அண்ணா என் உடைமைப் பொருள் (39): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை, தீண்டத் தகாதவர்கள்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0af8de0aea3e0aebe-e0ae8ee0aea9e0af8d-e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d-e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-39.jpg" style="display: block; margin: 1em auto">

anna en udaimaiporul 2 - 6
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 40
– வேதா டி.ஸ்ரீதரன் –

பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை, தீண்டத் தகாதவர்கள் – 1

பெரியவா தீண்டாமையை ஆதரித்தார், தீண்டத்தகாதவர்கள் என்று ஒருசாராரை வெறுத்து ஒதுக்கினார் என்பது பெரியவா பற்றி முன் வைக்கப்படும் முக்கிய விமர்சனம்.

இத்தகைய விமர்சனத்தை முன் வைப்பவர்கள் யார் யார் என்பது எனக்குத் தெரியும். அவர்களது அறிவுத்தரம், ஒழுக்கம், சமுதாய அக்கறை முதலியவை எத்தகையது என்பதும் எனக்குத் தெரியும். எனவே, அவர்களையோ, அவர்களது கருத்துகளையோ ஒரு பொருட்டாகக் கருதுவது, அல்லது, விமர்சனம் என்ற பெயரில் அவர்களால் முன் வைக்கப்படும் உளறல்களுக்கு பதில் சொல்வது முதலிய முட்டாள்தனமான வேலைகளில் நான் இறங்க விரும்பவில்லை.

அதேநேரத்தில், இந்தப் பகுதியைப் படிப்பதால் ஜாதி, சம்பிரதாயம், ஆசாரம் முதலிய விஷயங்களில் ஆஸ்திகர்களுக்குத் தெளிவு ஏற்படும் என்றும் நான் நம்பவில்லை. அப்படியே இருந்தாலும், ஆசாரம், சம்பிரதாயம் முதலிய விஷயங்களைப் பற்றி யாருக்கும் தெளிவு ஏற்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக நான் நினைக்கவும் இல்லை.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக, ஆசாரம் பற்றிப் பேசும் தகுதி எனக்கு இருப்பதாக நான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனாலும், இந்த விஷயங்களில் பெரியவாளின் பார்வை பற்றி விரிவாகவே எழுத விரும்புகிறேன். காரணம், எனது ஆர்எஸ்எஸ் பின்னணி.

முப்பது வருடங்களுக்கு முன்பாக நான் எழுமலை கிராமத்தில் தங்கி சங்கப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்தப் பகுதியில் ஒரு பெரிய மத மாற்ற முயற்சி நடந்தது. ராமகிருஷ்ண தபோவனம், ஆர்எஸ்எஸ் ஆகிய இரு பெரும் ஸ்தாபனங்களின் துரித நடவடிக்கைகளால் அந்த மத மாற்ற முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

உத்தப்புரம் ஜாதிக் கலவரத்தை ஒருவரும் மறந்திருக்க முடியாது. எழுமலையை ஒட்டி இருக்கும் அந்த கிராமத்தில் ஏற்பட்ட இந்த ஜாதி மோதல் சுமார் முப்பது ஆண்டுகள் நீடித்தது. நான் எழுமலையில் இருந்த போது தான் அந்தப் பிரச்சினை ஆரம்பமானது.

mahaperiyava2 - 3

என் மனதில் இந்த இரண்டு சம்பவங்களின் தாக்கம் மிக அதிகம்.

ஹிந்து சமுதாயத்தின் மிகப் பெரிய சாபக்கேடு தீண்டாமை என்பது எனது தீர்மானமான கருத்து.

அதேநேரத்தில், நான் அண்ணாவுடன் இருந்தவன். அண்ணாவுக்கோ பெரியவா தான் சகலமும். பெரியவாளோ தீண்டாமையை ஆதரித்தவர். எனவே, தீண்டாமை குறித்த பெரியவா பார்வை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில் இயல்பாகவே எனக்கு நாட்டம் ஏற்பட்டது.

நான் தெரிந்து கொண்ட விஷயங்களையும், அவற்றின் மூலம் நான் புரிந்து கொண்ட விஷயத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.


அன்னதானம் சிவன் பற்றி அன்பர்கள் பலரும் அறிவோம். அவரது வாழ்வு ஶ்ரீமடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. அவர், மகாமகங்கள், பெரிய கும்பாபிஷேகங்கள் முதலியவற்றில் லட்சக்கணக்கான பேருக்கு அன்னதானம் பண்ணி இருக்கிறார்.

அவர் கிருஹஸ்தர் தான் என்றாலும், அவருக்கு வாரிசு கிடையாது. அவரது காலத்துக்குச் சில வருடங்கள் பின்னர் அவர்கள் குடும்பத்தின் சொத்துகள் விற்பனை செய்யப்பட்டன. அவருக்கு உரிய பங்கு என ஏதோ கொஞ்சம் பணம் கிடைத்தது. அந்தப் பணத்தை என்ன செய்வது என்பது தெரியாமல் அவரது உறவினர்கள் பெரியவாளிடம் கேட்டார்களாம்.

annadhanam sivan - 4

பெரியவா அந்தத் தொகையை ஏதோ ஹரிஜன சேவா ட்ரஸ்டுக்கு நன்கொடையாகத் தருமாறு சொன்னாராம்.

இதற்கு என்ன காரணம் என்று அண்ணாவிடம் கேட்டேன். ‘‘பெரியவா கிட்ட யாருப்பா காரணம் கேட்கறது? கண்ணை மூடிண்டு அவர் சொல்றதை செய்ய வேண்டியது தான்’’ என்று சொன்னவர், ‘‘அந்த ஜாதியைச் சேர்ந்தவா யாரோட வயித்துக்கும் அவர் போடலியோ என்னவோ. அந்தக் குறை அவருக்கு வந்துட வேண்டாம்னு பெரியவா பண்ணி இருக்கலாம்’’ என்றார்.


அன்னதானம் சிவன் பற்றி அறியாதவர்களுக்காக அவரைப் பற்றிய சிறிய அறிமுகம்:

1887-ல் அன்னதானம் சிவனின் அன்னதான கைங்கர்யம் ஆரம்பமானது. 1939-ல் அவர் மறையும் வரை தொடர்ந்தது. அவர் நடத்திய ஒவ்வொரு அன்னதானத்திலும் குறைந்தது ஒரு லட்சம் பேராவது சாப்பிட்டிருப்பார்கள். அதுபோல, தனது வாழ்நாளில் பல லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த மகா புருஷர் அவர். அவரது சமையலில், சாதத்தைக் கீழே கொட்டி, அதன் மீது சாக்கை விரித்து, சாக்கின் மீது பச்சரிசியைக் கொட்டி, அந்த அரிசியின் மீது இன்னொரு சாக்கைப் போட்டு, அதன் மீது சாதத்தைப் போடுவார்களாம். நடுவில் கொட்டப்பட்ட பச்சரிசி முழுவதுமாக வெந்து விடும்.

அன்னதானம் சிவன், பிரம்மாண்டமான சைஸ் பாத்திரங்களில் சமையல் பண்ணுவார் என்று பெரியவா சொல்வதுண்டு. ரசத்தில் கொத்தமல்லி குறைவாக இருக்கிறது என்று சிவன் சொன்னால், உடனே ஒரு முறம் கொத்தமல்லி அரைத்து ஊற்றுவார்களாம். பதார்த்தங்களில் உப்பு குறைவாக இருந்தால் ஒரு மரக்கால் உப்பு சேர்க்க வேண்டி வருமாம்.

ஃப்ரிட்ஜ் இல்லாத அந்தக் காலத்தில் குளத்தை ஃப்ரிட்ஜாகப் பயன்படுத்தியவர் அவர். அவ்வப்போது உறைய வைத்த பாலைப் பீப்பாய்களில் அடைத்து, குளத்துக்குள் போட்டு விடுவாராம். அன்னதானத்துக்கு முந்தைய தினம் இரவில் அந்தப் பீப்பாய்களில் இருக்கும் தயிரை எடுத்து மோர் ஆக்குவார்களாம்.

இவையெல்லாம் பெரிய அதிசயம் அல்ல. லட்ச லட்சம் வயிறுகளை நிறைத்த அந்த மாமனிதர் அந்த அன்னதானச் சாப்பாட்டில் ஒரு கவளம் உணவைக் கூட அருந்தியதில்லை. அன்னதானம் முடிந்ததும் ஏதாவது வீட்டு வாசலில் நின்று ஒரு பிடி சோற்றைப் பிச்சையாக ஏற்பாராம்.


‘‘நான் பிராமணாளைத் திட்டலை. பிராமணீயத்தைத் தான் எதிர்க்கறேன்-னு …………. சொல்றானாமே!’’ என்று ஓர் அன்பர் பெரியவாளிடம் கேட்டாராம். அதற்குப் பெரியவா, ‘‘நான் பிராமணனைத் தான் திட்டறேன்!’’ என்று சொன்னாராம். இதை என்னிடம் சொல்லும் போது அண்ணா, ‘‘பிராமணனைத் தான்!’’ என்பதைப் பெரியவா சொன்னது போலவே மிகவும் அழுத்தி உச்சரித்தார்.

எனக்குத் தெரிந்த வரை, பெரியவா ஒரு ஜாதியின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லித் திட்டியது, அனேகமாக, பிராமண ஜாதியை மட்டுமே! இதற்குக் காரணம், அனைத்து ஜாதியினருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஜாதி இப்படி வீணாய்ப் போய் விட்டதே என்ற ஆதங்கம் மட்டுமல்ல, பிராமணன் தனது யக்ஞ கர்மாவைத் துறந்ததால், யாகத்துக்காகவே உருவான பசுக்களின் ஜன்மாவும் வீணாகி வருகிறதே என்பது பெரியவாளின் பெரிய ஆதங்கம். இது தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதியில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.

மேலும், ஒரு குடும்பத்தின் ஓரிரு தலைமுறைகள் காயத்ரியுடன் தொடர்பு இல்லாமல் போயிருந்தால் குற்றமில்லை. ஆனால், தொடர்ச்சியாக ஆறு தலைமுறைகள் காயத்ரி ஜபம் விடுபட்டுப் போனால் அந்த வம்சத்தினரின் பிராமணத் தன்மை அடியோடு போய் விடும் என்பதும் பெரியவாளின் ஆதங்கத்துக்கான ஒரு முக்கியக் காரணம். இதை அவர் ஏராளமான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.


ஶ்ரீமடத்து அன்பர்கள் மத்தியில் பிரபலமான ஒரு சம்பவம்.

ஒருமுறை வட இந்திய பக்தர் ஒருவர் மடத்துக்கு நிறைய காணிக்கைப் பொருட்கள் சமர்ப்பித்தார். அவற்றில் விலை உயர்ந்த காஃபி பாக்கெட்டுகளும் இருந்தன. (காஃபி குடிக்கக் கூடாது என்பதைப் பெரிதும் வலியுறுத்துபவர் பெரியவா என்பதை அறிவோம். காஃபி, டீ முதலியவை ஆசாரக் கேடு என்பதே இதற்கு அவர் சொல்லும் காரணம்.)

அந்த அன்பர் மிகுந்த பக்தியுடன் சமர்ப்பித்த அந்த காஃபி பாக்கெட்டுகளை, பெரியவா, மடத்தின் பிராமணர் அல்லாத ஊழியர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தாராம்.

பெரியவா ஜீவிதத்தில் இதுபோன்ற நிறைய உதாரணங்கள் உண்டு. பிராமணர் அல்லாதோரிடம் அவர் எதிர்பார்க்கும் ஆசாரங்களும், பிராமண அன்பர்களிடம் எதிர்பார்த்த ஆசாரங்களும் வேறு வேறானவை.


ஒருமுறை பெரியவா, அண்ணாவிடம், ‘‘முன்பெல்லாம்’’ என்று குறிப்பிட்டுக் கடந்த கால சமுதாயம் பற்றி இரண்டு கேள்விகளை எழுப்பினாராம்.

அனேகமாக, அவர் சுட்டிக் காட்டியது சுமார் 100 வருடங்களுக்கு முந்தைய சமுதாயச் சூழலாக இருக்கலாம்.

anna alias ra ganapathy14 - 5

‘‘முன்பெல்லாம், யாராவது ஒருவர் தப்புப் பண்ணிட்டா, இவன் என் ஜாதிக்காரன், அதனால இவனை நான் சப்போர்ட் பண்ணுவேன் அப்படீன்னு அவன் ஜாதிக்காரா யாராவது முன்வருவார்களா?’’

‘‘இழிவான ஜாதி, எல்லாரும் ஒதுக்கி வச்சுட்டா அப்பிடீன்னு சொல்றாளே, அந்த ஜாதியைச் சேர்ந்தவா யாரையாவது அந்த ஜாதியிலேர்ந்து ஒதுக்கி வச்சிட்டா, அவா, ஆகா, நம்மோட இழிவு போயிடுத்துன்னு நினைச்சு சந்தோஷப்பட்டாளா?’’

இதைத் தொடர்ந்து, பெரியவா, ‘‘ஜாதி என்றால் என்ன? மொத்த ஜன சமுதாயத்தில அதன் பங்களிப்பு என்ன என்று யாரும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை’’ என்று குறிப்பிட்டாராம்.


இந்தத் தொடர் எழுத ஆரம்பித்த பின்னர் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. 1950களில் பவன்ஸ் ஜர்னல் பத்திரிகையில் பெரியவா எழுதி இருந்த கட்டுரை அதில் காணப்பட்டது. அதில் இருந்து ஒரு பத்தியைக் கீழே தருகிறேன்.

… The Sudra did sternly refuse to allow a Brahmana or a Kshatriya to live in his house and a Chandala would stubbornly resist a Brahmin’s entrance into his quarters and if a Brahmin happened to enter his locality even accidentally, the Chandalas of the locality would go through some purificatory ceremonies. This indicates that the responsibility for the preservation of the respective disciplinary acharas of any caste did not lie with the concerned caste alone but was common to all.

(இதன் பொருள் –சூத்திரர்கள், தங்கள் வீட்டுக்குள் ஒரு பிராமணனையோ அல்லது க்ஷத்ரியனையோ அனுமதிக்கவே இல்லை. தங்கள் பகுதிக்குள் பிராமணர்கள் வருவதை சண்டாளர்கள் கடுமையாக எதிர்த்து நின்றார்கள். சண்டாளர்களின் வசிப்பிடத்துக்குள் யதேச்சையாக யாராவது பிராமணர்கள் நுழைந்து விட்டால், சண்டாள ஜாதியைச் சேர்ந்தவர்கள் சில சுத்தி சடங்குகளை மேற்கொள்வதுண்டு. ஒவ்வொரு ஜாதியின் ஆசாரங்களைக் கடைப்பிடிப்பது அந்தந்த ஜாதியினரின் பொறுப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் அந்தப் பொறுப்பு இருந்தது என்பதையே இது காட்டுகிறது.)

அண்ணா என் உடைமைப் பொருள் (39): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை, தீண்டத் தகாதவர்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply