிவத் தலங்களில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனி திருமஞ்சன விழா மிகப் புகழ்பெற்றது. நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான இரண்டு விழாக்களில் ஒன்று மார்கழி திருவாதிரை. மற்றது ஆனி உத்திர திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். ஆனி – மார்கழி மாதங்களில் மட்டுமே நடராஜர் வீதி உலா வருவார்.
இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் நடைபெறுகிறது. இங்கே ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம். பகல் ஒரு மணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். ஆனி திருமஞ்சன நாளுக்கு முந்தைய நாள் நடராஜர் தேரில் எழுந்தருள்கிறார்.
ஆனி உத்திர நாளில்தான் சிவபெருமான், திருவாசகம் தந்த மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் உபதேசம் செய்தார். எனவே இந்த நாளின் வைகறைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடைற்றது. ஆவுடையார்கோயிலில், இந்த ஆனி திருமஞ்சன விழா முக்கியத் திருவிழா. மாணிக்கவாசகர் இந்நன்னாளில் வெள்ளித் தேரில் மாட வீதி உலா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
– Advertisements –